murasoli thalayangam
தமிழ்நாடு நாள்: ”அண்ணா பெயரில் கட்சி நடத்தி அண்ணாவுக்கே துரோகம் செய்யும் அதிமுக” - முரசொலி கடும் தாக்கு!
அண்ணாவின் பேரால் கட்சி நடத்திக் கொண்டு அண்ணாவுக்கே துரோகம் செய்வதற்கு அ.தி.மு.க. எப்போதும் தயங்குவது இல்லை! அதை ‘அம்மா’ வழியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டம்!
அண்ணா பெயர் சூட்டிய ‘தமிழ்நாடு’ நாளையே சிதைக்கும் சீர்குலைவுச் சக்திகளுக்கு துணை போய்க் கொண்டு இருக்கிறது அ.தி.மு.க.!
1967ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் நாள் தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. அண்ணாவுக்கோ, தி.மு.க.வுக்கோ அந்தப் பெருமை போய்விடக் கூடாது என்பதற்காகவே சில போலிகள், ‘நவம்பர் 1’தான் தமிழ்நாடு நாள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். நவம்பர் 1 என்பது இந்தியா முழுவதும் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாள். அதே நாளில் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரிக்கை வைத்தோம். ஆனால் அன்றைய ஒன்றிய அரசு அதற்குச் சம்மதிக்கவில்லை.
11 ஆண்டுகள் அந்தப் பெயருக்காகப் போராடினோம். பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகுதான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. 14.4.1967ஆம் நாள் சென்னைக் கோட்டையின் முகப்பில் ‘தமிழக அரசு தலைமைச் செயலகம்’ என்ற பலகை மிளிர்ந்தது. ‘மதராஸ் கவர்மெண்ட்’ என்று இருந்த சொல் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ எனப் பொறிக்கப்பட்டது. ‘சத்தியமேவ ஜெயதே’ என்பது அழகிய தமிழில், ‘வாய்மையே வெல்லும்’ என்று பொறிக்கப்பட்டது.18.7.1967 அன்று தமிழக வரலாற்றில் பொன்னான நாள். தாய்த்தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று தனயன் பெயர் சூட்டிய நாள்!
"தமிழ்நாடு என்ற இந்தப் பெயர் நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக விருது நகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் என்ற முதியவர், பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அணு அணுவாகத் தம்முடைய உயிரைச் சிதைத்துக் கொண்டு அவர்கள் இறந்துபட்டார்கள். அவர்கள் இறந்து படுவதற்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னதாக நான் அவரிடத்திலே போய்ப் பார்த்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. ‘நாங்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்தைப் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் உண்ணாவிரதத்தை விட்டுவிடுங்கள்’ என்று சொன்ன நேரத்தில், ‘உங்களுக்கு இந்த பெயர் மாற்றத்தைக் கொண்டு வரத்தக்க அரசியல் வலிவு இல்லை, ஆகையால் என்னைத் தடுக்காதீர்கள், நான் இறந்து விடுவதால் ஏதாவது நன்மை ஏற்படுமானால், நான் இறந்து விடுவதிலே நஷ்டம் ஏதும் இருக்காது' என்று சொன்னார். அந்தப் பெரியவருடைய உறுதியால் அவர் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டு அந்த நாட்களிலே ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தினார். அவரை இந்த நேரத்திலே நினைவுபடுத்திக்கொள்வது பொருத்தமானது. அவருடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்தி இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதற்கு இந்த அவைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்." - என்றார் முதல்வர் அண்ணா!
"தமிழ்நாடு என்று பெயரிடப்படுகின்ற இந்தநாள், இந்த அவையில் உறுப்பினராக இருக்கக் கூடிய அனைவர் வாழ்விலும் மிகுந்த மகிழ்ச்சியையும் நல்ல எழுச்சியையும் தரக்கூடிய திருநாள் ஆகும். இந்தத் திருநாளைக் காண்பதற்கு நெடுங்காலம் காத்திருக்க நேரிட்டதே என்பதுதான் மகிழ்ச்சியின் இடையே வருகிற துயரம். இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கு வெற்றி." என்று சொல்லி, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை வாக்குக்கு விட்டார் முதல்வர் அண்ணா. அனைத்து உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக பெயர் மாற்றத்தை ஆதரித்து நின்றார்கள். உடனே முதல்வர் அண்ணா அவர்கள், "சட்டமன்றத் தலைவர் அவர்களே! வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நாளில் ‘தமிழ்நாடு’ என்று நான் சொன்னதும் ‘வாழ்க’ என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்கு தங்கள் அனுமதியைக் கோருகிறேன்" என்றார்.
