murasoli thalayangam
“மக்களின் துன்ப துயரங்களைத் துடைத்து இயற்கையின் முதல்வராக நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : ‘முரசொலி’ புகழாரம்!
மழைக்காலத் துன்ப துயரங்களைத் துடைக்க அந்த நேரத்திலேயே அதிகாரிகள் முயற்சித்தால் அதுதான் ஆட்சி! அந்த நேரத்திலேயே அமைச்சர்களும் வந்து பணியாற்றினால் அது நல்லாட்சி! அந்த நேரத்திலேயே முதலமைச்சரே வந்துவிட்டால் அதுதான் தலைசிறந்த ஆட்சி! ஆட்சிக்கு இலக்கணமான ஆட்சி!
எட்டு நாட்களாக மழை தொடர்ந்து பெய்கிறது. எட்டு நாட்களாகவே மக்களோடு மக்களாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘முதலமைச்சர் தான் அனைத்து இடங்களுக்கும் வர வேண்டுமா? கோட்டையில் இருந்து உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாதா? ஈரத்தில் அவரும் சேர்ந்து கஷ்டப்பட வேண்டுமா?’ என்று சமூக வலைத்தளத்தில் கரிசனத்துடன் ஒருவர் கண்ணீரால் எழுதி இருக்கிறார்.
மக்கள் தண்ணீரால் நனையும்போது தானும் நனைந்து பணியாற்றுவதன் மூலமாக, ‘நான் இருக்கிறேன், உங்களுக்காக நான் இருக்கிறேன்’ என்பதை நொடிக்கு நொடி காட்டிக் கொண்டு இருக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர். அவரை அப்படிக் கூடச் சொல்வது சுருக்கிச் சொல்வதாக ஆகிவிடும். ‘இயற்கையின் முதல்வர்’ என்பதே பொருத்தமானது!
திட்டமிட்ட பகுதியிலோ, பாதையிலோ முன் காலை எடுத்து போவது என்பதை விட - புதிய பகுதியில் அதுவும் தண்ணீரில் மிதக்கும் பகுதியில் அனைவருக்கும் முன்னதாக முன் காலை எடுத்து வைத்து முதலமைச்சர் செல்கிறார்!
மழை விட்ட பிறகு மழையால் பாதித்த பகுதிகளைப் பார்ப்பது என்பது வேறு. மழை பெய்து கொண்டு இருக்கும்போதே கொட்டும் மழையில் நனைந்தபடி முதலமைச்சர் சென்று கொண்டு இருக்கிறார்!
அரைமணி நேரம், ஒரு மணி நேரம் ஆய்வு செய்வது என்பது கூட இயல்பானது. ஆனால் காலையில் நான்கு மணி நேரம், மதியம் மூன்று மணி நேரம் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர்! ஒருசில இடங்களுக்குச் சென்று திரும்புதல் கூட இயல்பானது. ஒரு முறை கிளம்பினால், 25 - க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து விட்டுத்தான் திரும்புகிறார் முதலமைச்சர்!
சமையல் கூடங்களுக்குள் சென்று தயாரிக்கப்பட்ட உணவை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறார். ‘அம்மா’ உணவகத்துக்குச் சென்று விற்பனைக்கு தயாராக இருக்கும் உணவை எடுத்து உண்டு பார்க்கிறார். கழிவுநீர் செல்லும் கால்வாய்களைப் பார்க்கிறார். தண்ணீர் போகும் பாதைகளில் அடைப்புகள் இருக்கிறதா என்று பார்க்கிறார். மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று பார்க்கிறார். மக்களுக்கு அவரே உணவுகளை வழங்குகிறார். நிவாரணப் பொருட்களை வழங்குகிறார். வேறு என்ன தேவை என்று கேட்கிறார். தேவையானவற்றைக் கொடுக்கச்சொல்லி உத்தரவு போடுகிறார். மருத்துவ முகாம்களுக்குச் செல்கிறார்.
