murasoli thalayangam

“அம்பேத்கரை மேற்கோள் காட்டுபவர் இதற்குப் பதில் சொல்ல முடியுமா?” : மாலனுக்கு ‘முரசொலி’ தலையங்கம் பதிலடி!

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 16, 2021) தலையங்கம் வருமாறு:

எதையும் உருப்படியாய் உருவாக்கத் தெரியாத சிலருக்கு உருக்குலைப்பது என்றால் துள்ளிக் குதித்து ஓடிவருவார்கள். தாய்த் தமிழ்நாட்டைப் பிரிக்க ஏதோ சில அநாமதேயங்கள் அலறி வருவதற்கு எழுத்தாளர் மாலனும் அணி சேர்ந்துள்ளார். தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் தி.மு.க.வுக்கும் திராவிடத்துக்கும் சமூகநீதிக்கும் சுயமரியாதைக்கும் எதிரானது எதுவாக இருந்தாலும் தானாக வந்து வண்டியில் ஏறிக்கொள்ளும் வகையறாக்கள் அவை!

தன்னுடைய வாதங்களுக்கு அண்ணல் அம்பேத்கரை சாட்சிக்கு இழுப்பதைவிட அண்ணலுக்குச் செய்யும் அவமரியாதை இருக்கமுடியாது. ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் தேவையில்லை, ஒரு மொழி பேசும் மக்கள் பல மாநிலங்களில் இருக்கலாம் என்றாராம் அம்பேத்கர். இதைச் சொல்லிவிட்டு, “அம்பேத்கரின் நூலை அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அறிஞர்களும் ஒருமுறை திறந்து பார்க்கவேண்டும். அம்பேத்கர் மீது மரியாதை வைத்துள்ள மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அவரது கருத்துக்களை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது” என்கிறார். நிச்சயமாக திறந்த மனத்தோடு அம்பேத்கர் எழுதியதைப் படித்துப் பார்க்கலாம்!

அண்ணல் அம்பேத்கர், இனவழி அரசியல் பேசியவர் அல்ல. அதேநேரத்தில் இனவழி அரசியலை நிராகரித்தவரும் அல்ல! அவரது கருத்தை மொழிவாரி மாகாணப் பொறுப்பாண்மைக் குழுவுக்கு 1948ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளார்.

“மாகாணங்கள் தெள்ளத் தெளிவான சகலவித தேசிய இனஅம்சங்களையும் கொண்டிருக்கின்றன. எனவே அவற்றின் தேசியப் பண்பு முழுநிறைவாய் வளர்ந்து மலர சுதந்திர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்துக்குத் தேவையானதை அதாவது சமூக ஓரினத்தன்மையை மொழிவாரி மாகாணம் உருவாக்குகிறது. பொதுவான மரபுமூலத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கை, பொதுமொழியையும் இலக்கியத்தையும் பெற்றிருத்தல், வரலாற்றுப் பொதுமரபுகள், சமூகப் பழக்க வழக்கங்களில் பொதுஉணர்வு ஆகியவற்றில் பெருமை முதலியவற்றின் மீது தான் மக்களின் ஓரினத்தன்மை சார்ந்திருக்கிறது. இந்தக் கருத்துரையை எந்த ஒரு சமூகவியல் மாணவரும் மறுக்க முடியாது...” என்றவர் அம்பேத்கர்.

1955 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் குறித்த தனது சிந்தனைகளை அம்பேத்கர் விரிவாக எழுதினார். “ஜனநாயகத்துக்கான பாதையைச் செப்பனிடுவதும், இன, கலாச்சாரப் பதற்ற நிலையை அகற்றுவதுமே இந்த இருகாரணங்கள்” என்று அதில் குறிப்பிடுகிறார். “இந்தியாவின் பொதுமொழியாக இந்தி ஆகும் வரை, அந்த நோக்கத்திற்கு இந்தியா தயாராகும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம்.' என்கிறார். அம்பேத்கரை மேற்கோள் காட்டுபவர் இதற்குப் பதில் சொல்ல முடியுமா?

