murasoli thalayangam
நோய் முற்றி காப்பாற்ற முடியாத சூழலில் நாடு: எதிர்க்கட்சிகளின் போராட்டம்தான் கடைசி ஸ்கேன் அறிக்கை -முரசொலி
ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் எடுத்து வரும் நடவடிக்கைகளால் நோய் முற்றி, காப்பாற்ற முடியாத சூழலுக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்பதற்கு கடைசி ஸ்கேன் அறிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது. யாருடைய விமர்சனங்களையும் பற்றிக் கவலைப்படாத அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கலாம். அதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா? வெளிக்கட்சி விமர்சனங்களை மட்டுமல்ல; உள்கட்சி ஆலோசனைகளைக் கூட ஏற்காத தலைமையாக பா.ஜ.க. இருக்கலாம். அதற்காகச் சொல்லாமல் இருக்க முடியுமா?
பா.ஜ.க. தலைமை நடந்து கொள்ளும் சூழல் என்பது பா.ஜ.க. என்ற தனிப்பட்ட கட்சிச் சூழலாக இருக்குமானால் நாம் உட்பட யாரும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அவர்கள் ஒன்றியத்தை ஆளும் பொறுப்பில் இருக்கிறார்கள். அந்தப் பொறுப்பின் மூலமாக சிறுதுளிப் பொறுப்புடனாவது நடந்து கொள்கிறார்களா என்றால் இல்லை என்பதே எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அளிக்கும் ஒட்டு மொத்தமான பதில். இந்தப் பதிலில் உள்ள நியாயங்கள், பா.ஜ.க.வினர் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும். கடந்த ஆகஸ்ட் 20 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட 19 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை காணொலி மூலமாக நடத்தினார் காங்கிரசு தலைவர் சோனியாகாந்தி. அக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை மட்டும் பார்த்தாலே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும், துறைகளும் மிக மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதை உணரலாம். நோய் முற்றி இருக்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடியாக அந்தத் தீர்மானங்கள் அமைந்திருந்தன. கொரோனா என்ற பெருந்துயர் காலத்தில் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களைக் காக்கும் நடவடிக்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. தடுப்பூசி போடுவதில் கூட அரசியல் செய்தது. தடுப்பூசியை தயாரிப்பதில் கூட சிலரது ஏகபோகத்துக்கு பணிந்தது. தடுப்பூசியைக் கூட தட்டுப்பாடு உள்ளதாக வைத்துக் கொண்டது. தடுப்பூசியை மாநிலங்களுக்கு வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டியது.
கொரோனா காலத்து ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமக்களுக்கு ஏதாவது நிதி உதவியை ஒன்றிய அரசு தந்ததா என்றால் இல்லை. மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் தலா 4000 ரூபாய் கொடுத்தது. 14 விதமான மளிகைப் பொருட்களைக் கொடுத்தது. ஆனால் கொரோனா தோன்றிய காலத்தில் இருந்து ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு என்ன செய்தது? எதுவும் செய்யவில்லை. இனிமேலாவது தாமதம் செய்யாமல் 7500 ரூபாய் தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. பெட்ரோல் - டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்தச் சூழலில் ஒரு மக்கள் நல அரசாங்கம் என்ன செய்யவேண்டும்? மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க தனது வரியையாவது ஓரளவு குறைக்க வேண்டும். தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான விலையில் 3 ரூபாய் குறைத்துள்ளது. அதை ஒன்றிய அரசு செய்தாக வேண்டும். அதே போல் எரிவாயு, சமையல் எண்ணெய்களின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது.கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் இந்திய நாட்டின் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் இதனைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் கோரிக்கையின் நியாயத்தை உணரவில்லை. அவர்கள் கேட்கும் ஒரே கோரிக்கை, குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதுதான். அதனை இந்தச் சட்டத்தில் சேர்க்க ஏன் பா.ஜ.க. அரசு மறுக்கிறது? இதன் மூலமாக யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது?
இந்த சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான சட்டம் என்று விவசாயிகள் சொல்வது உண்மை என்பதையே பா.ஜ.க. அரசு நித்தமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. பிரதமர் நேரு காலத்திலிருந்து இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக் கொண்டு இருப்பதைப் போல பொருளாதாரச் சீரழிவு வேறு இருக்க முடியாது. எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்க முடியாதவர்கள் அவர்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் விற்பது மட்டும்தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதல் இருக்கும் தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். சிறு-குறு நிறுவனங்கள் மூலமாகத்தான் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; பொது மக்களின் தன்னிறைவும் அடங்கி இருக்கிறது. ஆனால் சிறு - குறுநிறுவனங்களை மதிப்பதும் இல்லை. அதற்கு உதவுவதும் இல்லை. இந்திய நாட்டின் அரசியல் மையச் சக்திகளை வெளிநாட்டு நிறுவனம் மூலமாக வேவு பார்த்த கொடுமையும் இந்த தேச பக்த திலகங்கள் ஆட்சியில்தான் நடக்கிறது.
பெகாசஸ் செயலி என்பது, இந்திய ஜனநாயகத்தை செயல்பட விடாமல் தடுக்கும் சதித்திட்டத்தின் மையப் புள்ளியாக மாறிவிட்டது. அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூட துணிச்சல் இல்லை. பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுமானால், நாடாளுமன்றத்தையே நடத்தாமல் கூடப் போகலாம் என்று நினைத்தது பா.ஜ.க. ரபேல் பேர ஊழலை நாடு மறக்கவில்லை. பா.ஜ.க.வின் ஊழலை உலகுக்கு உயரப் பறந்து காட்டியது ரபேல் விமானங்கள். அரசியலில் நியாயம் பேசுபவர்கள், பா.ஜ.க. அரசுடன் முரண்படுபவர்கள் அனைவரும் தேசத்தின் எதிரிகள் என்ற புதிய வியாக்கியானம் மொழியப்படுகிறது. பா.ஜ.க.வின் எதிரிகள் மீது தேசத் துரோகச் சட்டங்களை ஏவுவது அதிகமாக நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களது கைதுகள் அச்சம் ஊட்டுவதாக உள்ளது. சந்தேக மரணங்களின் தொகை அதிகரித்து வருகிறது.
இவை அனைத்துக்கும் காரணம், ஜம்மு - காஷ்மீரில் நினைத்ததைச் செய்துவிட்டோம். அதேபோல எங்கும் செய்யலாம் என்ற துணிச்சல்தான். அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டு உள்ளார்கள். தேர்தல் நடத்துவதைப் போன்ற நாடகம்தான் நடத்தப்படுகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஜனநாயகமற்ற - சிந்திக்கும் திறனற்ற - அடிமை மனோபாவம் உள்ள ஒரு இந்தியச் சமூகத்தை உருவாக்கத் தேவையான முன்னெடுப்புகளை பா.ஜ.க. அரசு செய்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை, அரசியல் அறிஞர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை எவரும் பொருட்டல்ல. காப்பாற்ற முடியாத காலத்தை நோக்கி நாட்டைக் கொண்டு சென்றுள்ளது பா.ஜ.க. அரசு. அந்த அபாயத்தை கருப்புக் கொடி மூலமாகக் காட்டியிருக்கிறது இந்த ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!