அங்கே இருக்க வேண்டிய பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா என்று பார்க்கிறார். குளங்களைப் பார்க்கிறார். ஏரிகளைப் பார்க்கிறார். அணைகளைப் பார்க்கிறார். மக்களோடு மக்களாக இருக்கிறார். மக்களுக்காகவே மக்களாக வாழ்கிறார். அவர்களுக்காகவே சிந்திக்கிறார். இவை அனைத்தும் சொல்லி வருவது அல்ல. உணர்ந்தும் வருவது அல்ல. பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதும் இயல்பு, இயல்பாய் இருப்பது. அத்தகைய அன்பியல்பின் முதல்வராக மு.க.ஸ்டாலின் காட்சி தருகிறார்!
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து வைத்து முதலமைச்சர் பேசினார். “வங்கக் கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஏற்கனவே ஏரிகளில் நீர் அதிகமாக உள்ளது. அதில் மழை நீரும் கூடுதலானால் நீர் மட்டம் உயரும். எனவே தாழ்வான பகுதிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். ஏரிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
கனமழை ஏற்பட்டால் எந்தப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும், அப்படி பாதிக்கப்பட்ட மக்களை எங்கே தங்க வைக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுங்கள்” என்று கடந்த 6 ஆம் தேதியே வழிகாட்டினார் முதலமைச்சர். அப்போது அவர் சொன்னதில் மிகமிக முக்கியமானது ஒன்று உண்டு. “வெள்ளப் பாதிப்புக்கு தற்காலிகத் தீர்வு மட்டுமே காணாமல் நீண்டகால நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதுதான் அது. அத்தகைய நிரந்தரத் தீர்வுக்கான அடித்தளத்தை இப்போது ஆய்வு செய்யும் போதே வழிகாட்டுபவராக முதலமைச்சர் இருக்கிறார்.
பருவமழையை எதிர்கொள்வது மட்டுமல்ல; இனி எந்தப் பாதிப்பையும் எதிர்கொள்ளும் வலிமையை உருவாக்க வேண்டும். அதுதான் முதலமைச்சரின் எண்ணமாக உள்ளது. கடந்த பத்தாண்டு காலத்தில் அனைத்தையும் பாழாக்கிவிட்டுப் போய் விட்டது அ.தி.மு.க. ஆட்சி. ஆக்கப்பூர்வமானதைச் செய்யவுமில்லை. இழிவானதைச் செய்தும் இருக்கிறார்கள். இதுதான் அ.தி.மு.க. ஆட்சி. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் செய்ய வேண்டியதையும் செய்யவில்லை. செய்யக்கூடாததையும் செய்து இருக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் ஊழல் மட்டுமல்ல; அனைத்துமே தவறாக நடந்துள்ளது. இதனையும் சேர்த்துச் சரி செய்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதோடுசேர்த்து, கடந்த காலப் பேரழிவுகளையும் சரி செய்தாக வேண்டும். அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார் முதலமைச்சர்.
முதலமைச்சரின் நகர்வலம் ஒரு பக்கம் தொடர்கிறது என்றால் அனைத்து அமைச்சர்களும் வெவ்வேறு பகுதிகளில் வலம் வருகிறார்கள். அவர்களோடு அவர்களது துறை அதிகாரிகளும் வலம் வருகிறார்கள். மழைக்காலப் பாதிப்பு என்பது மாநகராட்சி கவனிக்க வேண்டும், வருவாய்த் துறை தொடர்புடையது என இல்லாமல் அனைத்துத் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் மக்களைக்காக்க களத்தில் நிற்பதுதான் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி என்பது இந்தியாவுக்கு முன்னுதாரணமான ஆட்சியாக அமைந்துள்ளது. மக்கள், தேர்ந்தெடுத்து கோட்டைக்கு அனுப்பினார்கள். அவர் மக்களோடு மக்களாக வீதியில் போய்க் கொண்டு இருக்கிறார்! அவர் அவரது இயல்பில் இருக்கிறார். இயற்கையின் முதல்வராகத் தலைநிமிர்ந்து நிற்கிறார்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!