murasoli thalayangam
’நாங்க யோக்கியமாதான் இருக்கோம்’ எனக் கூறி முட்டு கொடுத்து மாட்டிக்கொண்ட PM Cares - முரசொலி தாக்கு!
பட்டப்பகலில் அரசாங்கத்தை வைத்து மொத்த நாட்டு மக்கள் தலையிலும் மிளகாய் அரைக்க முடியும் என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டிவிட்டார்கள். பி.எம்.கேர்ஸ் நிதி என்பது தொடங்கப்பட்டதை மேலோட்டமாகப் பார்த்தாலே இது இந்திய பிரதம அமைச்சர் நிவாரண நிதி என்பது தெரியும். ஒன்றிய அரசாங்கத்தின் முத்திரை அதில் இருந்தது. அந்த முத்திரையை தனியார் யாரும் பயன்படுத்த முடியாது. அரசாங்கம் மட்டும்தான் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும். பிரதமர் மோடியும் முழுமையாக வணங்கி நின்றார்.
தனியார் நிறுவனத்துக்கு ஒரு நாட்டின் பிரதமர் விளம்பர அம்பாசிட்டராக இருக்க முடியாது. இருக்கவும் மாட்டார்(!) என்றும் நம்புவோம். அந்த அறக்கட்டளையில் யார் யார் இருந்தார்கள் தெரியுமா? இதன் தலைவராக பிரதமர் இருப்பார் என்று ஒன்றிய அரசே அறிவித்தது! இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இருந்தார்! இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருந்தார்! இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்தார்! இவர்கள் மூவரும் பிரதமருக்கு அடுத்ததாக ஒன்றிய அமைச்சரவையில் இருக்கும் மூன்று பேர். ஆக்கவும் அழிக்கவும் அதிகாரம் படைத்தவர்கள். பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளராக இருந்த பிரதீப்குமார் ஸ்ரீவாஸ்தவா இதன் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வருகிறார்.
இதற்கு மேலும் இது அரசாங்க அமைப்பு இல்லை என்றோ, பிரதமருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் அப்படித்தான் சொல்கிறது ஒன்றிய அரசு. இதனை நம்மையும் நம்பச் சொல்கிறார்கள். "பி.எம். கேர்ஸ் நிதியம், ஒன்றிய அரசுக்குச் சொந்தமானது இல்லை. அந்த நிதியம் நன்கொடையாக வசூலித்த தொகை ஒன்றிய அரசின் நிதியத்துக்குச் செல்லவில்லை" என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இப்படிச் சொல்லி இருப்பவர் யார் தெரியுமா? இந்த நிதியத்தின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வரும் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் பிரதீப்குமார் ஸ்ரீவாஸ்தவாதான் இப்படிச் சொல்லி இருக்கிறார். "இந்த நிதியத்துக்கு மதிப்பூதிய அடிப்படையில் நான் பணியாற்றி வருகிறேன். நான் ஒன்றிய அரசின் அதிகாரியாக இருந்தாலும் பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்" என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
இவரைப் பணியாற்ற அனுமதித்தது யார்? பிரதமர் அலுவலக அதிகாரியை இப்படி எல்லா இடத்திலும் பணியாற்ற அனுமதித்து விடுவாரா பி.எம்.? கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒன்றிய அரசு என்ன செய்தது என்ற கேள்வி பூதமாக எழுந்தது. அப்போது இவர்கள், ‘எங்களிடம் பணமில்லை’ என்றார்கள். வங்கிகளில் கடன் வாங்கித் தருகிறோம் என்றார்கள். இந்தக் கேள்வி அதிகமாக எழுந்ததும், ஏதோ மக்களுக்கு பணம் கொடுக்கப் போவதைப் போல வசூல் செய்தது ஒன்றிய அரசு. அப்போது அறிவிக்கப்பட்டதுதான் பி.எம். கேர்ஸ் ட்ரஸ்ட் ஆகும். ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால சூழ்நிலை நிதியம்’ என்று இதற்குப் பெயர். இதற்கு நன்கொடைகள் வழங்குமாறு பிரதமரே 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கேட்டுக் கொண்டார். ரூ.2.25 லட்சத்தில் இந்த நிதியம் தொடங்கப்பட்டதாகவும் - மார்ச் 27 முதல் 31வரை மட்டும் ஐந்தே நாளில் 3,076 கோடி ரூபாய் சேர்ந்து விட்டதாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது.
