murasoli thalayangam
ஆலயங்களில் ஒலிக்கத் தொடங்கிய ‘அன்னைத் தமிழ்’.. தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் வருமாறு:-
ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற திட்டத்துக்கான குறிக்கோள் சின்னத்தை இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெற்றுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற பெயர்ப் பலகையை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திறந்து வைத்துள்ளார்.
அறிவிப்புப் பலகையில் தமிழில் அர்ச்சனை செய்யும் குருக்களின் பெயர்கள், அவர்களது செல்பேசி எண்களோடு இருக்கப் போகிறது. படிப்படியாக தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அமைச்சர் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வணங்கும் கோவில்களில் தமிழ்தான் இல்லை என்ற குறையை நீக்குவதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. தந்தை பெரியாரின் கனவு இது. முத்தமிழறிஞர் கலைஞரின் கனவு இது.
‘கோவிலைப் பற்றிக் கவலைப்படாத திராவிட இயக்கத்தவர்க்கு கோவிலில் என்ன மொழியில் வழிபாடு செய்தால் என்ன? யார் வழிபாடு செய்தால் என்ன?’ என்று அந்தக் காலத்திலேயே சில அதிகப்பிரசங்கிகள் கேட்டார்கள். ‘கோவிலை விமர்சிப்பது எங்கள் கொள்கையாக இருக்கலாம். அங்கு தமிழில் தான் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பது தமிழின் உரிமை. அங்கு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் உரிமை' என்று விளக்கம் அளித்தார் தந்தை பெரியார்.
எதையாவது சொல்லி தமிழையும், எதையாவது சொல்லி தமிழனையும் கர்ப்பக்கிரகத்துக்குப் பக்கத்தில் வராமல் பார்த்துக்கொண்டார்கள். இன்று அந்த ஆதிக்கத்தில் இடி விழத் தொடங்கியதும் அலறுகிறார்கள். திருக்கோவில்களின் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த 1996 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆலோசனைக் குழுவை நிறுவியவர் முதல்வர் கலைஞர் அவர்கள். முந்தைய அ.தி.மு.க ஆட்சியைவிட கோவில் சொத்துகள் மீட்கப்பட்டன. முந்தைய அ.தி.மு.க ஆட்சியை விட கோவில்களுக்கான அதிக சொத்துகளைக் கணக்கெடுத்துக் காட்டியது தி.மு.க ஆட்சி. கோவில்களின் வருவாயை அதிகமாக்கிக் காட்டியவர் முதல்வர் கலைஞர்.
ஜெயலலிதா ஆட்சியைவிட அதிகமாக கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராத கோவில் பூசாரிகளுக்கும் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தார். திருக்கோவில்களில் கருணை இல்லங்களை உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக, தமிழில் ஆகம நூல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர். விநாயகர் போற்றி, முருகன் போற்றி, சிவன் போற்றி, திருமால் போற்றி; போற்றிப் புத்தகங்களை வெளியிட்டு, தமிழில் வழிபாட்டுக்கு உறுதுணை செய்தவர் முதல்வர் கலைஞர். இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைய ஆட்சியில் ஆலயங்களுக்குள் அன்னைத் தமிழ் அரங்கேறி உள்ளது.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் இந்துசமய அறநிலையத் துறைக்கு ஆற்ற இருக்கும் வாக்குறுதிகள் குறித்து விரிவாகச் சொல்லப்பட்டது. அதில் மிக முக்கியமானது, தமிழகக் கோவில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்பதும், கோவில்களில் தமிழில் வழிபாடுகள் செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்பதாகும். அதனைத் தான் அமைச்சர் பி.கே. சேகர்பாபு செயல்படுத்தி உள்ளார்.
“தமிழர் தமது கடவுள் வழிபாட்டினைச் செம்மையான தமிழ்மொழிகொண்டே இயற்றிக் கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய முன்வருவாராயின், அவர்களது பண்டைச் சமய மாண்பு உலகில் நிலைபெறுமாகலின், அத்தகைய நன்முயற்சிகளை தமிழ் நன் மக்கள் விரைவில் செய்து ஈடேற்றுவார்களாக’’ என 1927 ஆம் ஆண்டு தனது ‘தமிழின் முற்காலச் சிறப்பும் தற்காலக் குறையும்' என்ற நூலில் எழுதியவர் தமிழ் கா.சு. அவர்கள். அத்தகைய நன்முயற்சியை சுயமரியாதை இயக்கம் தொடங்கியதும் செய்தவர் பெரியார்.
தென்காசி சிவன் கோவிலில் சமஸ்கிருத வழிபாடு முடிந்ததும், தமிழில் தேவாரம் பாட வேண்டும் என்று கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை சிலர் ஏற்கவில்லை. இவர்களைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினார் பெரியார். இதே பிரச்சினை சங்கரன்கோவிலிலும் வந்தது. தேவாரம் பாடக்கூடாது என்று சங்கரன் கோவில் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள் சிலர். இதைக் கண்டித்தும் சுயமரியாதை இயக்கம் போராடியது.
தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 1955 ஆம் ஆண்டு போராட்டம் தொடங்கிய போது அதனை பெரியார் ஆதரித்தார். 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்தில் அமைந்தது. முதல்வர் அண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர், கோவில்களில் தமிழ் வழிபாட்டு முறையைச் செயல்படுத்தினார்.
1971 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் 1974 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழில் வழிபாடு செய்வது அரசமைப்புக்கோ அல்லது சமயப்பழக்க வழக்கங்களுக்கோ முரணானது அல்ல என்றும்; சமயப் பழக்கத்தின் ஒரு கூறாக வழிபாடு கருதப்பட்டாலும் அதனை நிகழ்த்தும் மொழி சமயப் பழக்கத்தில் ஒரு கூறு அல்ல என்றும், இறைவழிபாடு ஒரே மொழியில் தான் (வடமொழி) செய்யப்பட்டே தீர வேண்டும் என்பதற்கு எவ்வகை அடிப்படையும் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு நாள் 10.1.1974. பூ + செய் = பூசை. பூவினால் வழிபாடு செய்வது பூசை. இதுதான் இன்று பூஜையாகிக் கிடக்கிறது.
‘சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப்பதிகம் பன்னிதமிழ்த் தொடைமாலை பலசாத்தி' - என்கிறார் சேக்கிழார். வழிபாட்டுக்கென தமிழ்ப்பாக்கள் ‘திருவிசைப்பா' என வெளியானது. இப்படி தமிழில் பாடுதல் தவறு என இட்டுக்கட்டி சமஸ்கிருத ஸ்லோகங்கள் மேற்கோள் காட்டப்பட்டு, அதற்கு எதிராகப் போராட முடியாதவர்களாக தமிழர்கள் இருந்த சூழலில் ஆலயங்களில் அன்னைத் தமிழ் புறக்கணிக்கப்பட்டது. இன்று மீண்டெழுந்து வருகிறது. பாட்டுத் தமிழ், தீட்டுத் தமிழ் அல்ல. அதுவே ஆலயங்களில் ஒலிக்க வேண்டிய அன்னைத் தமிழ்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!