murasoli thalayangam
“ஜெயலலிதா திட்டமிட்டாராம்.. மோடி அமல்படுத்துகிறாராம்” : வாய்மாலம் காட்டும் ‘தினமணி’க்கு ‘முரசொலி’ பதிலடி!
முரசொலி நாளேட்டின் இன்றைய (22.10.2021) தலையங்கம் வருமாறு:-
‘வழிகாட்டும் தமிழகம்' என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டிய ‘தினமணி' (18.10.2021) நாளிதழ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இல்லாத பெருமை ஒன்றைச் சூட்டி இருக்கிறது. மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி என்பது ஜெயலலிதாவின் திட்டமாம். ‘தினமணி' பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொடுக்கிறது!
மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்தின் கொள்கை முடிவாக அறிவித்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். தருமபுரி, விழுப்புரம், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி உருவாகக் காரணமாக இருந்தவர் முதல்வர் கலைஞர். இந்த வரலாறுகள் எதையும் உணராமல், வெறும் ஜெயலலிதா பாசத்துடன் (அல்லது கலைஞர் மீதான வெறுப்புடன்!) அந்தத் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.
2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்கள். அதில் கல்வி என்ற துணைத் தலைப்பில் ஒரு குறிக்கோளை அறிவித்தார். (தி.மு.க தேர்தல் அறிக்கை பக்கம் 312) “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம்” என்று சொல்லப்பட்டது.
அதுதான் தொடக்கம். அதனைத்தான் பிரதமர் மோடி இன்றைக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ‘வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மருத்துவ முகாம்களை நடத்தி, கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகை செய்தவர் முதல்வர் கலைஞர். ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகம் உருவாக்கியவரும் அவரே. பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மருத்துவப் பணியாளர்களை நியமித்தவரும் அவரே. உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முதல்வர் கலைஞர் வழங்கிய மாபெரும் கொடை குழந்தைகள் உயிர் காத்திட அறுவை சிகிச்சைகளுக்கு நிதி உதவிகளை அதிகம் அளித்தவரும் அவரே. இளம்சிறார் இதய அறுவை சிகிச்சைத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியவரும் அவரே.108 அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கிக் கொடுத்தவரும் அவரே. 2 கோடியே 11 இலட்சம் பேர் பயன் பெறும் வகையில் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று மருத்துவ உதவிகளை அளிக்கும் ‘நலமான தமிழகம்’ என்ற புதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதலில் தொடங்கியது முதல்வர் கலைஞர்தான்!
நோய் தீர்க்கும் மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்மாதிரியாக உள்ளது என்று 2010 ஆம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவர் விருது வழங்கும் அளவுக்கு சிறப்பான ஆட்சியை நடத்தியவர் முதல்வர் கலைஞர். இதன் தொடர்ச்சியாக அவரது சிந்தனையில் உதித்ததுதான், ‘மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்' என்பதாகும். 2011 ஆம் ஆண்டு ஆளுநர் உரையில் இதனை கலைஞரின் அரசு அறிவித்தது. இதோ ஆளுநர் உரையில் உள்ள வரிகள்... “பின் தங்கிய மாவட்டங்களான சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி எனும் இந்த அரசின் நோக்கத்தை நிறைவேற்றிடும் வகையில் அடுத்த படியாக இராமநாதபுரம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் தகுதியுடைய மருத்துவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் - திருவாரூர், தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கி உள்ளது” - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தான் அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியும் பின்பற்றியது. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றையே இந்தளவு திரிக்கிறார்கள் என்றால், பழைய வரலாறுகளை எந்தளவு திரித்திருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை! (இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை `ஷிப்ட் சிஸ்டம்’ என்றும் திரிக்கிறது தினமணி!)
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்று அன்று கலைஞர் சொன்ன தைத்தான் சொல்லத் தொடங்கி இருக்கிறார் பிரதமர். அவர்கள் ஆரம்பிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வரலாறுகள்தான் நமக்குத் தெரியுமே! மதுரையில் இருந்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தூக்கி வந்த ஒற்றைச் செங்கல் ஒன்று போதாதா எய்ம்ஸ் வரலாற்றைச் சொல்வதற்கு!
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யுங்கள் என்று முதன்முதலாக 19.6.2014 அன்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. இரண்டு இடங்களைத் தேர்வு செய்து 31.10.2014 அன்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. 28.2.2015 அன்று மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று சொன்னார். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நான்கு மாத காலக்கெடுவை நீதிமன்றம் விதித்தது.
2018ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்று தேதியே குறித்தார்கள். அடிக்கல் நாட்டப்படவில்லை. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடிக்கல் நாட்டினார் பிரதமர். 2021 கழக ஆட்சி அமைந்த பிறகுதான் இப்போது இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுதான் எய்ம்ஸ் சாதனைச் சரித்திரம். இப்படி இருக்க, ஜெயலலிதா திட்டமிட்டாராம். மோடி அமல்படுத்துகிறாராம். என்னவெல்லாம் வாய்மாலம் காட்டுகிறார்கள்!
பதவியில் இருந்தபோதே ஊழல் குற்றச்சாட்டுக்காக ஒரு முறையல்ல; இரண்டு முறை பதவியை விட்டு விலகியவர் ஜெயலலிதா. இதுதான் அவருக்குத் தரவேண்டிய இந்தியப் பெருமை! முதலமைச்சராக இருந்தபோதே ஊழல் வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்று சிறைக்குப் போனவர் ஜெயலலிதா. இதுதான் அவருக்குத் தர வேண்டிய இந்தியப் பெருமை! தமிழகம் அவரால் தலைகுனிந்தது. அதை எழுதுங்கள், நேர்கொண்ட பார்வை இருக்குமானால்!
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!