murasoli thalayangam
“ஜனநாயகத்துக்கு யாரால் ஆபத்து..? கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள் பிரதமரே” : முரசொலி கடும் தாக்கு!
முரசொலி நாளேட்டின் இன்றைய (நவ.29, 2021) தலையங்கம் வருமாறு:
‘குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்கு ஆபத்து’ என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார். ஜனநாயகத்தைப் பற்றி அவர் பேசுவதுதான் நகைப்புக்குரியது.
அதுவும் எங்கே பேசி இருக்கிறார் தெரியுமா? அரசமைப்புச் சட்டத்தை நினைவுகூரும் நாள் விழாவில் பேசும் போது சொல்லி இருக்கிறார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பேசும் போது இதனைச் சொல்லிஇருக்கிறார்.
ஆட்சியலைப் பற்றி, அரசின் அமைப்பைப் பற்றி, அரசு இயலைப்பற்றி, நிர்வாகவியலைப் பற்றி, நாடாளுமன்ற இயலைப் பற்றிப் பேச வேண்டிய இடத்தில் அரசியலைப் பற்றி, அதுவும் கட்சி அரசியலைப் பற்றி பேசிஅந்த நிகழ்ச்சியின் தன்மையையே மாற்றி இருக்கிறார். அதாவது அரசியலமைப்புச் சட்டத்தை நினைவு கூரும் நாளையே சொந்த அரசியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்.
இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவருக்கு ஜவஹர்லால் நேருவின் பிம்பம் மிரட்டுவதாக இருக்கிறது. காங்கிரசு கட்சியை இரண்டாவது முறையாகத் தோற்கடித்துவிட்டு, அரியணையில் உட்கார்ந்த பிறகும் காங்கிரசு கட்சி அவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இதுதான் அவரது உரையில் தெரிகிறதே தவிர, ஜனநாயகத்தின் மீதான அக்கறை அல்ல!
இன்னும் சொன்னால், திசை திருப்புவதற்காக இதனைப் பேசி இருக்கிறார் என்று தான் கருத வேண்டி இருக்கிறது. இந்த இந்திய நாட்டின் சரிவடைந்த பொருளாதாரத்துக்கு பதில் சொல்லாமல், முதல் முறை பிரதமராக வருவதற்கு முன்னால் அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளைப் பற்றியும் நிறைவேற்றாமல் போனதற்கு விளக்கம் சொல்லாமல், இந்தியாவில் இருந்து வெளியேறிய கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன் என்பதற்கு பதில் சொல்லாமல், ஆளுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்பதற்கு பதில் சொல்லாமல், ஒரு ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்பதற்கு பதில் சொல்லாமல், விவசாயிகளின் வருமானம் எல்லாம் இரண்டு மடங்கு ஆகும் என்பதற்கு பதில் சொல்லாமல் - இருப்பதற்காக - ‘குடும்ப அரசியல்’ என்று பேசி தனது அரசியலை நடத்தி இருக்கிறார் பிரதமர்.
ஜனநாயகத்துக்கு உண்மையான எதிரி என்பது சர்வாதிகாரம். அதிகாரக்குவியல். அனைத்தும் தானே என்பது. அனைத்தும் ஒருவருக்குள் அடக்கம் என்பது. நான் சொன்னதே சரி என்பது. அதுதான் இன்றைய பா.ஜ.க. ஆட்சி. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே சட்டம், ஒரே உணவு - என்பது ஒரே கட்சியாகவும் ஒரே நபராகவும் ரசாயன மாற்றம் செய்யப்படுகிறது அல்லவா, அதுதான் ஜனநாயகத்துக்கான பேராபத்து.
