murasoli thalayangam
’பிரதமரின் உண்மையான மனதின் குரல் இதுவாகதான் இருக்க வேண்டும்’ -மோடிஅரசுக்கு சுட்டிக்காட்டிய முரசொலி நாளேடு
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள் - என்று இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் எழும்பிய குரல் இன்னமும் பா.ஜ.க. அரசின் மனதை மாற்றவில்லை என்பது வருத்தமளிப்பதாக உள்ளது!
இந்தியா விவசாயிகள் நாடு என்று சொல்லப்படுகிறது. அத்தகைய விவசாயிகள் நாட்டில்தான் இந்த நாட்டின் விவசாயிகள் பத்து மாத காலமாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நிலத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய அவர்களை சாலைகளுக்கு அழைத்து வந்து படுக்க வைத்துவிட்டது பா.ஜ.க. அரசு. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடக்கில் சில மாநிலங்களில் எழும்பிய எழுச்சியானது, இன்று இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது. இந்த போராட்டக் களமானது காலப் போக்கில் எப்படி எல்லாம் பரவப் போகிறது என்பதைக் கணிக்க முடியவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க. எதிர்கொள்ளும் போது அக்கட்சிக்கு எதிராக பூதாகரமாக இருக்கப்போவது இந்த விவசாயிகள் போராட்டமாகத்தான் இருக்கும். மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி ஓராண்டு ஆகிவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் தொடங்கி பத்து மாதங்கள் ஆகிவிட்டன. இவை இரண்டையும் நினைவுகூரும் விதமாக கடந்த 27ஆம் தேதியை இந்தியா முழுமைக்குமான பத்து மணிநேர கடையடைப்புப் போராட்டமாக விவசாயிகள் அறிவித்து இருந்தார்கள்.
தலைநகர் டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகமாக நடந்தன. மறியல் களமாக தமிழகம் மாறி இருந்தது. அதிலும் குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கிப் போயிருந்தது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தலைநகர் டெல்லிக்குள் நுழைய முடியாமல் நின்று கொண்டு இருந்தன. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறையும் இன்னொரு பக்கம் தடுப்புச் சுவரை அமைத்து இருந்தது. விவசாயிகளும் - காவல்துறையும் நேருக்கு நேர் நின்றார்கள் டெல்லியில். "விலகிச் செல்லுங்கள்! இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் மூடப்படுகிறது. என்னை மட்டும் தடுத்து நிறுத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டபடி ஒரு மூதாட்டி காவல்துறை தடுப்பை மீறிச் சென்றார்.
அத்தகைய போராட்டமாக 27ஆம் தேதி போராட்டம் அமைந்திருந்தது. 19 அரசியல் கட்சிகள், 500க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தின் குரல், இன்னுமா பா.ஜ.க. அரசின் செவிகளில் விழவில்லை? 2014 தேர்தலுக்கு முன்னால் பிரதமர் ஆவதற்கு முன்னால் மோடி என்ன எல்லாம் பேசினார்? பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் விவசாயிகள் வாழ்க்கை செழிக்கும் என்று சொன்னார். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நல்லகாலம் பிறக்கப் போகிறது என்று சொன்னார். விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கப் போகிறது என்றார். இடைத்தரகர்கள் அனுபவிப்பதும் சேர்த்துக் கிடைக்கும் என்றார். உற்பத்திக்கு செய்யும் செலவைவிட கூடுதலாக 50 சதவிகிதம் கிடைக்கும் என்றார். இவை அனைத்தையும் உள்ளடக்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்துவோம் என்றார்.
குறைந்தபட்ச ஆதார விலைக்கு பா.ஜ.க. உத்தரவாதம் தரும் என்றார். இவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒன்றல்ல; இரண்டல்ல; ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. விவசாயிகள் தற்கொலைதான் அதிகம் ஆனதே தவிர, விலை கிடைக்கவில்லை. விவசாயியின் உயிர் குறைந்தபட்சம் ஆனதை மட்டுமே பார்க்கிறோம். இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை என்பது மருந்துக்குக் கூட இல்லை. வாய் வார்த்தைக்குக் கூட இல்லை. அதனால்தான் அந்த சட்டங்களை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த விவசாயத் தொழிலாள மக்களுக்கு 7500 ரூபாய் கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்தவில்லை. தமிழ்நாடு அரசு, 4000 ரூபாயை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி இருக்கிறது.
மிக மிக நிதி நெருக்கடியான நேரத்திலும் இது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு ஓரவஞ்சனையுடன் மட்டுமே செயல்பட்டது. பணம் கேட்டால் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் அவர்கள்தான், விவசாயத் தொழிலாளர்களுக்கு 7500 ரூபாயைக் கூடக் கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள். ஒரு பக்கம் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது. இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ஏற்றுவது. ஒரு பக்கம் அமெரிக்கா வரைக்கும் சென்று முதலீடுகளை ஈர்ப்பது. இன்னொரு பக்கம் சொந்த நாட்டு தொழில்களைச் சிதைப்பது. கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் வழங்குவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் விவசாயிகளை ரோட்டில் அலைய விடுவது.
இப்படிப்பட்ட இரண்டகம் தொடருமானால் அதனால் ஏற்படும் பாதிப்பு என்பதை பா.ஜ.க.தான் அனுபவித்தாக வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதுதான் பிரதமரின் உண்மையான மனதின் குரலாக இருக்க வேண்டும். ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பது பிடிக்கவில்லையா என்று பிரதமர் அடிக்கடி கேட்பார். அது உண்மையானால் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று அதனை அவர் நிரூபிக்கவேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!