murasoli thalayangam
கட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 28, 2021) தலையங்கம் வருமாறு:
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் - சசிகலா சிறைக்குப் போனதால்- பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற நாடகக் கம்பெனி தொடங்கியதால் - மண்புழுவைப் போல வயிற்றைத் தரையில் தேய்த்துச் சென்று முதலமைச்சர் என்ற நாற்காலியை அடைந்தவர் பழனிசாமி. அரசியலில் சரியாகச் சொல்லவேண்டுமானால் ‘லக்கி ப்ரைஸ் லாட்டரி' பழனிசாமி என்றுதான் சொல்லவேண்டும். அரசியலில் இவ்வளவு லக் வேறு யாருக்கும் கிடைத்தது இல்லை. தகுதியற்றவரை அந்த இடத்தில் உட்கார வைத்தால், அவரை இறக்குவதற்கு படாதபாடு பட வேண்டும் என்பதைப் போல தமிழ்நாட்டு மக்களுக்கு துக்கமும், துயரமும், துன்பமும் கொடுத்ததன் மூலமாக நாட்டு மக்களால் பதவியை விட்டுத் துரத்தப்பட்ட பழனிசாமி, நித்தமும் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
அரசியலில் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவர் இதனைச் செய்கிறார். ஏனென்றால் உள்ளுக்குள் இருந்து பன்னீர்செல்வம் தரும் நமைச்சல், வெளியில் இருந்து சசிகலா தரும் குடைச்சல் ஆகிய இரண்டும்தான் இதற்குக் காரணம். தி.மு.க அரசு மீது குறை சொல்வதன் மூலமாக தன்னையும் தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவராக பழனிசாமி காட்டிக்கொள்கிறார். லாட்டரி சீட்டு முறை வரப்போவதாக இவராக ஒரு கற்பனையைச் செய்து கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் பழனிசாமி.
இதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவான அறிக்கையை விளக்கமாக வெளியிட்டுள்ளார். “அ.தி.மு.க. அரசு சீரழித்த நிதி நிலைமையைச் சரிசெய்ய லாட்டரி பற்றிச் சிந்திக்கவே இல்லை. கட்டுக்கதைகளைக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நற்பணிகளுக்கும், சிறப்பான நிர்வாகத்திற்கும் களங்கம் கற்பிக்க முயற்சிக்க வேண்டாம்” என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
“நான்காண்டு கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதி நிலைமை எத்தகைய சரிவினை - சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. 2015 சென்னை வெள்ளம் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை, 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதிகுறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை உரிய காலத்தில் சட்டமன்றத்திற்குக்கூட காட்டாமல் மூடி மறைத்து வைத்திருந்தவர் இதே எதிர்க்கட்சித் தலைவர்தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கழக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தணிக்கை அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, சென்ற அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் தோல்விகள் பொதுவெளிக்கு வந்துள்ளது. நிதி மேலாண்மையில் அ.தி.மு.க கண்ட தோல்வி“ மாநில நிதிநிலை” குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்படப் போகிறது” என்று அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.
உயிர் நீத்த காவல்துறையினருக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான பேரிடர் ஆணைய நிதி வழங்கும் கோப்புகளைக்கூட மே 2021 வரை கையெழுத்திடாமல் விட்டுச் சென்றவர்கள் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் என்பதையும் அவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணமாக இருந்தது.
அரசுத் துறையில் ரூ.5 லட்சம் கோடிக்கு கடன் ஆகிவிட்டது. இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது பொதுத்துறை நிறுவனங்கள். கடந்த பத்தாண்டு காலத்தில் ஐந்து மடங்கு கடன் கூடி இருக்கிறது. இத்தகைய கையாலாகாத அரசாங்கத்தைத் தான் அ.தி.மு.க கொடுத்துள்ளது. இதுபற்றிய வெட்கமோ, கூச்சமோ கொஞ்சம்கூட பழனிசாமிக்கு இல்லை. அவரிடம் அதை எதிர்பார்க்கவும் முடியாது.
எதற்காகத் துடிக்கிறார் பழனிசாமி? அப்படி துடிப்பதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா? அவரது வாழ்க்கையே லாட்டரி வாழ்க்கைதானே! சிறுவயது முதலே கடினமாக உழைத்தேன் என்று பழனிசாமி அடிக்கடி சொல்வார். “நெடுங்குளம் சோமசுந்தரம், கருப்பண்ணக் கவுண்டர், துரை ஆகிய மூவரது சமாதியில் போய் நின்று கொண்டு, ‘நான் சிறுவயது முதலே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தேன்' என்று சொல்ல முடியுமா?” என்று தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டார்களே? அதற்கு இதுவரை பதில் சொல்ல முடிந்ததா பழனிசாமியால்?
1990 ஆம் ஆண்டு சேலம் மாவட்டச் செயலாளர் ஆன பழனிசாமியின் பதவியை சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா பறித்தார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பழனிசாமிக்கு தரப்பட்டது. சில ஆண்டுகளில் அதுவும் பறிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆனார் பழனிசாமி. சில ஆண்டுகளில் அந்தப் பதவியும் ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டது. 2008 இல் மீண்டும் பதவி தரப்பட்டது. அது மீண்டும் பறிக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தோடு மொத்தமாக நெருக்கமானதால்தான் அ.தி.மு.க.வின் ஐவர் அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதனால்தான் பன்னீர்செல்வத்தை விட இவர் நம்பிக்கையானவராக இருப்பார் என்று சசிகலா குடும்பம் நம்பி முதலமைச்சர் பதவியை கொடுத்தது. அந்தக் குடும்பத்துக்கும் துரோகம் செய்தார் பழனிசாமி.
இப்படி லக்கி ப்ரைஸ் மாதிரி பதவியை அடைந்த பழனிசாமி, தான் இப்போது இருக்கும் து.ஒ. என்ற அங்கீகாரம் அற்ற பதவியைத் தக்கவைப்பதற்காக தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்லி அதன் மூலம் தன்னையும் ஒரு ஆளாகக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!