murasoli thalayangam
“இந்தியாவின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள்” : மோடி அரசை சாடிய ‘முரசொலி’!
இரண்டு நீதியரசர்களின் குரல்கள் இந்தியாவின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதாக அமைந்துள்ளன!
ஒருவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் மரியாதைக்குரிய என்.வி.ரமணா அவர்கள்! மற்றொருவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு மாற்றப்பட்ட மரியாதைக்குரிய சஞ்ஜிப் பானர்ஜி அவர்கள்!
இவர்கள் இருவரது கருத்தும் நீதிமன்றத்தைத் தாண்டி மக்கள் மன்றத்தின் மனச்சாட்சியைத் தட்டுவதாக இருக்கிறது. “சுதந்திரத்தோடு நீதிமன்றங்கள் இயங்க வேண்டும்!” என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தி இருக்கிறார்.
“சாதாரண மனுதாரர்கள் கடும் உழைப்பால் அல்லல்படுகின்றனர். அவர்களுக்குத் தேவைப்படுவது விரைவான அதிகச் செலவு இல்லாத நிவாரணம்தானே தவிர, பிரமாண்டமான நீதிமன்றக் கட்டடங்களோ, மிகுந்த கற்றறிந்த நல்ல உடையணிந்த வழக்கறிஞர்களோ அல்ல. துயரப்படும் மக்கள் நன்றாக உடையணிந்த கற்றறிந்த வழக்கறிஞர்களையோ, பெரிய நீதிமன்றக் கட்டடங்களையோ எதிர்பார்க்கவில்லை. சொத்துக்களை இழந்துவிடாமல் தங்கள் வேதனைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றே அவர்கள் எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்காக நாம் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு நீதி வழங்கும் அமைப்புக்குள் இருக்கிறோம் என்ற உணர்வை அவர்களிடம் மேம்படுத்த வேண்டும்” என்று சொன்ன நீதியரசர், “முதல் நடவடிக்கையாக நீதிபதிகள் துணிச்சலோடும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். தெளிவான, எளிமையான சொற்களில் சாதாரண மனுதாரர்களுக்கு புரியும் மொழியில் தங்களது தீர்ப்பை எழுத வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கிப் பிடிப்பதாக நீதிபதிகளின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். நீதிபதிகளின் துணிச்சல் என்பது சாதாரண மனிதனுக்கு நீதி வழங்குவதாக இருக்க வேண்டும் என்பதும், அது அந்த மக்களுக்கு புரியும் மொழியில் இருக்க வேண்டும் என்பதும் தலைமை நீதிபதியின் தலையாய கோரிக்கையாக இருக்கிறது. அது இந்தியா முழுமைக்கும் வழிமொழிய வேண்டிய கோரிக்கையாக இருக்கிறது.
“சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு. அதனை ஏழைகளால் பெற முடியவில்லை” என்றார் பேரறிஞர் அண்ணா.
“வாதிக்கும் பிரதிவாதிக்கும் புரியாத மொழியில் எதற்காக வாதாடுகிறீர்கள்?’’ என்று கேட்டார் தந்தை பெரியார்.
இதுதான் இன்று தலைமை நீதிபதியின் குரலாக ஒலிக்கிறது. நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி இருக்க வேண்டும் என்பதும் நீதிபதியின் உள்ளக்கிடக்கையாக இருப்பதை வரவேற்க வேண்டும்!
இதோ நீதியரசர் சஞ்ஜிப் பானர்ஜியின் குரல், மனச்சாட்சியின் குரலாக அமைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மேகாலயாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் பின்னணி குறித்து நாம் இங்கு எதுவும் சொல்லப்போவது இல்லை. மாறுதல் பெற்றுச் செல்லும் அவர், ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.
“நாட்டிலேயே தலைசிறந்த வழக்குரைஞர்கள் தமிழ்நாடு வழக்குரைஞர்கள்தான். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் அதிகம் வாதாடும்போதும், சில நேரங்களில் நான் எரிச்சல் அடைந்தாலும், பொறுமையாக இருந்து, எனக்கு மதிப்பு அளித்தீர்கள். தங்களது அன்பான வார்த்தைகளுக்கு எப்போதும் நான் கடமைப்பட்டவன் ஆவேன். சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை ஊழியர்களின் திறமையான பணியினால்தான் எளிதாக என்னால் நிர்வாகம் செய்ய முடிந்தது. வெளிப்படையான மற்றும் பொறுப்புள்ள நிர்வாகத்துக்காகத் தொடர்ந்து இந்தப் பணியை நீங்கள் முன்னெடுத்து செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை உயர்நீதி மன்ற ஊழியர்கள், ஆதிக்கக் கலாச்சாரத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். அந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிய முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அழகான, புகழ்பெற்ற இந்த மாநிலத்தை கடந்த 11 மாதங்களாக எனது சொந்த மாநிலம் என்று சொல்லிக் கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று சொல்லி இருக்கிறார்.
மிகப்பெரிய விடைபெறும் விழா இல்லாமல் நீதியரசர் இங்கிருந்து சென்றுள்ளார். இந்த சூழ்நிலை இனியாவது தவிர்க்கப்பட வேண்டியது ஆகும். இச்சூழலை நீதித் துறையைச் சார்ந்தவர்கள் கவனமாகப் பரிசீலித்தாக வேண்டும்.
சமூகத்தின் முரண்பாடு என்பது இதுதான். சாமானியர்களின் நீதியைப் பேசுகிறார் நீதிபதி ரமணா. நீதிபதிகளுக்கே கிடைக்க வேண்டிய நீதியைப் பேசுகிறார் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி. இப்படி ஒரு முரண்பாடு வரும் என்பதை சட்டம் இயற்றியபோதே சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்.
அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்கள், உறுப்பினர்களின் ஓட்டெடுப்புக்கு விடும் முன்னர் தீர்மானத்துக்கு ஆதரவாக உரையாற்றும் போது சொன்னார்: “1950 ஜனவரி 26-ந் தேதியன்று, நாம் முரண்பாடுகளுற்ற வாழ்க்கையில் நுழையப் போகின்றோம். அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக, பொருளாதாரத் தளத்தில் - சமத்துவமற்ற தன்மையே நீடிக்கும். அரசியலில் நாம் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு நெறி என்பதை அங்கீகரிப்போம். ஆனால், நமது சமூக, பொருளாதார வாழ்க்கையில் நம்முடைய பொருளாதார, சமூக அமைப்பின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு நெறி என்ற கோட்பாட்டை தொடர்ந்து மறுத்து வருவோம். இதுபோன்ற முரண்பட்ட வாழ்க்கை முறைகளுடன் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம்?” என்று அம்பேத்கர் கேட்டார்.
“நம்முடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? இப்படி தொடர்ந்து மறுத்து வருவதன் மூலம் அரசியல் ஜனநாயகத்திற்கு பேரிடர் மட்டுமே விளைவிப்போம். இம்முரண்பாடுகளை நாம் முடியும் வரை குறுகிய காலத்திற்குள் களைந்திட வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் மக்களால் இம்மன்றம் மிகுந்த சிரமங்களுக்கிடையே கட்டியுள்ள அரசியல் ஜனநாயகமே தகர்க்கப்பட்டுவிடும்” என்றார்.
1950 ஆம் ஆண்டில் அவர் கேட்ட கேள்விதான், 2021 ஆம் ஆண்டும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!