murasoli thalayangam
“சாவர்க்கரின் வரலாற்றுச் சரிவுகளைச் சரி செய்ய துடிக்கும் ஒன்றிய அமைச்சர்கள்” : பாடம் புகட்டிய ‘முரசொலி’!
முரசொலி நாளேட்டின் இன்றைய (20.10.2021) தலையங்கம் வருமாறு:-
இந்தியாவை முன்னேற்றுவது குறித்த கவலையை விட சாவர்க்கரைக் காப்பாற்றுவதுதான் பா.ஜ.க.வின் ஒரே இலக்காக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை விட, சாவர்க்கரின் வரலாற்றுச் சரிவுகளைச் சரி செய்யவே ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் துடிக்கிறார்கள். கடந்த காலப் பொய்மைகளின் மூலமாக நிகழ்காலக் கீழ்மைகளை மறைக்க முயற்சிக்கிறார்கள். காலத்தின் கண்ணுக்கு எல்லாமே தெரியும், புரியும் என்பதை உணராமல்!
கடந்த வாரத்தில் டெல்லியில் சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. இதில் பேசிய ஒன்றிய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுகிறது. சிறையில் இருந்து விடுதலை ஆவதற்காக ஆங்கில அரசிடம் அவர் தொடர்ந்து பல கருணை மனுக்களை அனுப்பியதாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களிடம் சாவர்க்கரை கருணை மனு அனுப்பச் சொன்னதே மகாத்மா காந்திதான்'' என்று பேசினார்.
ராணுவ அமைச்சர் தனது கருத்துக்கு எந்த ஆதாரமும் காட்டவில்லை. இருந்தால்தானே காட்டுவார்கள். பொத்தாம் பொதுவாக அப்படிச் சொன்னார். இதுவரை சாவர்க்கர் கருணை மனு அனுப்பியதே இல்லை என்று சொல்லி வந்தவர்கள்தான் பா.ஜ.க.வினர். இப்போது முதன் முதலாக கருணை மனு அனுப்பியதை ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காக ராஜ்நாத் சிங்கை பாராட்டத்தான் வேண்டும். இதனை மூத்த காங்கிரசு தலைவர்களில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் கடுமையாக மறுத்தார்.
“1920 ஆம் ஆண்டு காந்தி எழுதிய கடிதத்தை திரித்துச் சொல்கிறார் ராஜ்நாத்சிங்” என்றார் ஜெயராம் ரமேஷ். அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி அளித்த பதிலில், “சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு சிறைக்குச் சென்று 6 மாதங்களிலேயே ஆங்கில அரசுக்கு முதல் கருணை மனுவை அனுப்பிய போது மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தார். அதன்பிறகு 1913,1914 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்து அவர் கருணை மனுக்களை அனுப்பினார். அதன்பிறகு 1920 ஆம் ஆண்டுதான் அவருக்கு மகாத்மா காந்தி அறிவுரை கூறினார்” என்று குறிப்பிட்டார்.
இந்த வரலாற்றுத் தகவல்களை ஆதாரங்களுடன் முடிந்தால் மறுத்திருக்க வேண்டும் உள்துறை அமைச்சராக இருக்கக் கூடிய அமித்ஷா. அதை விடுத்து, “சாவர்க்கரின் தேசபக்தியை சந்தேகிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்ற புதுக் கண்டுபிடிப்பை நேற்றைய தினம் வெளியிட்டு இருக்கிறார். சாவர்க்கர் கருணை மனு அனுப்பவில்லை என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்திருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களைச் சொல்லி இருக்க வேண்டும். அதைவிடுத்து பொத்தாம் பொதுவாகத்தான் பதில் அளித்து - அனைத்துக் கேள்விகளுக்கும் மொண்ணையான ஒரு பதில் மூலமாக பூசி மெழுகி இருக்கிறார் அவர்.
இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ஏ.ஜி.நூரணி அவர்கள், 2002 ஆம் ஆண்டு சாவர்க்கர் குறித்து ஒரு புத்தகம் எழுதினார். ‘சாவர்க்கரும் இந்துத்துவமும் - மகாத்மா காந்தி படுகொலையும்' என்ற தலைப்பில் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. ஆவணக் காப்பகத்தின் பல்வேறு தகவல்களைத் திரட்டி எழுதப்பட்ட வரலாற்று ஆய்வு நூலாகும் அது.
