murasoli thalayangam
“பழங்குடியினருக்காகப் போராடினாலே அவர்கள் மாவோயிஸ்ட்டுகளா?”: மோடி அரசை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
அனைவருக்கும் முன்னால் சித்தரவதைகள் அனுபவித்து, இறப்பைத் தழுவி பழங்குடி பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
முரசொலி நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு: -
பழங்குடி மக்களுக்காகவே வாழ்ந்த ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் குறித்த இரங்கல் பதிவுகளில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அதிகமாகவே கொந்தளித்துள்ளார்கள். ஏனென்றால் ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். அதுவும் கைதியாக இருக்கும்போது இறப்பைத் தழுவி உள்ளார்.
தீரர்களின் கோட்டமாம் திருச்சியைச் சேர்ந்தவர் ஸ்டேன் சுவாமி. மதங்களைத் தாண்டிய மனிதநேய மாண்பாளராக இருந்தவர். 1996 இல் கழிவுகளைக் கொட்டுவதற்காக மக்கள் வெளியேற்றப்படுவதைக் கண்டித்துப் போராடினார். பழங்குடியினருக்காக நிறைவேற்றப்படும் சட்டங்கள் அமல்படுத்தப்படாமல் இருப்பதை எதிர்த்துப் போராடினார். பழங்குடி மக்கள், மாவோயிஸ்ட்டுகளாக சித்தரிக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுவதை அம்பலப்படுத்தி புத்தகம் எழுதினார்.
2018ஆம் ஆண்டு நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்டார். 1818ஆம் ஆண்டு மகர்கள் நடத்திய போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழா இது. இந்த விழாவை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் எதிர்க்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட தலித்துகள் கைது. செய்யப்படுகிறார்கள். அதில் பங்கெடுத்த ஸ்டேன் சுவாமியும் 2020 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். பழங்குடியினருக்காகப் போராடினாலே அவர்களை மாவோயிஸ்ட்டுகளாக முத்திரை குத்துவது வழக்கமான வாடிக்கையாக வடமாநிலத்தில் வைத்துள்ளார்கள். அதில் ஸ்டேன் சுவாமியும் கைது செய்யப்பட்டார்.
எல்கார் பரிஷத் என்ற வழக்கில் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். 84 வயதான அவரை கைது என்ற பெயரால் கொடுமைப்படுத்தினார்கள். சிகிச்சை என்பதும் கொடூரமானதாகவே அமைந்தது. பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர் இவர். இவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, இவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மும்பை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டது. தனக்கு முறையான சிகிச்சை மறுக்கப்படும் என்று அவர் நினைத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் உடல் நிலை கவலைக்கிடமானது. அதன் படி ஜூன் 5 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு முறையான சிகிச்சை தரப்படவில்லை என்று கூறினார். இங்கு சிகிச்சை பெறுவதை விட சிறையில் செத்துவிடலாம் என்று சொல்லி வந்தார்.
இந்த நிலையில் அவரது விருப்பப்படி பாந்த்ராவில் உள்ள ஹோலிபேமிலி மருத்துவமனையில் 15 நாட்களுக்கு சிகிச்சை வழங்க நீதிமன்றம் அனுமதித்தது. இதன்படி கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஹோலி பேமிலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவதற்கான கால அளவை 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் மற்றும் நுரையீரல் தொற்று, பார்க்கின்சன் நோய் ஆகியவையே அவரது மரணத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஸ்டேன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகிர்தேசாய், “டலோஜா சிறையில் இருந்தபோது ஸ்டேன் சுவாமிக்கு உரிய நேரத்தில் உடனடி மருத்துவ சிகிச்சை வழங்க சிறை நிர்வாகம் தவறிவிட்டது. சிறை நிர்வாகத்தின் அலட்சியமே அவரது உயிரிழப்புக்குக் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.
ஸ்டேன் பாதிரியார் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம், மே 21 அன்று நீதிமன்றத்தில் கூறினார்: “நான் குறைவாகவும் நிறைவாகவும் சாப்பிடுகிறேன், என் சக ஊழியர்களும் என்னைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைவிட டலோஜா சிறையில் இதுபோன்று கஷ்டப்பட்டு இறக்க விரும்புகிறேன். நீதித்துறையை நான் கோருவது ஒரே ஒரு விஷயம் - இடைக்கால ஜாமீனைக் கருத்தில் கொள்வது தான். அதுதான் ஒரே கோரிக்கை” என்றார். அவரது கோரிக்கை இறுதி வரை ஏற்கப்படவில்லை.
பழங்குடி மக்களின் உரிமைக்காகப் போராடியவர் அவர். அவர்களது நலனுக்காகப் பாடுபட்டவர். சமூக செயற்பாட்டாளர். அவருக்குத் தரப்பட்ட பரிசு மாவோயிஸ்ட் என்பதாகும். சட்டவிரோத சட்டத்தில் பொய்யாகப் புனையப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உடல் நலிவுற்ற அவர் சிறையில் சிகிச்சை கிடைக்காமல் சித்தரவதைப்பட்டார்.
பல்வேறு மனித உரிமைகள் மற்றும் ஊனமுற்றோர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் பிரச்சாரத்திற்குப் பின்புதான் அவருக்குத் திரவ உணவு அருந்துவதற்கான குழாய் கருவியே (sipper) சிறை நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வந்த சமயத்தில் மிகவும் நெரிசலுடன் இருந்த டலோஜா (Taloja) சிறையிலிருந்து அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் ஏற்கப்படவில்லை.
ஸ்டேன் சுவாமிக்குப் போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டித்திருந்தது. ஐ.நா.வின் மனித உரிமைகள் பாதுகாப்புப் பிரிவினர் மேரிலார் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இப்படி அனைவருக்கும் முன்னால் சித்தரவதைகள் அனுபவித்து வந்தவர்தான் அந்த பழங்குடி பாதிரியார்.
“நமக்கு முதன்மைத் தேவை நம்முன் இருக்கும் முரண்களைப் பற்றிய தெளிவான புரிதல். ஏழை - பணக்காரன், ஒடுக்குவோர் - ஒடுக்கப்படுவோர் எனத் தொடர்ந்து அதிகரிக்கும் இடைவெளிகளைப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஏழையானவன் பக்கமும் ஒடுக்கப்படுவோரின், விளிம்பு நிலை மக்களின் பக்கமும் நிற்றல் வேண்டும். அவ்வாறு துணிந்து நிற்கும் பொழுது அடக்குமுறையின் எவ்வித கொடுங்கோன்மைத் தன்மைக்கும் தயாராக இருத்தல் வேண்டும்” என்று சொன்னவர் மட்டுமல்ல; சொன்னதைப் போலவே வாழ்ந்தவர் இந்த பழங்குடிப் போராளி!
அவர் மரணித்த அன்றுதான் இன்னொரு செய்தியும் வெளியாகி உள்ளது. வனங்களைப் பாதுகாத்து மேலாண்மை செய்யும் வகையில் பழங்குடியினருக்குக் கூடுதல் அதிகாரமளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. பழங்குடியினரின் நன்மைக்காக வாழ்ந்த ஸ்டேன் சுவாமிக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதாக அது அமையுமா?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!