murasoli thalayangam
“அன்று ஆ.ராசா சொன்னதை இன்று வினோத் ராய் ஒப்புக்கொண்டுவிட்டார்.. அது 2ஜி இல்லை பொய்ஜி” : முரசொலி தலையங்கம்
முரசொலி நாளேட்டின் இன்றைய (நவம்பர் 1, 2021) தலையங்கம் வருமாறு:
செய்யவேண்டிய கெடுதல்கள் அனைத்தும் செய்து முடித்தபிறகு மன்னிப்புக் கேட்பதைப் போல கயமைத்தனம் வேறு இருக்க முடியாது. அநியாயங்கள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதைப் போன்ற பெரிய அநியாயம் வேறு இருக்க முடியாது.
2ஜி என்பதே பொய்ஜி தான் என்பதை வினோத் ராயே சொல்லிவிட்டார். உருவாக்கியவர் அவர்தான். சொல்ல வேண்டியதும் அவர்தான்!
“2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக தான் தெரிவித்த தகவல்கள் தவறானவை” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி இருக்கிறார் முன்னாள் சி.ஏ.ஜி தலைவர் வினோத் ராய்!
Finally former CAG Vinod Rai tendered an unconditional apology to ina defamation case filed in MM Court, Patiyala house, New Delhi today.He must apologize to the nation now for all his forged reports about 2Gand Coal block allocations done by the UPA Govt” - என்பதுதான் தலைநகரம், இந்த நாட்டுக்குச் சொல்லும் செய்தி!
ஒரு மாபெரும் இயக்கத்தை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மந்திர வார்த்தையான 2ஜி என்பது எத்தகைய மர்மமான வார்த்தை என்பதை வினோத் ராயின் மன்னிப்பு நாட்டுக்கு உணர்த்தி விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமைகளான ஆ.ராசா அவர்களையும், கனிமொழி அவர்களையும் சிறைக்கு அனுப்பிய கொடூரத்துக்கு சதிக்குழி தோண்டுவதாக 2ஜி அமைந்திருந்தது. இயக்கத்தையே 2ஜி என்பதன் மூலமாக வீழ்த்திவிடலாமா என்ற நப்பாசையுடன் அலைந்தார்கள். இவை அனைத்தையும் தனது நெஞ்சுரத்தால், சட்டத்தால், வாதத்திறமையால் எதிர் கொண்டு நின்றார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அவர்கள்.
அவர் சொன்னவை அனைத்தும் முழு உண்மைதான் என்பதை குற்றம்சாட்டிய வினோத் ராயே ஒப்புக்கொண்டு இருக்கிறார். 2ஜி என்பது பொய்ஜிதான் என்பதை முதலில் ஒப்புக்கொண்டுவிட்டார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி அவர்கள். “கடந்த ஏழு ஆண்டுகளாக கோடை விடுமுறைக்காலம் உட்பட எல்லா அலுவலக நாட்களிலும் திறந்த நீதிமன்ற அறையில் காலை 10 மணி முதல்மாலை 5 மணி வரை நான் அமர்ந்து இருந்தேன். தங்களிடம் உள்ள சட்டப்படி ஏற்கத்தக்க சான்றுகளுடன் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பு வீணாகத்தான் போயிற்று. எந்த மனிதர்களும் வரவில்லை. வதந்தி, கிசுகிசு, யூகம் ஆகியவை உருவாக்கிய ஒரு பொதுக்கருத்தையே எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள் என்பதையே இதுகாட்டுகிறது. பொதுமக்களிடம் இப்படிப்பட்ட புரிதலுக்கு நீதி வழங்க விசாரணைகளில் இடமே இல்லை” - என்று தனது தீர்ப்பில் எழுதினார் நீதிபதி சைனி அவர்கள்.
“நடைபெறாத ஒரு பெரிய ஊழல் நடந்ததாகவே பார்க்கப்பட்டது. ஒரு பெரிய ஊழல் நடைபெற்றதாக மக்கள் நம்பும் கட்டத்திற்கு இத்தகைய காரணிகள் காரணமாகிவிட்டன. எனவே கற்பனை நயத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையின் சில பகுதிகளை மட்டும் எடுத்தும் கோர்த்தும் அவற்றை வானளாவ மிகைப்படுத்தியும் சில மனிதர்கள் ஊழல் என்ற ஜோடனையைக் கட்டமைத்தனர்” என்று சொன்னவரும் நீதிபதி சைனி அவர்கள்தான்.
