murasoli thalayangam
"நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: மக்களைக் காக்கத்தான் அரசு.. காவு வாங்க அல்ல"- ஒன்றிய அரசைச் சாடிய முரசொலி!
முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.8, 2021) தலையங்கம் வருமாறு:
நாகாலாந்து மாநிலத்தில் நடந்துள்ள நாசகாரச் செயலை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறது. அப்பாவிகளைக் கொன்று விட்டு ஒன்றிய அரசும், இராணுவமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்கும் காட்சி, மிகப் பெரிய தலைகுனிவுக் காட்சி ஆகும்!
“தீவிரவாதிகளின் நடமாட்டம் தொடர்பாக உளவாளிகள் அளித்த தகவலின் பேரில் நாகாலாந்தின் மோன் மாவட்டம் திரு பகுதியில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. இதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும். விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இராணுவத் தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்” என்று இராணுவத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?
“நாகாலாந்தில் நிகழ்ந்த சம்பவத்துக்காக அரசு வருத்தம் தெரிவிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. அங்கு கடந்த 4-ஆம் தேதி சோதனை நடத்த ராணுவத்தினர் முடிவெடுத்து அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். அந்த வழியாக வந்த வாகனத்தைச் சோதனையிடுவதற்காக அவர்கள் நிறுத்தக் கூறியுள்ளனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் வேகமாகச் செல்ல முயன்றுள்ளது. அந்த வாகனத்தில் தீவிரவாதிகள் தான் உள்ளனர் என நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். அதற்குப் பிறகுதான் தவறுதலாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அவர்கள் அறிந்தனர். துப்பாக்கிச் சூடு காரணமாக வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்த உள்ளூர் பொது மக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பல வீரர்கள் காயமடைந் தனர். தற்காப்புக்காகவும், கூட்டத்தைக்கலைப் பதற்காகவும் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். அஸாம் ரைஃபிள்ஸ் நிலை மீது உள்ளூர் பொதுமக்கள் மாலையில் தாக்குதல் நடத்தியதால் ஒருவர் உயிரிழந்தார். அங்கு ராணுவத்தினர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
எதிர்காலத்தில் தீவிரவாதிகளைத் தேடிச் செல்லும் போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் முடிவெடுத்துள்ளன” என்று சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அப்பாவி மக்களை தீவிரவாதிகள் என நினைத்துச் சுட்டதை உள்துறை அமைச்சர் தனது அறிக்கையில் பூசி மெழுகி இருந்தார். அதனால் தான் இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகளால் ஏற்க முடியவில்லை.
திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள், நாட்டு மக்களின் கருத்தை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். “நாட்டின் எல்லைகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுத்து வருகின்றனர். ஆனால் நாகாலாந்தில் அதே பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், சொந்த நாட்டுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். இது கடும் கண்டனத்திற்குரியது.இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யப்பட வேண்டும். இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்”என்று நாடாளுமன்றத்தில் முழங்கி இருக்கிறார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை, அவர்களைக் கைது செய்வதை, அவர்களது செயல்பாடுகளை முடக்குவதை நாம் குறைகூற வில்லை. ஆனால் தீவிரவாதிகள் மீதான நடவடிக்கை என்ற பெயரால் அப்பாவி களைக் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றதை யாராலும் நியாயப்படுத்த முடியாது. வாகனச் சோதனையில் நிற்காதவர்கள் அனைவரும் தீவிரவாதிகளாக நினைத்து சுடப்படுவார்களேயானால், எல்லாச் சாலைகளிலும் ரத்தம்தான் ஓடும்.
நாகாலாந்தில் உள்ள மோன் நகரில் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (காப்வாங்) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினர் இருந்த போது சுரங்கத் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். சுரங்கத் தொழிலாளர்கள் வந்த வாகனம் தான் தீவிரவாதிகள் வாகனமாக நினைத்து சுடப்பட்டுள்ளது. இத்தகைய எல்லையற்ற அதிகாரம் அந்த பாதுகாப்புப் படைக்கு தரப்பட்டுள்ளதா என்றே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
மிக நீண்டகாலமாக ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் என்ற சட்டம் அங்கு அமலில் உள்ளது. இது பாதுகாப்புப் படையினருக்கு கட்டற்ற அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. இதுதான் இதற்குக் காரணமாக இருக்கிறது.
நாகாலாந்து மாநில அரசு, இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 பேர்கொண்ட சிறப்புப்புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது. இராணுவத்தின் 21-ஆவது பாரா சிறப்புப் படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302(கொலை), 307 (கொலை முயற்சி) 34 (குற்றச் செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் இறுதி அஞ்சலியில் நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெஃபியு ரியோ பங்கேற்றார். “கைதாணை இல்லாமல் பொது மக்களைக் கைது செய்யவும், அவர்களின் வீடுகளில் சோதனையிடவும், அவர்களைக் கொல்லவும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம், ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அத்துமீறும் ராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், நாகாலாந்து அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவை எல்லாம் அடுத்தடுத்த காலத்தில் என்ன மாதிரியான மேல் நடவடிக்கையாக மாறும் என்று சொல்ல முடியாது. இவை சம்பவக் காலக் கண்துடைப்புகளாக முடிந்துவிடக் கூடாது. வருத்தம் தெரிவிப்பதாலோ,மன்னிப்புக் கேட்ப தாலோ உயிர்களை மீட்க முடியாது. சட்டம், மக்களைக் காக்கவே தவிர, காவு வாங்குவதற்காக அல்ல!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!