murasoli thalayangam
”இதுதான் ஒரு மக்கள் முதலமைச்சரின் குரல்” : மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளும் முரசொலியின் புகழாரமும்!
மாநில அளவிலான வங்கியாளர் கூட்டத்தை நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி உள்ளார்கள். உண்மையில் இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாகும். அரசுக்கும், வங்கிக்குமான ஒருங்கிணைப்பு என்பது நிதி மேலாண்மையில் அவசியமானது. அவசரமானது. அந்த அடிப்படையில் கவனிக்கத்தக்க நகர்வாக இக்கூட்டம் அமைந்துள்ளது.
இக்கூட்டத்தின் மூலமாக முதல்வர் அவர்கள் வைத்துள்ள கோரிக்கையின் மையப்புள்ளியாக இருப்பது; வங்கிகள், ‘மக்கள் வங்கிகளாக' மாற வேண்டும் என்பதுதான். ‘மக்கள் அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். அதேபோல் மக்கள் வங்கிகளாக நீங்கள் மாறுங்கள்' என்பதைக் கோரிக்கையாக, வேண்டுகோளாக முதல்வர் வைத்துள்ளார்.
"இந்தச் சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும், வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்ற முதலமைச்சர், அடுத்து வைத்தவை அனைத்தும் கோரிக்கைகளே. அனைத்தும் மக்களுக்கான கோரிக்கைகளே! "மக்களும் வளர வேண்டும் - தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும் - அரசும் வளர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது. மக்களைக் காப்பதுதான் அரசின் ஒரே நோக்கமாக இருந்தது.
இந்த அரசின் ஒரே நோக்கம் என்பது மக்களைக் காப்பது மட்டும்தான். நேற்றும், இன்றும், நாளையும் தி.மு.க. அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! அதற்கு அரசும் - வங்கியும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு அரசின் நோக்கமும், வங்கியின் நோக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும்" - என்று சொல்லி இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக வங்கிகளிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் நிதிக் கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் பட்டியல் போட்டுச் சொல்லி இருக்கிறார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், அவை மகளிரின் மேம்பாட்டுக்கானவை,தெருப்புற சின்னஞ்சிறு விற்பனையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க மலிவு கடன்கள், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நடத்துவோருக்கானகடன்கள் இதன் மூலமாகத்தான் லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவை இந்த நிறுவனங்கள்தான். தரமான கல்வியை அடைய பணம் தடையாக இருக்கக் கூடாது.
எனவே கல்விக் கடன் வழங்குவதை தயங்காமல் செய்யுங்கள். விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் மேம்பாட்டுக் கடன்கள். மீனவர்கள், மீன் தொழிலை மேம்படுத்த வழங்க வேண்டிய உதவிகள்.- இப்படி வரிசையாகப் பட்டியலிட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். இதுதான் மக்களின் முதலமைச்சரின் குரலாக இருக்க முடியும். ஏழை எளிய, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி வழியும் காட்டி உள்ளார்.
ஏழை, எளிய மக்கள் சில வேளைகளில் சில வங்கி அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதை நாம் செய்திகளாக வாசித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். அதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அப்படி பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக முதலமைச்சரின் குரல் அமைந்திருக்கிறது. வங்கிகள் பல லட்சம் கோடிகளை வாராக் கடன்களாக அறிவித்து அதனை ரத்து செய்வதை செய்தியாகப் படிக்கும்போது அடையும் வருத்தத்தை விட -ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு சில ஆயிரங்கள் கடன்கள் கிடைப்பதே முடியாததாக இருப்பதைக் கேள்விப்படும் போது அடையும் வருத்தம் அதிகம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி ஒருவர் வங்கிகளின் கடன் விவரங்கள் தொடர்பாக பெற்ற தகவல்கள் சமீபத்தில் வெளியானது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்ற தொழிலதிபர்களின் கடன்களில் கடந்த 8 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை ரூ.6.32 லட்சம் கோடி என்கிறது அந்தப் புள்ளி விபரம்.12 பொதுத்துறை வங்கிகள் 8 ஆண்டுகளில் பெரும் தொழிலதிபர்களுக்காக தள்ளுபடி செய்த தொகை ரூ.2.78 லட்சம் கோடி. இவ்விதம் தள்ளுபடி செய்யப்பட்டாலும் கடனைச் செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றும் கடன் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால் வங்கிகள் வசூலித்த தொகை மொத்த கடன்தொகையில் 7 சதவீதம் மட்டுமே என்றும் சொல்லப்படுகிறது. வங்கிகளின் நிதிநிலை அறிக்கையை தூய்மையாக்க வாராக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன என்று சொல்லப்படுகிறது. வாராக்கடன் தள்ளுபடி என்பது, நிதிநிலை அறிக்கையை துல்லியமாக வைப்பதற்காக என்றும், இது தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கையே தவிர, வசூல் நடவடிக்கை தொடரும் என்றும் கூறினர்.
அதே நேரத்தில் சாமானியர் ஒருவர் வாங்கிய கல்விக் கடனோ, வீட்டுக்கடனோ வங்கிகளால் அப்படிதள்ளுபடி செய்யப்படுகிறதா என்றால் இல்லை. அதற்கு இது போல் விளக்கம் அளிக்கப்படுகிறதா என்றால் இல்லை. இத்தகைய செயல்பாடுகளின் இடைவெளியை யார் குறைப்பது? இதோ தமிழ்நாட்டின் முதலமைச்சரே எளிய மக்களின் குரலை எதிரொலித்து இருக்கிறார். பணம் மிகையாக வைத்திருப்பவர்களையும் - பணம் தேவைப்படுபவர்களையும் இணைக்கும் இடமே வங்கி. அத்தகைய நோக்கம் நிறைவேற வேண்டும். பணம் சேமிக்கும் - கடன் கொடுக்கும் இடமாக மட்டுமல்லாமல் சமுதாயத்தின் மேன்மைக்கான பங்களிப்புகளை வங்கிகள் செய்தாக வேண்டும்!
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!