murasoli thalayangam

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை இந்தியாவே உற்றுக் கவனிக்கிறது": முரசொலி புகழாரம்!

முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.1, 2021) தலையங்கம் வருமாறு:

இந்தியாவே உற்றுக் கவனிக்கும் ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் ‘இந்தியா டுடே' எடுத்த கருத்துக் கணிப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது!

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆன மே, சூன், சூலை மாதங்களில் எடுத்த கொரோனா தடுப்புப் பணிகளைப் பார்த்து சில வட இந்திய ஊடகங்கள், இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சர், நம்பர் ஒன் முதலமைச்சர் என்று பாராட்டுத் தெரிவித்தன. அப்போது முதலமைச்சர் அவர்கள், “நான் நம்பர் ஒன் முதலமைச்சர் என்று சொல்லப்படுவதை விட, தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சொல்லப்படுவதுதான் எனக்குப் பெருமை” என்று கூறினார்கள். அந்த வகையில் இப்போது முதலிடத்தை தமிழ்நாடு எட்டி இருக்கிறது.

ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்து ‘இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. அதன்படி 2021- ஆம் ஆண்டுக்கான ஆய்வில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக‘இந்தியா டுடே' தெரிவித்துள்ளது.

21.5 லட்சம் கோடி ரூபாய் மாநில உற்பத்தி வளர்ச்சியுடன், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாகத் திகழ்வதாகக் கூறியுள்ள ‘இந்தியா டுடே', தற்போது இந்த இலக்கை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக சர்வதேச நிபுணர்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்து, அதில் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பொருளாதார பாதிப்பையும் தாங்கும் வகையில் அத்தகைய துறைகளை வலுப்படுத்தும் முயற்சியிலும் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில் 83 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் 49 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதையும் ‘இந்தியாடுடே' சுட்டிக் காட்டியுள்ளது.

விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களும் அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. நீர் மேலாண்மை, மக்கள் துணையுடன் மழை நீர் சேமிப்புத்திட்டங்கள், நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகளிலிருந்து ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பது ஆகிய பணிகளும் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருவதாக அந்த வார இதழ் பாராட்டியுள்ளது.

பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பணியில் சில சவால்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ள ‘இந்தியா டுடே', கடந்த ஆட்சியில் 20.7 லட்சம் குடும்பத்தினருக்கு தலா 2.6 லட்சம் ரூபாய் கடன் வைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு என்பது ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றமே என்றும், அத்தகைய சமூக நீதிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட திராவிடக் கொள்கையும் அதுவேயாகும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதையும் ‘இந்தியா டுடே' வார இதழ் கோடிட்டுக் காட்டியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி வாயிலாக ‘தமிழகம் மீட்போம்' என்ற சிறப்புக் கூட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டினார்கள். அப்போது திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் இலக்கணத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்.

“அனைத்து அரசுகளையும் இரண்டு விதமாகப் பிரிப்பார்கள். ஒன்று கொள்கை சார்ந்த அரசு! மற்றொன்று சேவை செய்யும் அரசு!

நிறையக் கொள்கை பேசும் அரசு, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைச் செய்வதில் சுணக்கம் காட்டக் கூடும்.

மக்களுக்குச் சலுகைகள் தருவதில் அக்கறை செலுத்தும் ஒரு அரசாங்கம், தனது இயக்கத்தின் லட்சியங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் இருக்கக் கூடும். ஆனால் ஒரு அரசு கொள்கை சார்ந்த அரசாகவும் - மக்களுக்குப் பல்வேறு சேவைகளைச் செய்யும் அரசாகவும் இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். திராவிட இயக்கத்தின் எந்தக் கொள்கையையும் விட்டுத் தர மாட்டோம் -அதேநேரத்தில் கொள்கையை மட்டும் பேசிக் கொண்டு இருந்துவிட மாட்டோம். மக்களுக்கு அன்றாடம் தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம். இதுதான் அண்ணா வடிவமைத்த பாதை. கலைஞர் காட்டிய பாதை” என்று குறிப்பிட்டார்கள். தேர்தல் முடிந்த பிறகு - முதலமைச்சராக ஆனபிறகு அதே நோக்கத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

கொள்கை அரசையும் - மக்கள் நல சேவை அரசையும் - ஒருசேர நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

‘நீட்' தேர்வில் இருந்து விலக்குக் கோரும் தீர்மானம், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், தமிழுக்கு முன்னுரிமை, வேலை வாய்ப்பில் தமிழர்க்கு முன்னுரிமை போன்ற எத்தனையோ கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.

இன்னொரு பக்கத்தில் பல்லாயிரம் கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்கிறார். மீண்டும் தகவல் தொழில் நுட்பப் புரட்சி தொடங்கி இருக்கிறது.

மற்றொரு பக்கத்தில் ஏழை எளிய, மத்திய தர வர்க்க மனிதர்களை நாள் தோறும் சென்று சந்தித்துக் கொண்டு இருக்கிறார். இருநூறு ஆண்டு கால மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தினந்தோறும் சந்திக்கிறார்.மணிக்கணக்கில் அவர்களோடு இருக்கிறார். தண்ணீரில் போய், அவர்களது கண்ணீரைக் கவனிக்கிறார்.

இலங்கைத் தமிழர்க்கு உதவிகள், அர்ச்சகர்களுக்கு உதவிகள் என அனைத்து மக்களும் கவனிக்கப்படுகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை என்பது உச்சகட்டப் பாராட்டைப் பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன் பெண் பிள்ளைகளுக்காக அவர் பேசிய பேச்சு ‘தாயுமானவராக' அவரை அடையாளம் காட்டி விட்டது.

சொல்லுவது யாருக்கும் எளிது, சொல்லியபடி செயல்படுவதுதான் எல்லோராலும் முடியாதது என்றார் அய்யன் வள்ளுவர் - சொன்னார். சொன்னபடி ஆட்சி நடத்துகிறார். அதனாலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவே உற்றுக் கவனிக்கிறது!

Also Read: “ஜனநாயகத்துக்கு யாரால் ஆபத்து..? கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள் பிரதமரே” : முரசொலி கடும் தாக்கு!