murasoli thalayangam
மாநிலங்களின் நீர் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய அரசு.. இது சர்வாதிகார எண்ணத்தின் வெளிப்பாடு:முரசொலி தாக்கு!
ஜி.எஸ்.டி. வரிகள் மூலமாக மாநிலங்களின் நிதி உரிமையைப் பறித்த ஒன்றிய அரசு, இப்போது நீர் உரிமையைப் பறிப்பதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அனைத்து அநியாயங்களையும் சட்டரீதியாகவே செய்வதுதான் பா.ஜ.க.வின் பாணியாக உள்ளது.
அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரால் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் அதனை நிறைவேற்றி விட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள் மாநிலங்களவையில். மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா பேசும் போது, “அணை பாதுகாப்பு மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல்முறை, பராமரிப்பு ஆகியவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசு கொண்டு வரும் பெரும்பாலான மசோதாக்கள், மாநில உரிமைகளை மீறுவதாக உள்ளன. இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளையும் பறிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களை அத்துமீறிப் பறிக்க முடியாது”என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “இந்த அணை பாதுகாப்பு மசோதா இந்திய அரசியலமைப்பை மீறும் செயல்” என்று குறிப்பிட்டார். “மாநிலங்களிடம் இருந்து எவ்வித ஒப்புதலையும் பெறாமல் ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “இச்சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் அது தமிழகத்திற்குப் பேரபாயத்தை ஏற்படுத்தும். இந்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது” என்றும் எச்சரித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் மதிக்கக்கூடியதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இல்லை!
“அணை பாதுகாப்பு மசோதா” என்பது, 2010ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டதாக சமாதானம் சொல்கிறார்கள். அதற்கு உரிய விளக்கத்தை காங்கிரசு உறுப்பினரே தெரிவித்துவிட்டார். மாநிலங்களவை காங்கிரசு உறுப்பினர் சக்திசிங் கோஹில் பேசும் போது, “அணை பாதுகாப்பு மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது” என்று விமர்சித்தார்.
“இந்த மசோதா முதலில் கடந்த 2010இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டது என அவர்கள் கூறுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அப்போது காங்கிரஸ் முன்மொழிந்த சட்டத்தில் மாநில சட்டமன்றத்தில் 3இல் 2 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இச்சட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்தப் பகுதி நீக்கப்பட்டுள்ளது”
- என்று விளக்கம் அளித்துள்ளார். கூட்டாட்சித் தத்துவத்துக்கு குழி பறிக்கும் வகையில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள்.
இந்தியாவின் அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது. அணைகள் எந்த மாநிலத்தின் உரிமைகளாக இதுவரை இருந்ததோ அதைப் பறிக்கும் காரியத்தைதான் இந்தச் சட்டம் செய்கிறது. மாநிலங்களிடம் இருக்கும் அனைத்து உரிமைகளையும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்துக்கு தூக்கிக் கொடுக்கிறது இந்தச் சட்டம்.
மாநில வாரியாக அமைக்கப்படும் அணை பாதுகாப்புக் குழுவிலும் ஒன்றிய அரசின் சார்பில் இருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரையும் நியமிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின், நீர்வள ஆணையம் (central water commission authority) மற்றும் மத்திய மின்சார ஆணையம் (central electricity authority) ஆகியோரிடத்தில்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர்தான் தேசிய அணைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கப் போகிறார். இதைவிட ஆபத்து வேறு இருக்க முடியாது. அரசியல் ரீதியாகத்தான் அவர்களது செயல்பாடுகள் இருக்கும்.
ஒன்றியத்துக்கு வேண்டிய மாநிலம் என்றால் கேள்வி கேட்க மாட்டார்கள். வேண்டாத மாநிலம் என்றால், விழுந்து விழுந்து கேள்வி கேட்பார்கள். இவற்றைத்தான் நடைமுறையில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இப்போதாவது மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட முயற்சிகள் செய்யலாம். அனைத்தும் ஒன்றியத்துக்குப் போய் விட்டால் அவர்கள் நினைத்தால் மட்டும்தான் காரியம் நடக்கும்.
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகள் கேரளாவில் அமைந்துள்ளன. இருப்பினும் இந்த அணைகளை இயக்கி, பராமரிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்குத் தான் உள்ளது. இனி இவை ஒன்றிய ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குப் போனால் தமிழகத்தின் உரிமையைக் காக்க நாம் காத்திருக்க வேண்டும். அவர்களது அரசியலுக்குத் தகுந்த மாதிரி முடிவுகள் எடுப்பார்கள். தமிழ்நாடு - கேரளா ஆகிய இரண்டும் அவர்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள். இந்தப் பிரச்சினை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று நினைத்து சும்மா இருந்துவிட்டால் என்ன ஆகும்?
இவர்களுக்கு அணையைப் பாதுகாப்பது குறித்த அக்கறை எதுவும் கிடையாது. நிலத்தடி நீர் மேலாண்மைச் சட்டம், நீர்வழிப் பாதைச் சட்டம், அணைகள் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றின் மூலம் மாநில உரிமைகளை நொறுக்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, டெல்லியில் அதிகாரத்தைக் குவிக்கும் நோக்கம் மட்டுமே இதில் இருக்கிறது. இது பிற்காலத்தில் விமான நிலையங்களை விற்பதைப் போல, இரயில் நிலையங்களை விற்பதைப் போல, அணைக்கட்டுகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்ற அச்சம் அதிகமாக இருக்கிறது.
உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில்தான் அணைகளின் எண்ணிக்கை அதிகம். 5,254 பெரிய அணைகள் ஏற்கனவே உள்ள நிலையில், மேலும் 447 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது உள்ள அணைகளில் 75 சதவீத அணைகள் 25 ஆண்டுகள் பழமையானவை. 164 அணைகள் 100 வருடத்திற்கு மேல் பழமை ஆனவை. இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களுக்கு உண்டு. நீரைப் பயன்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் அதன் தேவையின் அளவு முழுமையாகத் தெரியும். அதனை ஒன்றிய அரசால் உணர முடியாது!
மாநில அரசுகளுக்கோ அல்லது தனி நபர்களுக்கோ, தன்னார்வலர்களுக்கோ, நாட்டின் குடிமக்களுக்கோ இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதற்கான எந்த உரிமையும் கிடையாது என்பதே; சர்வாதிகார எண்ணத்தின் வெளிப்பாடுதான்!
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!