murasoli thalayangam
“தனது குரலை, அனைவரும் உச்சரிக்கும் குரலாக மாற்றும் முதலமைச்சர்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (27-08-2021) தலையங்கம் வருமாறு:
“நீங்கள் ஒருமுறை இறப்பிற்காகப் பயப்படுபவர்கள். ஆனால் நானோ பலமுறை கொல்லப்பட்டவன். சூழ்ச்சிகளாலும், நயவஞ்சகத்தாலும் என் உடல் மட்டுமே மரணத்தைக் காணவில்லையே தவிர எனது உயிர் பலமுறை மரணித்து உயிர்ப்பித்துள்ளது’’ என்று பிரகடனம் செய்து கொண்டவர்தான் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்!
“ஒவ்வொருவருக்கும் மலர் வளையம் வைக்கும்போது எனக்கு வைத்துக்கொள்வதாக நினைத்துக் கொள்பவன்’’ என்று துணிச்சலாய் சொல்லும் தைரியம் அவருக்கு மட்டும்தான் இருந்தது! இதோ! அவர் இன்னொரு வடிவமாய் உயிர்ப்பித்துக் காட்சி அளிக்க வங்கக்கடலோரத்தில் நினைவிடத்தை எழுப்ப இருக்கிறார் அவரது வாஞ்சைமிகு வார்ப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
“உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் முதல்வரான தலைவர்! இலக்கியத் துறையைச் சார்ந்தோர்க்கெல்லாம் முத்தமிழறிஞர்! கலையுலகத்தினர்க்கு என்றும் கலைஞர்! தமிழ்நாட்டின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர்! இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி! இந்த அவைக்கு என்றும் நிரந்தர உறுப்பினர்! எங்களை எல்லாம் உருவாக்கிய தலைவர்! கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உள்ளத்தில் குடியிருக்கும் மாண்பாளர்!” என்று கலைஞரின் பன்முகப் பேராளுமையை வர்ணித்த முதல்வர் அவர்கள் - “நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் அவராக மட்டும்தான் இருக்க முடியும். குளித்தலையில் போட்டியிட்டு 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் குனியாத தலை, கலைஞருடையது’’ என்று பட்டியலிட்டார். இறுதியாக, “தோல்வி அவரைத் தொட்டதே இல்லை! வெற்றி அவரைக் கைவிட்டதே இல்லை! அவர்தான் கலைஞர்!’’என்று முடித்தார். அத்தகைய தோல்வியே காணாத தலைவர், மரணத்திலும் வென்றார். அவர், அண்ணாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் அவர்கள் மூலமாக நிறைவேற்ற வைத்து அண்ணனுக்குப் பக்கத்தில் இடம் பிடித்தார். அதன் மூலமாக மீண்டும் தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொண்டார்!
அவரே முன்பு சொல்லிக் கொண்டதைப் போல, ‘மரணித்து உயிர்ப்பித்துக் கொண்டது’! கலைஞரின் வெற்றி என்பது அத்தோடு முடிந்துவிடவில்லை. அதன்பிறகும் தொடர்கிறது என்பதன் அடையாளம்தான் கடந்த 24ஆம் நாள் அன்று சட்டப்பேரவைக் காட்சிகள் காட்டியது.
“தன்னைத் தந்து இந்த தாய்த் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும்பணிகளை போற்றும் விதமாக -அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்கால தலைமுறையும் அறியும் வண்ணம்- நவீன விளக்கப்படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணாநினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39.00 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் அறிவித்ததும், மொத்தப் பேரவையும் அதனை ஏற்றுக்கொண்டு வழிமொழிந்திருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்து நின்ற கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மனமுவந்து பாராட்டி மகிழ்ந்தார்கள். அது மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் முதலமைச்சரின் அறிவிப்பை ஆதரித்து வெளிப்படையாகப் பேசினார்கள். இதில்தான் கலைஞரின் வெற்றி, இன்றைய முதல்வரின் வெற்றி அடங்கி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பேச்சு குறிப்பிடத்தக்கது. “கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு திட்டத்தை அறிவித்ததற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நான் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. சார்பில் இதனை நான் வரவேற்கிறேன். கலைஞர் அவர்களின் சிறப்புகளை எல்லாம் கோர்வையாக முதல்வர் அவர்கள் சொன்னார்கள். அமைகின்ற நினைவிடத்தில் இந்த சிறப்புகள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். நாம் அனைவரும் பேரறிஞர் அண்ணாவின் குடையின் கீழ் அரசியல் பாடம்கற்றவர்கள். எனது தந்தையார் அவர்கள் கலைஞரின் பராசக்தி, மனோகரா வசனப் புத்தகங்களை அவருடைய பெட்டியில் வைத்திருப்பார். மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்களாக எடுத்துப் படித்து நாங்களாக ஒப்பிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்தோம். அந்த வகையில் இந்த தீர்மானத்தை முழுமனத்தோடு அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்” என்று ஓ.பன்னீர் செல்வம் பேசி இருக்கிறார். மரணத்திற்குப் பிறகும் உயிர்ப்பித்தல் என்பது இதுதான்.
‘ஒருவனின் வாழ்க்கை என்பது அவன் மரணித்த நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது’ என்றவர் கலைஞர். வாழ்ந்த காலத்தின் மகத்தான சாதனைகளின் மூலமாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று கலைஞர் விரும்பினார். அந்தக் காட்சியைத்தான் பேரவையில் பார்த்தோம். அத்தகைய பேரையும், புகழையும் கலைஞருக்கு வாங்கித் தந்தவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள். அனைவர்க்கும் தலைவராக கலைஞர் செயல்பட்டார் என்பதை, அனைவர்க்குமான முதல்வராகிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நாட்டுக்கு அடையாளம் காட்டிவிட்டார்.
பெருமைக்குரியவர்களை, பெருமைப்படுத்துவதன் மூலமாக பெருமை அடைதல் இது. தனது எண்ணத்தை, தனது குரலை அனைவரது குரலாகவும் மாற்றுவதுதான் மகத்தான வெற்றி. ஐம்பதாண்டு சட்டமன்றப் பணிக்காக நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்களை சிறப்பிக்கும் தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்தபோதும் அவை, முழு மனதுடன் முழுமையாக ஆதரித்து நின்றது. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கும் தீர்மானத்தையும் முழுமனதுடன், முழுமையாக அவை ஆதரித்து நின்றது. இதுதான் தனது குரலை, அனைவரும் உச்சரிக்கும் குரலாக மாற்றுவது. கலைஞர் உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறார். முதல்வர், உயர்ந்துகொண்டே போகிறார்!
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!