murasoli thalayangam
“தி.மு.க வெற்றி என்பது, ஒட்டுமொத்தத் தமிழகமும் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமே” : முரசொலி புகழாரம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (14-10-2021) வருமாறு:
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றி முழுமையான வெற்றியாக அமைந்துள்ளது. இது மகத்தான தி.மு.க.
ஆட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திறமையான முதலமைச்சருக்குக் கிடைத்த அமோகமான வெற்றியாகும். ஐந்துமாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பாராட்டு ஆகும். இனி இப்படித்தான் வெற்றிகளைத் தந்து கொண்டே இருப்போம் என்பதற்கான சமிக்ஞை ஆகும். மு.க.ஸ்டாலின் அவர்களே இனி நிரந்தர முதல்வர் என்பதற்கான பச்சைக் கொடியாகும்.
எல்லாத் தேர்தல்களும் மக்களின் மனநிலையைக் காட்டுவதாக அமையும். அந்த மனநிலை இரண்டு கட்சிக்குமான சமநிலையாக இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஒரு பக்கமாக நிற்கும் போது கிடைப்பதுதான் மாபெரும் அங்கீகாரம், வரவேற்பு, நம்பிக்கை ஆகும். அந்த அடிப்படையில் பார்த்தால் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வெற்றி என்பது, அந்த இயக்கத்தையே ஒட்டுமொத்தத் தமிழகமும் நம்பி இருக்கிறது என்பதன் அடையாளமாகவே தெரிகிறது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தான் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பற்ற முறையில் சுயேச்சை சின்னங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று காலை முதல் வரத் தொடங்கி உள்ளன. 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இடங்களை திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றி இருக்கிறார்கள். சுயேச்சையாக நிற்பவர்களிலும் கழகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றியைப் பெற்றுள்ளார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் 9 மாவட்ட ஊராட்சிகளும் தி.மு.க கூட்டணியின் வசம் ஆகப் போகிறது. எதிரணியாக நின்ற அ.தி.மு.க கூட்டணி என்பது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே வெற்றியைப் பெற்றுள்ளது. இன்னும் சொன்னால் படுதோல்வியைத் தழுவி உள்ளது. அ.தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பாளர்களாக இருக்கும் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் இந்தத் தேர்தலில் தி.மு.க மீது பல்வேறு அவதூறுகளை வைத்தார்கள். மக்களை ஏமாற்றி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வென்றுவிட்டது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டார்கள், ஐந்து மாத காலத்தில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று சொன்னார்கள்.
கொடநாடு வழக்கில் தனது கழுத்து நெரிபடுமோ என்று பயந்து வாழும் பழனிசாமி, மக்களை பயமுறுத்தினார். இந்த ஆட்சியே கலையப் போகிறது, நான் மீண்டும் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டார். பயந்தவன், அடுத்தவரைப் பயமுறுத்துவதைப் போல! இவை அனைத்தையும் நிராகரித்து விட்டார்கள் மக்கள். வாக்காளப் பெருமக்களாகிய மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மட்டுமே பார்த்தார்கள். அவரும் மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தார். இந்த பரஸ்பர அந்நியோன்யம்தான் இந்த வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது. “உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்” என்றுதான் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலில் நல்லாட்சி மலர்வதற்கு வாக்களித்த நீங்கள் - உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கும் உங்களது பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும்” என்ற ஒரே ஒரு கோரிக்கையைத்தான் முதலமைச்சர் வைத்தார். கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றிய முக்கியமான வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார். 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பெருமையாகச் சொன்னார். 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அ.தி.மு.க சார்பில் வாதம் வைக்கப்பட்டது. அதனையும் ஆதாரங்களோடு வெளியிட்டார் முதலமைச்சர். அதன்பிறகு பதிலே இல்லை.
“ஆட்சிக்கு வந்த நான்கு மாத காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் 505இல் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு இந்தியாவிலேயே தி.மு.க அரசாக மட்டும்தான் இருக்க முடியும்” என்றும் முதலமைச்சர் சொன்னார். இதற்கும் அவர்களால் பதில் தர முடியவில்லை. “மக்களுக்காகவே சிந்திக்கிறோம். மக்களுக்காகவே செயல்படுகிறோம். மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம்.
உங்களில் ஒருவனாக -
உங்கள் சகோதரனாக -
கலைஞரின் மகனாக -
கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட ஒருவனாகச் செயல்படும் நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் தமிழ்நாடு வழிமொழிந் திருக்கிறது. அதன் அடையாளம்தான் இந்த மாபெரும் வெற்றி ஆகும்.
வெற்றிகள் குவியட்டும்! இந்த வெற்றிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கட்டும்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!