அனுமதித்தார் அவைத் தலைவர்!
முதல்வர் அண்ணா: தமிழ்நாடு!
உறுப்பினர்கள்: வாழ்க!
முதல்வர் அண்ணா: தமிழ்நாடு!
உறுப்பினர்கள் :வாழ்க!
முதல்வர் அண்ணா: தமிழ்நாடு!
உறுப்பினர்கள்: வாழ்க!
இதுதான் ‘தமிழ்நாடு’ உருவான வரலாறு. உண்மையான வரலாறு.
அத்தகைய சூலை 18 தான் ‘தமிழ்நாடு நாள்’ என்கிறோம். இதில் வரலாற்றுத்திரிபு எங்கே வருகிறது? திராவிட இயக்கத்தின் எதிரிகள், மறைந்திருந்து தாக்கும் அவதாரங்கள் எதிர்க்கிறார்கள் என்றால், ‘அண்ணாவின் பேரால்’கட்சி நடத்துபவர்கள் எதிர்க்கலாமா?அதற்காக நவம்பர் 1ஆம் நாளின் முக்கியத்துவத்தை நாம் மறுக்கவில்லை! ‘தமிழர்நாடு’ என்ற புத்தகம் தீட்டிய பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தர், வடக்கு எல்லையில் போராட்டத் தீ ஏற்படுத்திய மங்கலங்கிழார், தென் எல்லையில் போராட்டத்தீ மூட்டிய குஞ்சன், நத்தானியல், நேசமணி, பி.எஸ்.மணி உள்ளிட்டோர், ‘வேங்கடத்துக்கு தெற்கே உள்ள பகுதியையோ, தென்குமரிக்கு தெற்கே உள்ள பகுதியையோ தமிழர்கள் விட்டுத் தர மாட்டார்கள்’ என்று முழங்கிய திரு.வி.க., ‘மாலவன் குன்றத்தையும் வேலவன் குன்றத்தையும் விட மாட்டேன்’ என்ற ம.பொ.சி.,‘சென்னையைத் தலைநகராக ஆந்திர மாநிலத்தவர் கேட்டபோது, ‘தனிக்குடித்தனம் போனவர்கள் இங்கு வந்து சமையல் மட்டும் செய்ய உரிமை உண்டா?’ என்று கேட்ட தந்தை பெரியார், சென்னையைக் காக்க சென்னை மாநகராட்சியில் தீர்மானம் போட்ட மேயர் செங்கல்வராயன், தட்சிணப் பிரதேச சூழ்ச்சியை எதிர்த்த பெருந்தலைவர் காமராசர், தென் எல்லைக்கு நாகர்கோவில் ஜானையும், வட எல்லையில் கிருஷ்ணசாமியையும் தளபதிகளாக நியமித்த அண்ணா... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களும், தடியடியில் மரணித்தவர்களும் அந்தப் போராட்டத்தின் ரத்த சாட்சியங்கள். 1948 முதல் 1960 வரையிலான காலக்கட்டத்தில் தார் ஆணையம், பசல் அலி ஆணையம், படாஸ்கர் ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டன. அவை அனைத்திலும் தமிழர் நில உரிமையையும் இன உரிமையையும் காக்க விண்ணப்பம் கொடுத்து அறிவுப் போராட்டம் நடத்திய இனம் தமிழினம். அதனை தி.மு.க. மறக்கவோ மறைக்கவோ இல்லை. அதனால்தான் கடந்த 1 ஆம் நாள் எல்லைப் போராட்டத் தியாகிகளை அழைத்து ஆளுக்கு 1 லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். 1974 ஆம் ஆண்டு தென் எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு முதன்முதலாக நிதிஉதவி செய்ததும் கழக அரசுதான். அதன் நீட்சிதான் இப்போது வழங்கப்பட்டுள்ள ஒரு லட்சம் நிதியாகும். நவம்பர் 1 ஆக இருந்தாலும் -சூலை 18 ஆக இருந்தாலும் - அது தமிழ்நாட்டின் மேன்மைக்கான நாளாகத்தான் கழகம் நினைத்து தனது செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்கிறது. ஆனால் சிலருக்குதான் அரசியல் கண்ணை மறைத்து வரலாற்றுக் குருடர்களாக ஆக்கிக் கொள்கிறது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு