murasoli thalayangam
”சில லும்பன் கூட்டத்தால் சாக்கடையாகும் தமிழ்நாட்டு மேடைகள்” - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!
யாகாவாராயினும் நா காக்க ... என்று பேருந்துகளில் எழுதி வைத்திருக்கிறீர்களே? இது யாருக்காக?'' என்று சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் கேட்டார்!
"நாக்கு இருப்பவர்கள் அனைவருக்காகவும்" என்று பதில் சொன்னார் முதல்வர் கலைஞர்!
நாக்கு இருப்பவர்கள் அனைவரும் நா காக்க வேண்டும். நாவை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், அதனால் வரும் எதிர்வினையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னார் வள்ளுவர். எத்தனையோ கனிகள் இருக்க, காயை எடுப்பதைப் போல எத்தனையோ நல்ல சொற்கள் இருக்கும் போது இழிவான சொற்களை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டவரும் அவர்தான். ஆனால் இன்றைய தமிழகத்தில் சில இழிவான மனிதர்களும் தலைவர் ஆகிவிட்டதால், தங்களது தரத்துக்கு ஏற்ற வார்த்தைகளை பொதுவெளியில் பயன்படுத்துகிறார்கள். இதனை கருத்துச் சுதந்திரம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
எது கருத்துச் சுதந்திரம்? அது கருத்தாக இருந்தால் மட்டும்தான் கருத்துச்சுதந்திரம். எப்போது அவதூறாக மாறுகிறதோ அது கருத்துச் சுதந்திரம் ஆகாது. எப்போது ஆபாசமாக மாறுகிறதோ அது கருத்துச் சுதந்திரம் ஆகாது. எப்போது அது அருவருப்பாக மாறுகிறதோ அது கருத்துச் சுதந்திரம் ஆகாது. எப்போது அது மிரட்டலாக மாறுகிறதோ அது கருத்துச் சுதந்திரம் ஆகாது. எப்போது அது அராஜகமாக மாறுகிறதோ அது கருத்துச் சுதந்திரம் ஆகாது. ஒரு கருத்துக்கு எதிர்க் கருத்துச் சொல்வது மட்டுமே கருத்துச் சுதந்திரம். அந்தச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் கொலை மிரட்டல் விடுப்பதையும் கருத்துச் சுதந்திரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
‘ராஜீவ் காந்தியைக் கொன்றது போல கொல்வோம்' என்று ஒரு கட்சியின் மேடையில் பேசப்படுமானால் அது கொலை மிரட்டல். கொடூர மிரட்டல். அதனை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் மேடையில் அந்தக் கட்சியின் தலைவருக்கு முன்னால் ஒருவர் பேசுவார். அவரைக் கைது செய்யாமல் என்ன செய்வார்கள்? கைது செய்யாமல் இருந்தால்தான் தவறானது ஆகிவிடும். பேச்சுக்கு எல்லை இருக்கிறது. பேச்சுக்கு மட்டுமல்ல; அனைத்துக்கும் எல்லை இருக்கிறது. ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டதாலேயே அது அனைத்துக்குமான அனுமதி அல்ல. எதையும் பேசலாம் என்பதற்கான அனுமதி அல்ல. உங்களது கருத்தைச் சொல்வதற்கான அனுமதி மட்டும் தான் அது. கருத்து என்ற போர்வையில் கழிசடைத்தனத்தை அரங்கேற்றுவதற்கான அனுமதி அல்ல இது.
சாதியவாத, மதவாத, சுத்த இனவாதப் பெயர்களால் கிளம்பி இருக்கும் சில நச்சு சக்திகள் சமீபகாலமாக பொதுவெளியில் தாங்கள் நினைத்ததை, எந்த விதமான கூச்சமும் இல்லாமல் அரங்கேற்றி வருகிறார்கள். சமூக ஊடகங்களில் யாருடைய அனுமதியும் தேவையில்லை என்ற தைரியத்தில் நாற்றமெடுக்கும் வார்த்தைகளை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனை தங்களுக்கு சமூக ஊடகம் வழங்கிய அனுமதியாகவும், அங்கீகாரமாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். இதன் மீது வழக்குப் போட்டால், அவர்களும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு வருகிறார்கள். ஆபாசமான, அராஜகமான, மிரட்டல் தொனியிலான மிரட்டல்களை விடுப்பவர்கள் மீது வழக்குப் போட்டால், கைது செய்தால் சில நடுநிலை எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அரசாங்கத்துக்கு அறிவுரை சொல்லக் கிளம்பி விடுகிறார்கள்.
'கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள். அவர்கள் சொன்ன கருத்தை கருத்தால் வெல்லுங்கள்' என்று அரசாங்கத்துக்கு புத்திமதி சொல்கிறார்கள். ஆபாசமாகப் பேசியவர்களைக் கண்டிக்காத இவர்கள், அராஜகமான கொலை மிரட்டல் விடுப்பவர்களைக் கண்டிக்காத இவர்கள் - அரசாங்கத்துக்கு புத்திமதி சொல்வதுதான் கருத்துக் கொலைகள் ஆகும். தங்களை நடுநிலையாளர்களாகக் காட்டிக் கொள்வதற்காக ஆபாசமான, அராஜகமான பேச்சுகளை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும்தான் சிலரது பாணியாக மாறிக் கொண்டு இருக்கிறது. அதற்கு சில அப்பாவி இளைஞர்கள் விசில் அடிக்கிறார்கள். அந்த விசில் சத்தம் கேட்பதற்காக ஆபாசச் சொற்களும், அராஜகச் சொற்களும் அதிகமாக உச்சரிக்கப்படுகின்றன.
இத்தகைய லும்பன் கூட்டத்தை உற்பத்தி செய்வது அரசியல் இயக்கம் ஆகாது. இந்த லும்பன் கூட்டத்துக்கு இதைவிட ஆபாசமாக, அராஜகமாகப் பேசும் இன்னொருவன் வரும் வரை தான் இருக்கும். இதைவிட கூடுதல் ஆபாசமும், அராஜகமும் கிடைத்துவிட்டால் அங்கே போய்விடுவார்கள். போதை, கூடுதல் போதையில் கொண்டு போய்விடுவதைப் போல இந்த நச்சு சக்திகள் தமிழ்நாட்டு மேடைகளை சமீப காலமாக சாக்கடையாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொய்யையும் புனை சுருட்டையும், ஆபாசத்தையும் அசிங்கத்தையும், அராஜகத்தையும் கொலை மிரட்டலையும் அரசியலாக சிலர் நினைக்கத்தொடங்கி இருப்பது அரசியலுக்கு ஆபத்தானது மட்டுமல்ல; அவர்களுக்கே ஆபத்தானது. கை தட்டியவன், விசில் அடித்தவன் வீட்டுக்குப் போய்விடுவான். மறுநாள் காலையில் வேலைக்குப் போய்விடுவான். ஆனால் மேடையில் கொக்கரித்தவன் மாட்டிக் கொள்வான். தப்பிக்க முடியாது.
இத்தகைய ஆட்கள், அவர்கள் சொன்ன சொல்லுக்குப் பொறுப்பேற்றே ஆக வேண்டும். அதுதான் ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு ஆகும். இத்தகைய கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கும் சிலரும், அத்தகைய பேச்சுகளுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்வார்களா? ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'- என்கிறார் வள்ளுவர். ‘ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்' என்கிறார் கலைஞர். குறளிவித்தைக்காரர்களுக்கு குறளோவியம் தெரியுமா?
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?