murasoli thalayangam
நூற்றாண்டு விழாக் கொண்டாடும் தமிழ்நாடு சட்டமன்றத்தால் நாம் அடைந்த பயன்கள் என்னென்ன? - பட்டியலிட்ட முரசொலி
பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆலோசகர்கள் இருப்பார்கள். இந்த ஆலோசகர்களது ஆலோசனைப்படிதான் ஆட்சி நடக்கும். ‘இந்தியக் கவுன்சில்' என்று இதற்குப் பெயர். ‘இந்தியா மந்திரியின் அமைச்சரவை' என்றும் இதனைச் சொல்வார்கள். இத்தகைய ஆலோசகர்கள் அமைச்சரவைக்கு எதிரான மாற்றுச் சிந்தனையை 1913ஆம் ஆண்டு கூடிய கராச்சி காங்கிரஸ் மாநாடு முன்வைத்தது."இந்தியா கவுன்சிலை ஒழித்துவிட வேண்டும். அதற்கு மாறாக, அமைக்கும் சபையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக இருக்க வேண்டும்.
இப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்களாக இருக்க வேண்டும்' என்று கராச்சி காங்கிரஸ் மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை வைத்துத்தான் இந்தியா மந்திரியாக இங்கிலாந்தில் இருந்த மார்லியும், கவர்னர் ஜெனரலாக இருந்த மிண்டோவும் சில சீர்திருத்தங்களை ஒப்புக்கொள்ள முன் வந்தார்கள். சட்டங்களை இயற்றித் தரும் கவுன்சில்களாக இருந்த இடங்களை ‘சட்ட சபைகள்' என்று மகுடம் சூட்டினார்கள். பலரும் நியமிக்கப்படுவார்கள், சிலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மேன்மை தாங்கிய மன்னர் பிரானுக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் என்று மார்லி அறிவித்தார்.
‘நிர்வாகத்தில் இந்தியர்களைப் பெருமளவில் இணைத்துக் கொண்டு சுய ஆட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமாக இந்தியாவை பொறுப்பாட்சிக்கு தயார் செய்வதே மேன்மை தாங்கிய மன்னபிரான் அரசாங்கத்தின் நோக்கம்' என்ற இந்தியா மந்திரியின் அறிவிப்போடு இந்தியச் சட்டசபையும் மாகாணச் சட்டசபைகளும் பிறக்கின்றன. 1919 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டம்தான் தேர்தலைப் பரவலாக்கியது. சட்டமன்றங்களுக்குள் அதிகமான மக்கள் பிரதிநிதிகளை உள்ளே அனுப்பக் காரணம் ஆனது. நியமன அதிகாரிகளைக் குறைத்தது. மொத்தத்தில் ஜனநாயகத்துக்கான வாசல் கதவைத் திறந்தது.
முதல் தேர்தல்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாய மக்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட நீதிக்கட்சி, அதனினும் முன்னதாக சட்டசபையைக் கைப்பற்றியதுதான் வரலாற்றின் மகுடம் ஆகும்.
‘சுயராஜ்யக் கட்சி' என்ற கொள்ளைப் புறமாக ஆட்சியைப் பிடிக்க சிலர் செய்த சதியை முறியடித்து நீதிக்கட்சி அன்று ஆட்சியை பிடித்தது .ஜார்ஜ் மன்னரின் சித்தப்பாவான கன்னாட், சென்னைச் சட்டசபையை 1921 ஜனவரி மாதம் 12 ஆம்நாள் தொடங்கி வைத்தார். இங்குதான் முறையான ஆட்சி முறை முதலில் தொடங்கியது. ‘சென்னையில் கட்சி அரசியல் ஏற்கனவே வரையறை படுத்தப்பட்டுள்ளது. அங்கு கட்சி வாரியாக உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்சி அரசியல் அடிப்படையில் மிக நல்ல முறையில் ஆட்சி செய்யப்படுகிறது' என்று மத்திய சட்டசபைத் தலைவராக இருந்த சர் பிரடெரிக் ஒயிட்சொன்னார்.
இடம் ஒதுக்குவதில் சென்னை மாகாணம் தான் கட்சி அடிப்படையில் வரிசையாக இடம் ஒதுக்கியது. வேறு மாகாணத்தில் அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்று சொல்லப்பட்டது. பேரவைத் தலைவருக்கு கீழே பேரவைச் செயலர் ஆசனம் போடப்பட்டதும் முதலில் சென்னை மாகாணத்தில்தான். சபை நடைமுறைகளில் மட்டுமல்ல, மக்களைக் காப்பதிலும் சென்னை மாகாணமே முன்னுதாரணமாக இருந்தது. ஆட்சி அமைத்த நீதிக்கட்சி, இந்திய எல்லையில் வேறு எந்த மாகாணத்திலும் ஏற்படுத்த முடியாத சீர்திருத்தங்களைச் சட்டம் ஆக்கியது. அதனால் தான் 100 ஆண்டுகள் கழிந்த பிறகும் தமிழ்நாடு தனித்தன்மை உள்ள மாநிலமாக இந்தியாவில் தலைநிமிர்ந்து நிற்கிறது.
* வகுப்புவாரி உரிமை எனப்படும் சமூகநீதி!
* பெண்களுக்கு வாக்குரிமை!
* பஞ்சமர், பறையர் என்ற சொல் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர்!
* அண்ணாமலைப்பல்கலைக் கழகம் உருவாக்கம்!
* தேவதாசி முறை ஒழிப்பு!
* இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்!
* தமிழ் ஆட்சிமொழித் தீர்மானம்!
* ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டுதல்!
* சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்ற சட்டம்!
* இருமொழிக் கொள்கைச் சட்டம்!
* மாநில சுயாட்சித் தீர்மானம்!
* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!
* பெண்களுக்கும் சொத்துரிமை!
* பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுகள்!
* இசுலாமியர் இடஒதுக்கீடு!
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் சட்டசபை மூலமாக நாம் அடைந்த பயன்கள், வளர்ச்சிகள், முற்போக்குப் பாதைகள் ஏராளம்! ஏராளம்! நம்மைப் பொறுத்தவரை அது கோட்டை மட்டுமல்ல, மக்களைக் காக்கும் அரண். மக்களைக் காத்த அரண். மக்களாட்சியின் மாண்பை பறைசாற்றும் அடையாளம்!சட்டமன்ற ஜனநாயகம் தொடங்கிய 1921 ஆம் ஆண்டும் திராவிட இயக்கத்தின் கையில் ஆட்சி இருந்தது. 100 ஆண்டுகள் கழிந்த 2021 ஆம் ஆண்டும் திராவிட இயக்கத்தின் தனிப் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையில் கோட்டை இருக்கிறது. அதே மக்களாட்சி மாண்பையும், சமூகநீதிக் கோட்பாட்டையும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு காக்கும் பேரவையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை திகழட்டும். கோன் வாழ்க! கொற்றமும் வாழ்க!
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !