murasoli thalayangam
“GST ‘மைல் கல்’ அல்ல.. மாநிலங்களின் வளர்ச்சியைத் தடை செய்யும் ‘மரணக்கல்’ !” : முரசொலி தலையங்கம் விளாசல்!
“இந்தியப் பொருளாதார அமைப்பின் மைல் கல் ஜி.எஸ்.டி.” என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சொல்லி இருக்கிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மாநிலங்களின் வளர்ச்சியைத் தடை செய்யும் மரணக்கல்தான் இந்த ஜி.எஸ்.டி. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 2017 ஜூலை 1 முதல் இந்த வரி வசூல் முறை இந்தியா முழுவதும் ஒரே மாதிரி அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே நாடு - ஒரே வரி என்று இதற்கு பெயர் சூட்டினார்கள். அதாவது மாநிலங்கள் வசம் இருந்த நிதி உரிமையைப் பறித்து ஒன்றிய அரசு தனக்குள் ஒளித்து வைப்பது மட்டும்தான் அதில் நடந்துள்ளதே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். அதனால் ஒன்றிய அரசு பயனும் பலனும் அடைந்ததேதவிர - அம்மக்கள் வாழும் மாநிலங்களுக்கு என்ன நன்மை சாதாரணமாக ஒருவர் தனது உரிமையை நிலைநாட்டும் போது, “நானும் வரி கட்டுகிறேன்'' என்பார். அதாவது தனது வரி இந்த மாநிலத்துக்குப் பயன்படுகிறது என்ற பொருளில் சொல்வார். ஆனால் ஜி.எஸ்.டி வரியால் ஒன்றிய அரசு பலன் பெறுகிறதே தவிர, மாநிலங்கள் பலன் பெறுகிறதா என்றால் இல்லை.
அதிகப்படியான மக்கள் வரி செலுத்துகிறார்கள் என்பது உண்மைதான். அதிகப்படியான மக்கள் அதிகப்படியான வரியைச் செலுத்துகிறார்கள் என்பதும் உண்மைதான். அதனை ஒன்றிய அரசே வைத்துக் கொள்கிறது என்பதே பேருண்மை. மாநிலங்கள் இன்னமும் கையேந்தியே கிடக்கின்றன என்பது எல்லாவற்றையும் விட பெரிய உண்மை.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய கே.சந்தானம் சொன்னார், “இந்தியாவின் அனைத்து அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்பட்டால் அந்த அரசின் வாசலில் நின்று பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்களாக மாநிலங்கள் ஆகிவிடும்” என்று சொன்னார். அதுதான் இப்போது நடக்கிறது. அந்த நிலைமையை உருவாக்கியது தான் ஜி.எஸ்.டி. “நார்த் ப்ளாக்கில் நிற்கும் அநாதைக் குழந்தையைப் போல மாநிலங்கள் ஆகிவிடும்” என்று அரசியலமைப்புச் சட்ட உறுப்பினர் விசுவநாத் தாஸ் குறிப்பிட்டார்.
அத்தகைய நிலைமையை உருவாக்கியதுதான் ஜி.எஸ்.டி சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும்போது ஒன்றிய அரசுக்கு உறைக்கும் அளவுக்கு உரையாற்றினார். “ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மாநில நிதி நிர்வாகம் இருக்கும்வரை மாநிலங்கள் நிச்சயம் தனித்து முன்னேற முடியாது. எங்கள் நிதி நிர்வாகத்தை ஒன்றியக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவியுங்கள்” என்று கேட்டார்.
உண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நம் அரசியலமைப்பில் ஒருபோதும் கற்பனை செய்யப்படாத அளவிற்கு, ஒன்றிய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலமாக அவர் சுட்டிக் காட்டினார். “ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதிப்பங்கினைப் பெறுவதற்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்” என்று பேசினார்.
இந்தக் கோபத்தின் பின்னால் உள்ள நியாயத்தை மத்திய பா.ஜ.க அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது, குஜராத் மாநிலத்தின் நிதி உரிமைக்காக அன்றைய காங்கிரசு அரசிடம் கோபமாகப் பேசினார். அப்போது அவர் செய்தது நியாயம், தார்மீக கோபம் என்றால் இப்போது நாம் எழுப்புவதும் நியாயமான தார்மீகமான கோபம் தானே!
வரிவசூலில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவது குறித்து சமீபத்தில் இணைய தளப் பதிவு ஒன்று காணப்பட்டது. (அதில் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை!) “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மேற்கோள் காட்டினார். அதற்குப் பதிலாக அந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன், வள்ளுவரின் இன்னொரு குறளைப் படிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
“வேலொடு நின்றான் ஈடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு”. இதன் பொருள் ஆட்சியிலிருப்போர் தன் மக்களிடம் அநியாயமாக வரி கேட்பது வழிப்போக்காளர்களிடம் ஆயுதத்தைக் காட்டிப் பணத்தைப் பறித்துக் கொள்வதற்குச் சமம் என்பதாகும். இப்படி அதிகப்படியாக வரி வசூல் செய்து, அதனை ஒன்றிய அரசு தனது பயன்பாட்டுக்குக் கொண்டு செல்கிறது.
“வள்ளுவன் சொன்னது போல, ஈட்டலை ஒன்றிய அரசு செய்கிறது. ஆனால் அது யாரிடம் ஈட்டப்பட்டு, யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதுதான் முக்கியமான பிரச்சினை. ஏழை, எளிய, நடுத்தர மக்களிடமிருந்து அநியாயமாக விதிக்கப்பட்ட வரிகளை வசூலித்து இந்தியாவின் ஆகப்பெரும் பணக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சேவையைச் செய்கிறது. இந்தச் செயல் வள்ளுவர் சொன்ன ‘இரவு நேரத்தில் தனியே செல்லும் நபரிடம் ஆயுதத்தைக் காட்டி அபகரித்துக் கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும்” என்று அந்தப் பதிவர் எழுதி உள்ளார்.
அதிகம் பேர் வரி செலுத்துகிறார்கள் என்றும், அது இந்தியாவுக்கு மைல் கல் என்றும் நரேந்திர மோடியும் நிர்மலா சீதாராமனும் பெருமைப்படலாம். மாநிலங்களோ, மக்களோ பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!