(2020) பி.எம்.கேர்ஸ் நிதி மூலமாகக் கிடைத்த பணத்தில் மாநிலங்களுக்கு 3 மடங்கு வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டதாக ஒன்றிய அரசு கடந்த மே 18ஆம் தேதி அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது. இந்த நிதியை வைத்து ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கப் போவதாகவும் சொன்னார்கள். இப்படி எத்தனையோ அறிவிப்புகளைச் செய்தார்கள். இப்போது செய்துள்ள அறிவிப்புதான் அதிர்ச்சியாக இருக்கிறது, ‘பி.எம்.கேர்ஸ் நிதியம் ஒன்றிய அரசுக்குச் சொந்தமானது அல்ல’! என்பதாகும்! "பி.எம்.கேர்ஸ் நிதியத்தை இந்திய அரசுக்குச் சொந்தமானதாக அறிவிக்க வேண்டும்' என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சம்யக் கங்வால் என்பவர் வழக்கு தாக்கல் செய்கிறார். அதற்கு பிரதமர் அலுவலகத்திலும், இந்த பி.எம்.கேர்ஸ் நிதியத்திலும் பணியாற்றும் ஒரு அதிகாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கிறார். ‘பி.எம். கேர்ஸ் நிதியம் ஒன்றிய அரசுக்குச் சொந்தமானது அல்ல’ என்று சொல்லிவிட்டு இவர் சும்மா இருந்திருக்க வேண்டும்.
ஆனால் என்ன செய்கிறார் என்றால், பி.எம்.கேர்ஸ் நிதியம் யோக்கியமாகத்தான் செயல்படுகிறது என்று அந்த அதிகாரி முட்டுக் கொடுத்து பக்கம் பக்கமாக பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறார். இது வெளிப்படையாக இயங்குகிறது, வரவு செலவு கணக்கு ஆடிட் செய்யப்பட்டுவிட்டது, வெளிப்படையாகத்தான் நிதி பெறுகிறது, இவை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது - என்று இவர் பி.எம்.கேர்ஸ் நிதியமாகவே மாறி விளக்கம் அளிக்கிறார். ‘இது ஒன்றிய அரசுக்குச் சொந்தமானதும் அல்ல, அரசின் உதவியுடன் செயல்படும் தனி அமைப்பும் அல்ல, அதனால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வராது’ என்றும் அவர் சொல்லி இருக்கிறார். அரசுக்குச் சொந்தமானதும் அல்ல, அரசின் உதவியுடன் செயல்படும் தனி அமைப்பும் அல்ல என்றால் அது தனியாருக்குச் சொந்தமானது ஆகும். அந்தத் தனியார் யார் என்பதுதான் கேள்வி. அந்த தனியார், ஒன்றிய அரசின் இலட்சினையைப் பயன்படுத்த முடியுமா? என்பது அடுத்த கேள்வி.
பிரதமரே இப்படி ஒரு அறக்கட்டளையை தனது பெயரில் உருவாக்கி பணம் திரட்ட முடியுமா? என்பதே வெளிப்படையான கேள்வி. பிரதமர் நிவாரண நிதி என்று காலம் காலமாக இருக்கிறது. அதைத் தாண்டி இன்னொரு நிதியம் எதற்காகத் தொடங்கப்பட்டது? கொனோரா தடுப்புக்காகத் தனி நிதியம் வேண்டும் என்று நினைத்திருந்தால், அதனை அதன் பெயரில் தொடங்கி இருக்க வேண்டும். அப்படியே இன்னொரு நிதியம் தொடங்கினாலும், அதனை அரசுக்குள் தொடங்கி இருக்கலாம். அரசு போல, ஆனால் அரசு அற்றதாகத் தொடங்கியது ஏன்? யார் பணம் கொடுக்கிறார்கள்? எதற்காகக் கொடுக்கிறார்கள்? யார் இதனைப் பயன்படுத்துகிறார்கள்? இவர்களது நாற்காலிகள் காலியானால் யார் இந்த நிதியைக் கையாள்வது? அல்லது யாருக்குப் போகும்? இப்படி கேட்டுக்கொண்டே போகலாம்! இப்படி வசூலான பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையாவது அறிவிக்க வேண்டாமா?
நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்ற வழக்கு அது. ஒன்றிய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம் என்று சொல்லி இருக்கிறார்கள். 50 ஆயிரத்தை ஒன்றிய அரசு தரப்போவதாக நினைத்துவிடாதீர்கள்? ‘நாங்கள் கொடுத்துள்ள வழிகாட்டுதல்படி மாநில அரசுகள் வழங்கும்’ என்பதுதான் அவர்களது இலட்சணம். 50 ஆயிரத்தை மாநில அரசு கொடுக்கும் என்று சொல்வதற்கு எதற்காக ஒரு ஒன்றிய அரசு? இந்த 50 ஆயிரத்தை கொடுக்கக் கூட முடியாமல் எதற்காக பி.எம்.கேர்ஸ் வைத்துள்ளீர்கள்? விளைவுகள் ஏற்படுத்தும் சந்தேகங்கள்தான் அதிகமாகி வருகிறது! பா.ஜ.க. அரசு, எத்தகைய அரசு என்பதற்கு உதாரணம் இது ஒன்றே போதும்!
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்