‘ஜனநாயகம் என்ற சொல்லே அதிகமாக குழம்பிவிட்டது’ என்று எழுதினார் உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென். அவர் ஜனநாயகத்துக்கு சொன்ன இலக்கணம் என்பது, ‘வாதத்தினால் ஆன அரசாங்கம்’ என்பதுதான். ‘பலரால் கலந்துரையாடல்செய்யப்பட்டதாக ஒரு முடிவு இருக்க வேண்டும்’ என்று சொன்னார். மூன்று வேளாண் சட்டங்கள் என்ற ஒரு உதாரணம் போதாதா? விவசாய சங்கங்களுடன் ஒரு முறையாவது கலந்து பேசப்பட்டதா? ஓராண்டுகாலம் போராடி, 700 பேர் செத்த பிறகு அந்தச் சட்டத்தை திரும்பப்பெற்றுக் கொள்வதாக அறிவிக்கும் ஒரு அரசாங்கம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசலாமா?
விவசாயிகளைக் கலந்துரையாடாமல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை போராடி விவசாயிகள் திரும்பப் பெற வைத்தார்கள் அல்லவா? அதுதான் ஜனநாயகம்!
“எதிர்ப்பவர்களை சிறையில் தூக்கிப் போட்டோ - அல்லது வேட்டையாடித் துன்புறுத்தியோ பழகியிருந்த அரசை எதிர்க்க முடியுமென்ற உணர்வை பிற பகுதிகளுக்கும் இப்போராட்டம் கொண்டு சென்றிருக்கிறது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் வெற்றி” என்று இந்தியப் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் பி.சாய்நாத் எழுதி இருக்கிறார். “இந்திய விவசாயிகளே! நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதுகுறித்து உன்னதப் பெருமிதம் கொள்ளுங்கள்” என்று உலகப் புகழ் பெற்ற தத்துவ ஆசிரியர் நோம் சாம்ஸ்கி எழுதி இருக்கிறார். எதேச்சதிகார மனோபாவத்துக்கு ஜனநாயக சக்திகள் பாடம் நடத்தியதன் படிப்பினை இது.
அதே கூட்டத்தில் கருத்துச் சுதந்திரத்தைக் கேள்வி கேட்டுள்ளார் பிரதமர். “ஒரு தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்க இப்போது சுற்றுச்சூழல் கவலைகள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில், நாம் தாவரங்களிலும், மரங்களிலும் கடவுளைப் பார்க்கிறோம், தாய்நாட்டையும் கடவுளாகப் பார்க்கிறோம். இந்த நாட்டிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விரிவுரைகள் வழங்கப்படுகின்றன. ... ... வருத்தமாக இருக்கிறது. தேசத்தின் விருப்பங்களைப் புரிந்து கொள்ளாமல், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசத்தின்வளர்ச்சியைத் தடுக்கும் இதுபோன்ற மனிதர்கள் நம் நாட்டிலும் உள்ளனர்,” என்று கூறி இருக்கிறார். கருத்துச் சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய மக்கள் உரிமை ஆகும். அதற்கு எதிரான குரல், அரசமைப்புச் சட்ட நாளிலேயே ஒலித்திருக்கிறது.
“நீதித்துறையும் நிர்வாகமும் அரசியலமைப் பிலிருந்து பிறந்தது. எனவே, நாங்கள் இரட்டையர்கள், நாங்கள் வித்தியாசமாக இருந்தாலும், நாங்கள் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள். அதிகாரப் பிரிவினையில், இரு உறுப்புகளும் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட்டு, முன்னோக்கிச் செல்லும் பாதையை வகுக்க வேண்டும்” என்கிறார். நீதித்துறையும், அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்றமும் சுதந்திரமாக இயங்குவதன் மூலமாகத்தான் நாட்டில் ஓரளவாவது ஜனநாயகம் நின்று நிலைபெறும். ஆனால், இரண்டும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்பதே நீதி நெறிமுறைகளுக்கு முரணானது.
சில வாரங்களுக்கு முன், ‘one nation - one legislative platform' என்று கூறியவரும் அவர்தான். இப்படி வரிசையாக பேசிவரும் அனைத்துமே அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானது. சமத்துவம், சமூகநீதி, மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகள் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அதைப் பற்றிப் பேசாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ‘குடும்பம்’ பற்றி பேசுவது குழப்ப அரசியல் மட்டும்தான்!
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!