murasoli thalayangam
“முழுமையான தமிழாட்சி மலரப் பாடுபடும் தி.மு.க அரசு” : முரசொலி தலையங்கம்
தமிழாட்சி முழுமையாக மலர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது! தமிழ் வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள்குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், “மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தமிழ் மொழியில் கையெழுத்து இடுவது, கோப்புகளை முழுவதும் தமிழிலேயே தயாரித்து நிறைவேற்றுவது ஆகிய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் ஆட்சி மொழித் தமிழை செயலாக்கத்துக்கு கொண்டு வருவது உறுதிப்படுத்தப்படும். தவிர்க்கமுடியாமல் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதற்கு இணையான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கொண்ட கோப்புகளும் இருக்க வேண்டும் என அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் அண்மையில் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஆட்சி மொழித் தமிழைச் செயல்படுத்துவது குறித்து தனிப்பட்ட முறையில் அலுவலர்களை நியமித்து கண்காணிக்கவேண்டும்” என்று கூறியிருப்பது தமிழாட்சி மலர்வதற்கான வாசல் கதவாக இருக்கிறது!
1919ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின்படி இரட்டை ஆட்சி முறை இந்தியாவில் நிறுவப்பட்டது. அதன்படி சென்னை மாநில சட்டமன்றம் 1921இல் கூடியது. பல மொழிகளை பேசக்கூடியவர்கள் இந்த சட்டமன்றத்தில் இருந்தார்கள். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். ஆனால் விவாதங்கள் ஆங்கிலத்தில்தான் நடந்தன. வட்டார மொழிகளை ஆங்கிலேயர் கற்றுக்கொண்டாலும், சட்டமன்றம் வட்டாரமொழியில் நடக்கவில்லை. சட்டப்படி ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசாமல் வட்டாரமொழியில் யாராவது பேசினால் அவர்கள் தங்கள் உரை சட்டமன்ற நடவடிக்கைகளில் பதிவாக வேண்டுமானால் அங்கு மொழிபெயர்ப்பு கொடுத்தாக வேண்டும். ஒரு சிலர் மட்டுமே தமிழில் பேசினார்கள். தமிழில் நிர்வாகம் நடக்க வேண்டும் என்ற கோரிக்கை மீதான விவாதமே கூட ஆங்கிலத்தில்தான் நடந்தது. சில சட்டப் புத்தகங்களை வட்டார மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் 1922இல் நடந்தன. ஆனாலும் ஆங்கிலேயர் ஆட்சி முடியும் வரை ஆங்கிலம்தான் முழுமையாக பயன்பாட்டில் இருந்தது.
1952ஆம் ஆண்டு நிர்வாகத்தை தமிழில் நடத்துவது தொடர்பாக பரிசோதனை முயற்சி திருச்சி மாவட்டத்தில் முதலில் தொடங்கியது. இது மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படாது என்றார் முதலமைச்சர் இராஜாஜி (26.11.1952). ‘மொழிச் சீர்திருத்தம் மட்டுமே நம் பயணத்தின் எல்லைக்கோடு அல்ல’ என்றார் இராஜாஜி. 1952க்குப் பிறகு அவையில் தமிழ்க்குரல் அதிகமாக எழுந்தது. “ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால் முதலில் அந்த நாட்டுமொழியை அழிப்பார்கள்” என்றார் ஏ.கோவிந்தசாமி. தொடர்ந்து பேசிய அவர்1938 முதல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றியும், பெரியார், அண்ணாவின் செயல்கள் குறித்தும், நடராசன், தாளமுத்து தியாகம் குறித்தும் குறிப்பிட்டார்.
மாவட்டங்களுக்கும் தலைமைச் செயலகத்துக்கும் நடக்கும் கடிதப் போக்குவரத்து தமிழில் இருக்க வேண்டும் என்று 1955 மார்ச் 19 அன்று ஏ.கஜபதி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அனைவருமே ஆதரித்துப் பேசினார்கள். இறுதியாகப் பேசிய அமைச்சர் பக்தவத்சலம், “அனுபவ சாத்தியமாகத் தமிழை ஆட்சி மொழியாக செய்ய முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்... பொதுமக்களிடத்தில் பேசுவதற்கு உதவுமே ஒழிய அனுபவ முறையில் இது இப்போது கஷ்டமாகும்” என்றார் பக்தவத்சலம்.
பல்வேறு அழுத்தங்களின் காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் நடைபெற வேண்டும் என்ற சென்னை அரசாங்க மொழி மசோதாவை அவையில் சி.சுப்பிரமணியம் 27.12.1956 அன்று தாக்கல் செய்தார். 1957ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் அரசிதழில் இது வெளியானது. அன்று முதல் தமிழ்மொழிதான் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி என்பது உறுதிசெய்யப்பட்டது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்தது.
தி.மு.க ஆட்சி மலர்ந்த பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஐந்து ஆண்டுகளில் தமிழ் அனைத்து நிலைகளிலும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று அறிவித்தார். பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டத்தை பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தார். 1970 ஆம் ஆண்டு சட்டத் துறை, நிதித்துறை ஆகியவற்றில் தமிழ் கோலோச்சியது. இதன்படி அரசாணைகள் வெளியிடுவதில் ஆங்கிலத்துக்கு நிகரான நிலைகளில் தமிழுக்கும் முன்னுரிமை தரப்பட்டது.
1971ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித்துறையை அரசு ஏற்படுத்தியது. இதன் மிக முக்கியமான பணி ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆகும். இதன்படி அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றை தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வுசெய்து அறிக்கை அனுப்பும் பணியை செய்ய வேண்டும். ஆட்சியில் தமிழை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கப் பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டன.
ஆட்சி மொழிச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் துறைத் தலைமை அலுவலகம் ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒன்றையும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நிலை அலுவலகம் ஒன்றையும் தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம்தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. ஆட்சி சொல்லகராதி, சிறப்புச் சொல்லகராதி வெளியிடப்பட்டன. சொல் வங்கி உருவாக்கப்பட்டது. இவைதான் இன்று தமிழில் பெரும்பாலான கோப்புகள் உருவாக அடித்தளம் அமைத்தது. இதனை 100 சதம் முழுமைப்படுத்த இன்றைய அரசு நினைக்கிறது.
“ஒரு மொழி ஆட்சி மொழி ஆக வேண்டும் என்பதற்கான ஒரே தகுதி, அது தாய்மொழியாக இருக்க வேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா. இந்த தாய்மொழியின் ஆட்சியையே அரசு உருவாக்க நினைக்கிறது. அப்படி ஒரு தமிழாட்சி - ஆட்சித்துறையில் முழுமையாக அமையட்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!