murasoli thalayangam
“பிளீச்சிங் பவுடர் முதல் LED லைட் வரை மெகா ஊழல்” : ரூ.12,000 கோடி பணத்தை சுருட்டிய மகாயோக்கியர் ஊழல்மணி?
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 13, 2021) தலையங்கம் வருமாறு:
அ.தி.மு.க ஆட்சி கடைந்தெடுத்த ஊழலாட்சி என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், ஊழல்மணியான வேலுமணி! வேறு சாட்சியங்கள் தேவையில்லை. தன்னிடம் இருக்கும் பணத்தைக் காட்டி பழனிசாமிக்குப் பதிலாக அந்த இடத்துக்கு வருவதற்கு பேரம் பேசும் அளவுக்கு சம்பாதித்த ஒரே அ.தி.மு.க அமைச்சர் அவர். ‘என்னை எதுவும் செய்ய முடியாது’, ‘என்னைத் தொட முடியாது’ என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டு இருந்தார் வேலுமணி. ஆரம்பத்திலேயே பெரிய தலை மீது கை வைக்கப்பட்டுவிட்டது. இது அ.தி.மு.க.வின் அடிமட்டம் வரைக்கும் வேர்க்க வைத்துள்ளது!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் உட்பட 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 9 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் 346 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான நிறுவனங்களின் வருவாய் சில ஆண்டுகளில் மட்டும் பன்மடங்கு உயர்ந்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பரதன் Infrastructure நிறுவனத்தின் வருவாய் 2012-13ல் 2.02 கோடியாக இருந்த நிலையில், 2018-19-ல் 66.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சி.ஆர் கட்டுமான நிறுவனத்தின் வருவாய் 2012-13-ல் ரூ.38 லட்சத்திலிருந்து 2018-19-ல் 43.56 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் வருவாய் 2012 -13-ல் 42.54 கோடியிலிருந்து 2018 -19-ல் 453.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
Ace டெக் நிறுவனத்தின் வருவாய் 2012-13-ல் ரூ.34.20 கோடியிலிருந்து 2018-19-ல் 155.42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செந்தில் & கோ நிறுவனத்தின் வருவாய் 2012-13-ல் ரூ.7.68 கோடியிலிருந்து 2018-2019-ல் 16.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆலயம் பவுண்டேசன் நிறுவனத்தின் வருவாய் 2012-13-ல் ரூ.55 லட்சமாக இருந்த நிலையில், 2018-19-ல் 15.05 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓசூர் கட்டுமான நிறுவனத்தின் வருவாய் 93 லட்சம் ரூபாயிலிருந்து 2017 - 18-ம் ஆண்டில் 19.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.86 லட்சத்திலிருந்து 2017-18-ல் 42.11 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கான்ஸ்ட்ரொ மெயில் குட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.84 லட்சத்திலிருந்து ஒரே ஆண்டில் 3.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ஒரே ஆண்டில் 100 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல வருவாய் மூலமாக ‘ஊழலே நடந்திருக்கும்' என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2014 முதல் அனைத்து ஒப்பந்தங்களையும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது தனது பினாமிகளுக்கோ மட்டும் கொடுத்துள்ளார் வேலுமணி என்பது தெரியவந்துள்ளது. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோர் இதற்கு அடிப்படையாக இருந்துள்ளார்கள். சந்திரபிரகாஷ், சந்திரசேகர், முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, ராஜன் ஆகியோர் இவருக்குப் பினாமிகளாகச் செயல்பட்டுள்ளார்கள். அமைச்சர் ஆவதற்கு முன்னால் வேலுமணி, மாநகராட்சி ஒப்பந்தக்காரராக இருந்துள்ளார். அந்தக் காலத்து அவரது நண்பர்களையே தனது பினாமிகளாக மாற்றிக் கொண்டுள்ளார்.
இவர்களுக்கு சென்னை, கோவை மாநகராட்சிப் பணிகள் அனைத்து விதி முறைகளையும் மீறித்தரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 811 கோடி ரூபாய் ஆகும். பத்து நிறுவனங்களை வைத்து ஒரே பணிக்கு வெவ்வேறு விண்ணப்பங்களைப் போடுவது. யாருக்கு கிடைத்தாலும் தனது பினாமிகளுக்கு கிடைப்பது மாதிரியே பார்த்துக் கொள்வது இவரது தந்திரமாக இருந்துள்ளது. ஒரே ஒரு கணினியை வைத்து, பத்து நிறுவனங்களுக்கும் பல்வேறு ஒப்பந்தங்களை பதிவு செய்து மாட்டிக் கொண்டுள்ளார் வேலுமணி. போட்டியைத் தவிர்க்க தானே பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கி உள்ளார். இவை அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆதாரங்களைத் திரட்டி வைத்து நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோதே தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் பல்வேறு ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் மனுவாக கொடுத்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தார். தன்னைப் பற்றி எழுதவே கூடாது என்று மகாயோக்கியரைப் போல கூச்சல் இட்டவர்தான் இந்த வேலுமணி. ஆனால் இதனை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி வந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அவர், “சுண்ணாம்பு பவுடர் வாங்குவதில், பினாயில் வாங்குவதில் ஊழல் செய்யும் ஒருவரை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் வேலுமணி.
25 கிலோ கொண்ட சுண்ணாம்பு பவுடர் தனியார் கடைகளில் 170 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் 842 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். பினாயில் ஒரு பாட்டில் 20 ரூபாய்க்கு கடையில் கிடைக்கிறது. அதை 130 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். சாக்கடை அடைப்பை சரி செய்யும் டிச்சு கொத்து 130 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் அதை 1,010 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். 1500 மதிப்புள்ள மோட்டாரை 29,465 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 1,712 ரூபாய் மதிப்பிலான காப்பர் வயரை 8,429 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்கள். 870 ரூபாய் மதிப்பிலான லைட் பிட்டிங்கை 2,080 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்கள்.
இந்த வகையில் ஒரு ஊராட்சிக்கு வாங்கிய பொருட்களில் 1 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார்கள் என்றால் தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரம் ஊராட்சிகளில் மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்க பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் டேனியல் ஜேசுதாஸ் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதற்கெல்லாம் வேலுமணியின் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதோ இன்று ஆதாரங்களுடன் களத்தில் இறங்கி இருக்கிறது லஞ்ச ஒழிப்பு காவல்துறை. இதனை சட்டரீதியாகச் சந்திக்கத் தயார் என்று பன்னீரும் பழனிசாமியும் கதறி இருக்கிறார்கள். சட்டரீதியாகவே சந்திப்போம்!
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!