“சொல்லப்பட்டுள்ள எந்தக் குற்றச்சாட்டுகளையும் சி.பி.ஐ. நிரூபிக்கவில்லை என்ற முடிவுக்கு நான் வருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை” என்று தீர்ப்பின் 1551ஆவது பக்கத்தில் நீதிபதி சைனி சொன்னார். மிகத் தவறான புரிதலுடன், தவறான நோக்கத்துடன் இந்தியத் தணிக்கையாளர் வினோத் ராய் தயாரித்த அறிக்கைதான், இந்த வழக்கின் ஆரம்பமாக அமைந்தது. பூதத்தை உருவாக்கி, அதனை பெரும் பூதமாகவும் ஆக்கியவர் அவரே. அனுமான இழப்பை, ஊழலாகக் குறிப்பிட்டவர் அவர்தான். பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியைப் போல சி.ஏ.ஜி. அறிக்கையை தயாரித்தவர் வினோத் ராய்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் அனுமான இழப்புக் கணக்கீட்டை ஆரம்பத்திலேயே எதிர்த்தவர் தணிக்கைப் பிரிவின் முன்னாள் தலைமை இயக்குநர் ஆர்.பி.சிங். ரூ.1.76 லட்சம் கோடி என்பதை நடுநிலையற்ற தனிப்பட்ட கருத்து என்றும் அவர் சொன்னார். இதனால் தனக்கும் வினோத் ராய்க்கும் பிரச்சினை எழுந்ததாகவும் ஆர்.பி.சிங் சொல்லி இருக்கிறார்.
தனிநபரான வினோத் ராயின் கணித ஊகம் என்று சிங் சொல்லி இருக்கிறார். ஆனாலும் ரூ.1.76 லட்சம் கோடி என்ற எண்ணிக்கைதான் சட்டத்தை விட, நியாயத்தை விட உண்மையாக ஊருக்குள் உலவியது. “வினோத் ராயின் அறிக்கை என்பது அரசியல் சட்ட மாண்புகளைக் கேலிப் பொருளாக்கிய செயல். சுய விளம்பரத்திற்காகவும் அரசியல் சதிராட்டத்திற்காகவும் உண்மையையும் நேர்மையையும் கூவி விற்ற இழிவு.
தனி மனித வக்கிரத்தின் வெளிப்பாட்டில் தேசத்தின் பொருளியல் சூழலை சூறையாட வழிகோலிய வன்மம். பகட்டுக்காகவும் சுய தேவைக்காகவும்பொதுநலனைப் புதைத்து விட்டு வினோதமான இலாப நட்டக் கணக்குப்போடும் அருவருப்பான வணிகத்தனம்” என்று ஆ.ராசா அவர்கள் அதனை வர்ணித்து இருந்தார்.
இந்த வர்ணிப்பின் ஒவ்வொரு சொல்லும் உண்மையானதுதான் என்பதை வினோத் ராயின் மன்னிப்பு காட்டுகிறது.
“எப்போது நீதிபரிபாலனம் உணர்ச்சிகளுக்கும் கிளர்ச்சிகளுக்கும் இடம்தராமல் சட்டத்தின் ஆட்சியை விருப்பும் வெறுப்பும் இன்றி நிறைவேற்றிட முனைகிறதோ - அப்போது வினோத் ராய் போன்ற தணிக்கையாளர்களின் அறிக்கைகள் குப்பைத் தொட்டிக்கு மட்டுமே தகுந்ததாக அறிவிக்கப்படும்” என்று எழுதினார் ஆ.ராசா.
தனது அறிக்கை குப்பைத் தொட்டிக்கு மட்டுமே உரியது என்பதை இதோ வினோத் ராயே சொல்லி விட்டார். தி.மு.க.வாக இல்லாமல் வேறு ஒரு கட்சியாக இருந்தால் இப்படி ஒருவிவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்குமா என்பது சந்தேகமே! தி.மு.க இல்லாமல் வேறு ஒரு கட்சிக்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருக்குமானால் எழுந்து வந்திருக்காது என்பது மட்டுமே உண்மை!
Also Read
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!