murasoli thalayangam
நீட் மசோதாவால் எந்த பயனும் இல்லையா? பாரதியின் இந்த வரிகளை படிக்கலாமே! அதிமுக-பாஜகவை சாடிய முரசொலி நாளேடு!
‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் எழுந்த எதிர்ப்புக் குரலானது இன்றைய தினம் இந்தியா முழுமைக்கும் எழுந்து வருகிறது. ‘நீட்’ தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகுதான் இது முடிவுக்கு வரப்போகிறது!
‘நீட்’ என்பது மாபெரும் பலி பீடம் என்பதும், அதனை ஆரம்பக் கட்டத்தில் இருந்தே தமிழகம் எதிர்த்து வருகிறது என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும். ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கவும் - சில குறிப்பிட்ட கல்வி முறையில் படித்த மேட்டுத்தர, பணக்கார வர்க்கம் வசதி பெற பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்ட தேர்வுதான் ‘நீட்’ என்பதும் - தனது ஊழல் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.கவின் பாதம் தாங்கியான பழனிசாமி கூட்டம் அதற்கு தலையாட்டி விட்டது என்பதும் பேருண்மை.
ஒரு பக்கம் எதேச்சதிகாரமும் - இன்னொரு பக்கம் அடிமைத்தனமும் இணைந்து கொண்டு வந்த தேர்வுதான் இந்த ‘நீட்’ தேர்வு. இதனை ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்க்கும் திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியைக் கைப்பற்றிய பின்னால் சட்டப் போராட்டத்தைத் தொடங்கி விட்டது. அதற்கான சட்டமசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. பா.ஜ.க. நீங்கலாக அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளாலும் இச்சட்டமசோதா ஆதரிக்கப்பட்டது. இந்தப் புதிய சட்ட முன்வடிவில், மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த முன் மொழியப்படுகிறது.
மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது. இதனைப் பார்த்த ‘நீட்’ ஆதரவு நச்சு சக்திகள், இந்த சட்ட மசோதாவால் எந்தப் பயனும் இல்லை. இது அகில இந்தியப் பிரச்சினை என்று சொன்னார்கள். எல்லா மாநிலமும் ஏற்றுக் கொள்ளும்போது உங்களுக்கு மட்டும் என்னவாம் என்றார்கள். இதோ தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு அலை இப்போது பல்வேறு மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கி இருக்கிறது. ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்ததைப்போல நமது மாநிலத்திலும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தீர்மான மும் சட்டமும் கொண்டு வர வேண்டும்' என்று மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா பொக்கோ, கொல்கத்தாவில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது. வங்காளத்து மாணவர்களின் நலனைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டின் முடிவை நாம் எடுத்தாக வேண்டும் என்றும், இதேபோல் அனைத்து மாநிலங்களும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இக்கூட்டம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரை நாம் எழுப்பிய குரலை, அதேபோல் அவர்களும் எழுப்பி இருக்கிறார்கள். ‘நீட்’ எனது வங்காளத்திற்கு எதிராக, வங்க மக்களுக்கு எதிராக, மாநிலக் கல்விக்கு எதிராக, ஏழைகளுக்கு எதிராக, நடுத்தர வர்க்கத்திற்கு எதிராக, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தனது சொந்தத் தாயகத்தில் மருத்துவராக வேண்டும் என்ற வங்காள மக்களின் கனவுகளைச் சிதைக்கும் தேர்வு" என்று அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
‘இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து செயல்படும் ‘நீட்’ பயிற்சி மையங்களும், தேசியத் தேர்வு மையமும், சி.பி.எஸ்.இ.யும் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவைத் திருடுகிறார்கள்' என்று அக்கூட்டம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது. ‘நமது குழந்தைகள் டில்லிக்கும், இந்தி மொழிக்கும் அடிமைப்படப் பிறந்தவர்கள் அல்ல. எது நம்முடையதோ அது நம்முடையதே! வங்காள மக்களின் வாய்ப்புகளை வேரற்ற ஒட்டுண்ணிகளால் திருட முடியாது. இது வங்காளத்தின் எதிர்காலத்துக்கான போராட்டம்' என்று பங்ளா பொக்கோ அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் கார்க்கா சட்டர்ஜி சொல்லி இருக்கிறார். இப்படியே விட்டால் அனைத்துத் தேர்வுகளையும் இந்தி மயமாக்கிவிடுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மாநில சுயாட்சிக் குரலையும் அவர் எழுப்பி இருக்கிறார்.
பங்ளா பொக்கோ அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினரான டாக்டர் அரிந்தம் பிஸ்வாஸ் பேசும்போது, வங்காளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் போராட்டம் வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். இந்தி பேசாத மாநில மக்களின் உறுதிமிக்க தளபதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இருப்பதாக இக்கூட்டத்தில் பேசியவர்கள் புகழாரம் சூட்டி இருக்கிறார்கள். இதே போன்ற எழுச்சி மராட்டிய மாநிலத்திலும் எழுந்துள்ளது. ‘நீட்’ தேர்வு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அநீதி இழைப்பதோடு சமத்துவமின்மையையும் ஏற்படுத்துவதால் தமிழகத்தின் வழியில் மராட்டிய மாநிலமும் ‘நீட்’ தேர்வை நீக்க வேண்டும்' என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு மாநில காங்கிரசு தலைவர் நானா படோல் கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரசு என்பது அங்கு ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சிதான்! இந்த கருத்துக்கு அங்கு சட்ட வடிவம் கொடுக்கப்படும் சூழல் தெரிகிறது!
இது எதுவும் தெரியாமல், ‘நீட்’ மசோதாவால் எந்தப் பயனும் இல்லை' என்று சேலத்தில் பதுங்கி இருக்கும் பழனிசாமி நேற்றுக் கூடச் சொல்லி இருக்கிறார். அவர் மட்டுமல்ல; பாரதிக்கு விழாக் கொண்டாடும் பா.ஜ.க.வினரும் இந்த வரிகளைப் படிக்கலாம்.
‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!