murasoli thalayangam
“பேராதிக்க நாடுகளின் விளையாட்டு மைதானமா ஆப்கானிஸ்தான்?” : ‘முரசொலி’ தலையங்கத்தில் ஆவேசம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 29, 2021) தலையங்கம் வருமாறு:-
அண்டை நாடான ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லபடியாக இல்லை. எப்போதுமே இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் அரசியல் கொந்தளிப்புகளும், வன்முறைகளும் அதிகம். அதில் இப்போது ஆப்கனில் அதிகமாகிவருவது கவலை அளிப்பதாக உள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில் பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தங்களது படையினரை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன. இந்தப்படை விலகல் தொடங்கிய கடந்த மே மாதத்திலிருந்து அந்நாட்டில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களாக மேலும் அதிகமாகி உள்ளது. எல்லைப்பகுதிகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாகாணத் தலைநகரங்களும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில் உயிரிழந்தோர் பற்றி அந்நாட்டுக்கான ஐ.நா பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி டெபோரா லயோன்ஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். “2021-ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்கள் 1,659 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 3.254 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சொல்லி இருக்கிறார்.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் அதிகமாகும் என்றும், உயிரிழப்பில் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை 46 சதவீதம் ஆகும்’’ என்றும் சொல்லி இருக்கிறார். அதாவது 468 குழந்தைகள் (32 சதவீதம்), 219 பெண்கள் (14 சதவீதம்) உயிரிழந்துள்ளனர். இந்த மரண ஓலம் ஆப்கனை அலற வைத்திருப்பதைவிட அண்டைநாடுகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
கடந்த மே, ஜூன் மாதத்தில் மட்டும் அதிகமான அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரு மாதங்களில் மட்டும் 783 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 1609 பேர் காயமடைந்துள்ளார்கள். ஆப்கன் வன்முறைகள் தொடர்பாக 2009 முதல் ஆவணப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் கடந்த இரண்டு மாத மரணங்களும், காயங்களும், தான் கூடுதலானது என்றும் புள்ளிவிபரங்கள் சொல்கிறது. ஆப்கானிஸ்தானில் மே, ஜூன் மாதங்களில் பெரும்பாலும் நகரப் பகுதிகளுக்கு வெளியேதான் தலிபான்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.
மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த நகரப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்தால் அதனால் ஏற்படும் விளைவு பேரழிவைத் தரும் என்றும் ஐ.நா அறிக்கை சொல்கிறது. “பொதுமக்கள் உயிரிழப்பில் 69 சதவீதம் அரசுக்கு எதிரான படையினரே காரணம். இதில் 39 சதவீத உயிரிழப்பு தலிபான்களாலும், 9 சதவீதம் ஐ.எஸ் இயக்கத்தினராலும் ஏற்பட்டுள்ளது. 16 சதவீத உயிரிழப்புக்கு யார் காரணம் என்பது தீர்மானிக்கப்படவில்லை. அரசுப் படைகளால் 23 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களால் 2 சதவீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் ஐ.நா அறிக்கை சொல்கிறது.
“ஆப்கன் மக்களைப் பாதுகாத்து, சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும்” என ஐ.நா அறிக்கை சொல்கிறது. இது சாதாரணமாக நடந்துவிடாது. ஆப்கன் விவகாரம் என்பது அந்த நாடு மட்டும் தொடர்புடையதாக இல்லாமல், உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. அதனால் தீர்வு காண்பது என்பதும் சிரமம். பல்வேறு நாடுகளின் போர்க்களமாக ஆப்கன் இருந்துள்ளது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உள்ளுக்குள் தீர்வு காண முடியாமல், வெளிப்புற சக்திகளின் தீர்வை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாடாக ஆப்கன் இருந்துள்ளது. அதனாலேயே பேராதிக்க நாடுகளின் விளையாட்டு மைதானமாக ஆப்கன் ஆகிவிட்டது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை அறிந்ததும் சீனா துள்ளிக் குதிக்கிறது. ஆப்கனைக் காக்க முயற்சிப்பது போன்ற தோற்றத்தை சீனாவும், பாகிஸ்தானும் காட்ட முயற்சிக்கின்றன.
‘ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாத சக்திகளை வெளியேற்ற இணைந்து செயல்படுவது’ என சீனாவும், பாகிஸ்தானும் அறிவித்துள்ளன. அண்டை நாட்டின் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது இவர்களது வழக்கமான வரலாறாக இருந்துள்ளது. ஆப்கனில் அமைதியைத் தொடர முயற்சி மேற்கொள்வது, போர் பரவுவதைத் தடுக்க முன்னுரிமை அளிப்பது, முழு அளவிலான உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அதில் அடங்கும் என்று அறிவித்துள்ளார்கள். இதுவும் ஆப்கனின் அமைதிக்கான சூழலை உருவாக்காது என்பதுதான் உண்மை.
தொடர்ந்து அன்னிய சக்திகளின் ஊடுருவலால் உருக்குலைந்த தேசம் ஆப்கானிஸ்தான். அதற்கு காரணம் அங்கு சரியான அரசு உருவாகவில்லை. இருந்த அரசுக்கு எதிராக உருவான தீவிரவாதமும், தாலிபான்களும் சேர்ந்து ஆப்கனை வன்முறை தேசமாக மாற்றிவிட்டன. அதனை அமைதிப்படுத்துவதற்காக அமெரிக்கா உள்ளே நுழைந்தது. அது சாத்தியமில்லாமல் போய்விட்டது என்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறுகிறது.
நல்லெண்ணத்தின் அடிப்படையிலான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், அணைகள் என பலவற்றை உருவாக்க இந்தியா பெரும் உதவி புரிந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உதவவில்லை. மற்ற நாடுகளின் உதவி என்பது ராணுவ ரீதியானதாக இருக்கிறது.
இந்தியாவின் முயற்சிகள், அமைதியை உருவாக்க நினைப்பதாக இருப்பதை இதர நாடுகள் விரும்பவில்லை. மறைமுக ராணுவங்களை உருவாக்குவதும், தாலிபான்களுக்கு உதவிகள் செய்வதும் இதர நாடுகளின் வேலையாக இருக்கின்றன. இன்றைய சூழலில் ஆப்கானிஸ்தானத்தின் பெரும்பான்மை இடங்களை தாலிபான்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இந்தியா நீங்கலான இதர சில நாடுகளின் மறைமுக உதவியே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அமெரிக்கா வெளியேறிய இடத்தைப் பிடிக்க சீனா நினைக்கிறது. இலங்கையைப் போலவே, ஆப்கானிஸ்தானத்திலும் தங்களது பொருளாதாரத் திட்டத்தைச் செயல்படுத்த சீனா நினைக்கிறது. பாகிஸ்தானும் காத்திருக்கிறது. எனவே, ஆப்கன் ஆபத்து என்பது ஆப்கனுக்கான ஆபத்தாக மட்டுமே இருந்துவிடப் போவது இல்லை!
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!