வடக்கு, தெற்குப் பிரிவினையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவராக அம்பேத்கர் இருந்துள்ளார். வடக்கின் ஆதிக்கத்தை தெற்கு சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று அம்பேத்கர் கருதினார். இந்தியை தேசியமொழியாக ஆக்கும் பிரச்சினை குறித்து அரசியல் சட்ட நகல் விவாதத்தின்போது நடந்த விவாதங்களை விரிவாக எழுதும் அவர், வேறு எந்த பிரச்சினைக்காகவும் இவ்வளவு விவாதம் நடந்ததில்லை என்கிறார். வடக்கை தெற்கு எந்தளவுக்கு வெறுக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு என்றார். “வடக்குக்கும் தெற்குக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு மிதவாதப் போக்குக் கொண்டது. தெற்கு முற்போக்கு எண்ணம் கொண்டது. வடக்கு மூடநம்பிக்கையில் மூழ்கிப் போயிருப்பது. தெற்கு பகுத்தறிவுப் பாசறையாக இருப்பது. தெற்கு கல்வித்துறையில் முந்தி நிற்கிறது. இத்துறையில் வடக்கு பிந்தி இருக்கிறது. தெற்கத்திய கலாச்சாரம் புதுமையானது. வடக்கத்திய கலாச்சாரம் பழமையானது” என்றும் தெளிவாகச் சொன்னவர் அம்பேத்கர்.

இந்தியாவுக்கு பொதுவான அரசியல் சட்டத்தை அம்பேத்கர் எழுதிவந்த நேரத்தில் இராஜாஜி இவரைச் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது, “இந்தியா முழுமைக்கும் ஒரு சமஷ்டியை உருவாக்குவது நடக்காத காரியம், இந்தியப் பிரதமரும் ஜனாதிபதியும் இந்தி பேசும் பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். எனவே இரண்டு சமஷ்டியை உருவாக்க வேண்டும். வடக்குக்கு ஒன்று, தெற்குக்கு ஒன்றாக உருவாக்க வேண்டும். இவ்விரண்டையும் கொண்ட மகாசமஷ்டியை உருவாக்க வேண்டும்” என்று இராஜாஜி, அம்பேத்கரிடம் சொன்னாராம். இதனை சுட்டிக் காட்டிய அம்பேத்கர், இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகர் தேவை என்ற புதுமைக் கருத்தை வலியுறுத்தினார். அந்த சிந்தனைக்கு அவர் வரக்காரணம், வடக்கு - தெற்கு மோதல்தான்!

மொகலாயர் ஆட்சியில் டெல்லி, ஸ்ரீநகர் என்ற இரண்டு தலைநகரங்கள் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் கல்கத்தா, சிம்லா ஆகிய இரண்டு தலைநகரங்கள் இருந்தது. பிரிட்டிஷார் போனபிறகு டெல்லி மட்டுமே ஒரே தலைநகராக இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், “டெல்லியில் தலைநகரம் இருப்பது தென்னாட்டு மக்களுக்கு வசதிக் குறைவாக இருக்கிறது என்றும், டெல்லியில் இருப்பதால் வடநாட்டு மக்களால் தாங்கள் ஆளப்படுவதாகத் தென்னாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்றும், டெல்லி பாதுகாப்பான இடமல்ல என்றும், ஹைதராபாத் சரியான இடம் என்றும் எழுதியிருக்கிறார். இப்படி ஆக்கினால் தங்களுக்கு அருகில் தலைநகர் இருக்கிறது என்ற எண்ணம் தென்னக மக்களுக்கு ஏற்படும், வடக்குக்கும் தெற்குக்கும் உள்ளபதற்ற நிலையைத் தணிப்பதற்கு இது மற்றொரு பரிகாரமாக இருக்கும்” என்று எழுதியவர் அவர். அம்பேத்கரை மேற்கோள் காட்டுபவரால் இதற்குப் பதில் சொல்ல முடியுமா? சொந்த தேசமோ, மொழியோ இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது உலக நியதி ஆகிவிட்டது!

Also Read: “பேரழிவு காலத்தில் உயிர்காக்கும் மருந்தைக் கூட கெஞ்சிக் கேட்டு வாங்கவேண்டுமா?”: முரசொலி தலையங்கம் கேள்வி!