murasoli thalayangam
“காலத்தின் தேவையை.. மக்களின் தேவையை.. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் தி.மு.க அரசு” : முரசொலி புகழாரம் !
முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (18-09-2021) வருமாறு:
‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்துள்ளதை நாட்டு மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார்கள். இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒரே வேண்டுகோளாக இப்போது இருக்கிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இரண்டு முறை அனுப்பியும் அவர்களால் ஒன்றிய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற முடிய வில்லை. அதற்கு அவர்களது அரசியல் இயலாமையே காரணமாக அமைந்தது. இன்னும் சொன்னால், அவர்களிடம் ஒரு கள்ளத்தனம் இருந்தது.
ஒன்றிய அரசையும் பகைத்துக் கொள்ளாமல் நாட்டு மக்களை எப்படி ஏமாற்றுவது என்பதுதான் அது. இவர்கள் அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிய செய்தியைக் கூட மக்களுக்குச் சொல்லாமல் மறைத்தது அ.தி.மு.க அரசு. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ஒன்றிய அரசின் வழக்கறிஞர்தான் இந்த உண்மையை நீதிமன்றத்தில் சொன்னார். அதன்பிறகு, சட்டமன்றத்தில் தி.மு.க கேள்வி எழுப்பிய பிறகுதான் அன்றைய சட்ட அமைச்சர் ஒப்புக்கொண்டார். இப்படி ‘நீட்’ தேர்வில் அ.தி.மு.க நடத்திய நாடகங்கள் அதிகம்.
இப்போதும், ‘நீட்’ தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியை நோக்கி ஓங்கிக் குரல் கொடுக்காமல், ‘நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று தி.மு.க மாணவர்களை நம்பவைக்கிறது’ என்று தி.மு.க மீது பாய்ந்து கொண்டு இருக்கிறது. ‘நீட்’ தேர்வைப் பார்த்து மாணவர்கள் பயப்படுவதைவிட பா.ஜ.கவைப் பார்த்து அ.தி.மு.க அதிகம் பயப்படுவதையே இது காட்டுகிறது.
நாங்களும் இப்படி மசோதா கொண்டு வந்தோம் என்று அ.தி.மு.க. சொல்வதைப் பார்த்தால் சிரிப்பாய் இருக்கிறது. எப்படி கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்த மசோதா வலிமை பெறும். நோக்கத்தைப் போலவே அது உருப்பெற்று வந்த வழிமுறை மிக முக்கியமானது.
காலத்தின் தேவையை, மக்களின் தேவையை இது பிரதிபலிக்கிறதா என்பது தான் முக்கியமானது. காலத்தின் தேவையை, மக்களின் தேவையை, மக்களின் எண்ணத்தை தி.மு.க அரசு கொண்டு வந்துள்ள மசோதா பிரதிபலிக்கிறது. அதனை இந்த மசோதாவின் நோக்கக் காரண விளக்க உரையே தெளிவாக உணர்த்தியும் விடுகிறது.
இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மசோதாவை ஏன் உருவாக்கினோம், எப்படி உருவாக்கினோம் என்பதை விளக்கி இருக்கிறார். இலட்சக்கணக்கான மக்களின் எண்ணங்களைக் கேட்டு உருவாக்கப்பட்ட மசோதா இது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 10.6.2021 அன்று இக்குழு அமைக்கப்பட்டது. மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021 அன்று அறிக்கை அளித்தது. ‘நீட்’ தேர்வினால், சமுதாயத்தில் பின் தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெற முடியவில்லை என்பதை புள்ளிவிபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்று சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே - அந்தத் தகுதி, திறமை கூட இந்தத் தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு சொன்னது.
இதனடிப்படையில் ‘நீட்’ தேர்வை இக்குழு நிராகரித்தது. இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் அமைத்தார். அவர்கள் ஒரு சட்டத்தை வடிவமைத்தார்கள். அதுதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தை தயாரிப்பதற்கு முன்னால் இத்தனை முயற்சிகள் செய்யப்பட்டது. இது எதையும் செய்யாமல் அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்தது அ.தி.மு.க அரசு. அதனால் தான் அது குடியரசுத் தலைவரால் புறக்கணிக்கப்பட்டது.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்து மசோதாவுக்கும் தி.மு.க ஆட்சிக் கால மசோதாவுக்கும் என்ன வேறுபாடு என்பதை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் விரிவாக எழுதி இருக்கிறது. இரண்டு முறை அ.தி.மு.க அரசு தோல்வி அடைந்திருந்தாலும் இதனை தி.மு.க கையில் எடுக்க தைரியம் வந்ததற்குக் காரணமாக ஒரு முன்னுதாரணத்தை ‘இந்து’ நாளேடு காட்டி உள்ளது. 2005 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்ய ஜெயலலிதா நினைத்தார்.
ஆனால், அதனை உயர்நீதிமன்றம் தடை செய்து விட்டது. ஆனால் அதேசெயலை சட்டபூர்வமாக அடுத்து வந்த முதலமைச்சர் கலைஞர் நிறைவேற்றிக் காட்டினார் என்பதை ‘இந்து’ நாளேடு நினைவூட்டி உள்ளது. புதியசட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க அரசு. இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அத்தகைய உறுதி இப்போதும் இருப்பதாக ‘இந்து’ ஏடு சொல்லி இருக்கிறது.
“2021 மசோதாவில் உள்ள புதிய அம்சம், இது நீதிபதி ஏ.கே.இராஜன் அறிக்கையிலிருந்து உத்வேகம் பெறுகிறது. ஏழைகள் மற்றும் கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது ‘நீட்’ சமூக-பொருளாதார தாக்கம் குறித்து இராஜன் குழு ஆய்வு நடத்தி உள்ளது. அதன்பெரும்பகுதி மசோதாவின் முன்னுரையி லும் அதன் பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையிலும் காணப்படுகிறது. ‘நீட்’ ஒரு சமமான சேர்க்கை முறை அல்ல, அது உயரடுக்கு மற்றும் பணக்காரர்களுக்குச் சாதகமானது. மேலும் அதன் தொடர்ச்சி மாநில சுகாதாரத்துறை வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். கிராமப் புறங்களுக்குப் போதிய எண்ணிக்கையில் விருப்பமுள்ள மருத்துவர்கள் இல்லாததால், ஏழைகள் படிப்புகளில் சேர இயலாது” என்று இதில் கூறப்பட்டுள்ளதை இந்து ஏடு சுட்டிக் காட்டி உள்ளது.
உச்சநீதிமன்றமோ, குடியரசுத் தலைவரோ எழுப்பும் கேள்விகளுக்கு முழுமையான பதில் நீதியரசர் ஏ.கே.இராஜன் ஆணையத்தின் அறிக்கையில் உள்ளது. அதனால் இந்த மசோதா நிச்சயம் வெல்லும்! ஒரு அரசாங்கத்தின் ஒரு கட்சியின் கருத்தாக இல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக இந்த மசோதா இருப்பதால் நிச்சயம் வெல்லும்!
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!