பல முறை ஆங்கில அரசிடம் மன்னிப்புக் கேட்டவர் சாவர்க்கர் என்பதை ஆதாரங்களுடன் அந்த நூலில் ஏ.ஜி.நூரணி சொல்லி இருக்கிறார். 1883 முதல் 1966 வரை வாழ்ந்தவர் சாவர்க்கர். அபிநவ் பாரத் என்ற அமைப்பில் இயங்கியவர். சட்டம் படிக்க லண்டன் சென்றவர். அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவிலும், இலண்டனிலும் இயங்கிய இந்திய தேசியக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர். வில்லியம் கர்சான் கொலை, நாசிக் மாவட்ட நீதிபதி ஜான்சன் கொலை ஆகிய இரண்டிலும் தொடர்புடையவராக சாவர்க்கர் சந்தேகப்படுத்தப்படுகிறார்.
இந்தியாவிலும், லண்டனிலும் மன்னராட்சிக்கு எதிராகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட இவர், மார்செல்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோரியா கப்பலில் இருந்து தப்பினார். பின்னர் பிரான்சில் பிடிபட்டார். 1910 ஜூலை 22 அன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். டிசம்பர் 10 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஆயுள் காலம் முழுவதும் நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு தரப்படுகிறது. அதன்படி அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார்.
1911-ல் ஆங்கில அரசுக்கு அவர் ஒரு கருணை மனு அனுப்புகிறார். அதன் மீது நடவடிக்கை இல்லை என்றதும் 1913 நவம்பர் 14 அன்று மீண்டும் கருணை மனு போடுகிறார். அந்த வாசகங்களை வழக்கறிஞர் ஏ.ஜி.நூரணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். “அரசு தன் நல்லதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை விடுவித்தால் அரசியலமைப்பின் செயல்பாட்டிற்காக வாதாடுவதுடன் ஆங்கில அரசுக்கு விசுவாசமாகவும் நடந்து கொள்வேன். அரசு எந்த வகையில் விரும்புகிறதோ அந்த வகையில் சேவகம் புரியத் தயாராக உள்ளேன். எனது மாற்றம் மனச்சாட்சியின் குரலுக்கேற்ப ஏற்பட்டுள்ளதால் எனது எதிர்கால நடத்தை அதற்கேற்பத்தான் இருக்கும். என்னைச் சிறையில் வைத்திருப்பதன் மூலம் எதுவும் பெற இயலாது. மாறாக அவ்வாறு இல்லாதிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். தந்தை போன்ற அரசின் வாசலுக்குக் கெட்டழிந்த மகன் திரும்ப வருமாறு கருணை செய்ய வல்லமை மிக்க தங்களால் மட்டுமே முடியும்” - என்று சாவர்க்கர் எழுதி இருக்கிறார். மன்னிப்பு, கருணை மனுவை விட மிக மோசமான வார்த்தைகள் இவை என்கிறார் வழக்கறிஞர் ஏ.ஜி.நூரணி.
1924 எரவாடா சிறையில் இருந்து நிபந்தனைகள் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகிறார் சாவர்க்கர். அடுத்த ஆண்டு ஒரு கட்டுரை எழுதியதற்காக மீண்டும் அவர் மீது வழக்கு பாய்கிறது. அதற்கு அனுப்பிய பதிலில் சுயராஜ்யம் என்ற சொல்லில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பதில் அனுப்பி இருக்கிறார் சாவர்க்கர். அவருக்கு மீண்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. 1937ஆம் ஆண்டுதான் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இவை அனைத்தையும் வரிசைப்படுத்தி இருக்கிறார் ஏ.ஜி.நூரணி. “சாவர்க்கரின் கஷ்டங்களைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதேபோல், அவரது சரணாகதியையும் சமரசப் போக்கையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அவரை வீரராகப் புகழ்பவர்கள், அவரது முதல் பகுதியை மட்டும் மிகைப்படுத்திக் கூறிவிட்டு பிற்பகுதியைப் பற்றி அவர்களால் மறுக்க முடியாவிட்டாலும் கண்டு கொள்வதில்லை” என்று 2002 இல் எழுதினார் ஏ.ஜி.நூரணி. 2021 வரையிலும் இதுதான் நடக்கிறது!
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்