murasoli thalayangam

“தமிழ் சமூகத்தின் உணவியல், பண்பாட்டு மரபியல் வரலாறாக வேளாண் அறிக்கை இருந்தது” : ‘முரசொலி’ புகழாரம் !

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 16, 2021) தலையங்கம் வருமாறு:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். - என்றார் வள்ளுவப் பெருந்தகை. உழவு என்பது தமிழர்களின் தொழிலாக இல்லாமல் பண்பாட்டு மரபாக இருந்தது. வேதிய மரபுக்கு எதிரான தமிழ் மரபு இது. உழவுத் தொழில் இழிவானது என்கிறது மனு. இரும்பை உடைய கலப்பையையும் மண்வெட்டியையும் வைத்து நிலத்தை வெட்டக் கூடாது என்கிறது மனு. ஆனால் உழவே தலை என்றது வள்ளுவம்.

எல்லா விழாக்களுக்கும் கதை உண்டு. தைப் பொங்கல் திருநாளுக்கு கதை கிடையாது. உழைப்பும் தமிழர் பெருமையுமே அதற்கு அடிப்படை. அதனால்தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடிவரும் திருவிழாவாக பொங்கல் இருக்கிறது. தை முதல் நாளை தமிழ் ஆண்டின் தொடக்கமாக முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள். தை இரண்டாம் நாளை திருவள்ளுவர் நாளாகவும் முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டபூர்வமாக ஆக்கினார்கள்.

நம்மைப் பொறுத்தவரையில் உழவு என்பது உணவாகவும் உணர்வாகவும் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளது. அத்தகைய உணர்வுப்பூர்வான நிதி நிலை அறிக்கையை முதன்முதலாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வேளாண்மை - உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும் சட்டமன்றத்துக்குள் நுழைந்த அக்காட்சி என்பது சட்டமன்ற வரலாற்றில் முக்கியமான காட்சி ஆகும். மண்ணைக் காக்கும் மகத்தான திட்டங்களோடு அவர்கள் நுழைந்தார்கள்.

ஒரு மாநிலத்தின் வேளாண் நிதி நிலை அறிக்கையாக மட்டும் அது இல்லாமல், தமிழ் சமூகத்தின் உணவியல், பண்பாட்டு மரபியல் வரலாறாக அந்த அறிக்கை இருந்தது. தமிழ் இலக்கியங்களில் மண்ணும் மக்களும் காய்கறிகளும் கனிகளும் உயிரினங்களும் எப்படி எல்லாம் கருப்பொருளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது இந்த அறிக்கையில் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் வேளாண் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல இது, வேளாண் இலக்கியப் பனுவலாகவே அது அமைந்திருக்கிறது. அதைப் படித்தாலே இன்றைய இளைஞர்களுக்கு வேளாண்மை மீது பற்றும் பாசமும் ஏற்படும்.

இந்த நிதிநிலை அறிக்கையை தொடங்கும் போதே, ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் உழவர் பெருமக்களை நினைவு கூர்ந்திருப்பது என்பது இது யாருக்கான அறிக்கை என்பதைத் தெளிவாக்கிவிட்டது. கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்ற மூன்று சட்டங்களைக் கொண்டு வந்து விட்டு அதனை வேளாண்மைச் சட்டமாகக் காட்ட முயற்சிக்கும் முயற்சிகளை முதல் பக்கத்திலேயே இந்த அறிக்கை அம்பலப்படுத்தி விட்டது.

“காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்’’- என்று பாடினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அத்தகைய நிலைமையை மாற்றுவதற்கு இந்த வேளாண் அறிக்கை அடித்தளம் அமைப்பதாக உள்ளது. ‘நானும் விவசாயி, நானும் விவசாயி' என்று சொல்லி வந்த பழனிசாமி ஆட்சியில் மண் பாழானது தான் மிச்சம். அந்தப்பாழ்பட்ட நிலத்தை பண்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த அறிக்கை. ‘பாசன நீர் பாய்வதற்கு முன்பு தங்கள் வியர்வையால் வயல்களை விளை நிலமாகிய விவசாயப் பெருமக்களை அழைத்து அவர்களை கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி அதற்குப் பின்னரே இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவு போட்டார்' என்றும், அதற்கான பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆலோசனை கேட்டுவிட்டு இதனைத் தயாரித்ததாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொன்னார். அதனால்தான் விவசாயிகளின் கோரிக்கைகள் எல்லாம் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமாக மாறி இருக்கிறது.

 10 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு இரு உபயோக சாகுபடி நிலங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதாவது 20 லட்சம் எக்டேராக உயர்த்தப்படும்.

 தமிழ்நாட்டில் கூடுதலாக 11.20 லட்சம் ஏக்கர் பயிரிட சேர்ந்து தற்போதுள்ள நிகர சாகுபடி பரப்பை அதிகரிக்க 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலும் அனைத்து கிராமங் களிலும் ஒட்டுமொத்த வேளாண்மை வளர்ச்சியை உருவாக்கிட ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' என்ற மாபெரும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

 வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கு என்று தனிப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

 நெல் ஜெயராமன் அவர்களின் பேரால் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.

 அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

 பனை மரங்கள் வளர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்

 பருத்தி உற்பத்திக்கு முக்கியத் துவம்

 சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பு

 உழவர் சந்தைகளுக்கு புத்து யிரூட்டுதல்

 மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள்.

 கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை

 நீலகிரி மாவட்டம் கோத்த கிரியில் பழங்குடியினர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கென பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

 அண்ணா பண்ணை மேம்பாடு திட்டம் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அண்ணா பன்முக வேளாண் செயல்விளக்க விதைப்பண்ணையாக மேம்படுத்தப்படும்.

 சிறுதானிய உற்பத்திக்கு முக்கியத்துவம்.

 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கம்

 காய்கறித் தோட்டம்

 தேனீ வளர்ப்பு

 கால்நடைகள் வளர்ப்பு

- இப்படி அனைத்தும் இருக்கிறது இந்த வேளாண் அறிக்கையில். சுமார் 34 ஆயிரம் கோடிக்கான திட்டமிடுதல்கள் இதில் இருக்கிறது. அனைத்துக்கும் மேலாக தொடர்புடைய துறைகளோடு வேளாண்துறை இணைந்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பும் செய்யப்பட்டுள்ளது. இதுதான் முக்கியமானது.

சென்னையில் விவசாய அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. வேளாண்மை ஆர்வத்தை மாணவர், இளைஞர் மத்தியில் உருவாக்குவதற்காக இது அமையப்போகிறது. இனி வேளாண்மை என்பது அருங்காட்சியகப் பொருளாக இல்லாமல் ஆக்கபூர்வமான பொருளாக மாற அடித்தளம் அமைத்துள்ளது அறிக்கை!

Also Read: ”வரிகளே உயர்த்தாமல் இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க அரசு” - புகழ்பாடிய தினத்தந்தி தலையங்கம்!