murasoli thalayangam
“ஒன்றியம் விவகாரம் - குருமூர்த்தியின் குதர்க்கமும் தமிழிசையின் தர்க்கமான பதிலடியும்” : முரசொலி தலையங்கம்!
‘ஒன்றியம்' என்ற சொல்லை உச்சரித்து விட்டாராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏதோ காணாததைக் கண்டதைப் போலக் குதிக்கிறார்கள்! “சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளதோ அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்றுதான் உள்ளது. “india that is bharath shall be a union of states” என்றுதான் இருக்கிறது.
அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை அல்ல. ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல, மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் பொருள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்' என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 1963 சனவரி 25 நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பேரறிஞர் அண்ணா, ‘அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும் அதன் அங்கங்களுக்கும் இடையே (அதாவது மாநிலங்கள்) பிரித்துத்தரப்பட்டுள்ளது' என்று தான் பேசி இருக்கிறார்.
சமஷ்டி என்ற வார்த்தையை மரியாதைக்குரிய ம.பொ.சி அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ‘வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு - வருக உண்மையான கூட்டாட்சி' என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே எழுதி உள்ளார்கள். எனவே ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை” என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்திய பிறகும் ‘துக்ளக்' குருமூர்த்தி போன்றவர்களால் இருக்க முடியவில்லை.
தி.மு.க ஆட்சி மீது எந்தக் குற்றம் குறையும் கண்டுபிடிக்க முடியாத மனவேதனையில், ‘ஒன்றியம்' என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். மறைமுகமான பிரிவினை வாதமாம் இது. மத்திய அரசை அண்ணாவும் கலைஞரும்கூட இப்படி கொச்சைப்படுத்தவில்லையாம். ஊராட்சி ஒன்றியம் போல அதனைச் சுருக்கிவிட்டாராம் முதல்வர். தி.மு.க.வின் பாதையை முதல்வர் மாற்றிவிட்டாராம். சூசகமான தேசவிரோதக் கருத்தாம் இது. இந்தக் கருத்துகளுக்கு மக்களின் ஒப்புதல் இல்லையாம். இது தி.மு.க.வுக்கு நல்லதில்லையாம். தேசவிரோத சக்திகள் அதிகமாகி விடுவார்களாம். இப்படியெல்லாம் குதர்க்க வார்த்தைகளை குருமூர்த்தி விதைத்துள்ளார்.
மாநில சுயாட்சி என்றால், கூட்டாட்சி என்றால் என்ன, தனிநாடு என்றால் என்ன, சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்ற எந்த ஞானமும் இல்லாத நிலையில் ‘துக்ளக்' தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. union, union of states, union public service commission, union territories - இவை எல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சொற்கள் தான். சுயமரியாதை, பகுத்தறிவு, உடன்பிறப்பே என்பது போல திராவிட இயக்கம் உருவாக்கிய சொற்கள் அல்ல; திராவிடச் சொற்கள் அல்ல. பிறகு ஏன் யூனியன் என்பதைப் பார்த்து பயப்பட வேண்டும்?
சட்டரீதியாக சட்டத்தில் எந்தச் சொல் உள்ளதோ - அந்த union என்பதற்கு மிகச் சரியான தமிழ்ச்சொல்லை எடுத்துத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் பயன்படுத்தினார். இன்றல்ல, அண்ணா காலத்தில், கலைஞர் காலத்தில் அந்தச் சொல்தான் பயன்படுத்தப்பட்டது. தமிழின் மிகச் சிறந்த சட்ட அறிஞரான கு.ச.ஆனந்தன் அவர்கள், தனது புகழ்பெற்ற ‘மலர்க மாநில சுயாட்சி' நூலில் ஒன்றியம் என்ற சொல்லைத்தான் 1971 ஆம் ஆண்டே பயன்படுத்தினார். இன்று அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பாக தமிழில் எழுதப்படும் நூல்களிலும் (இவை தி.மு.க.வினரால் எழுதப்பட்டதல்ல!) ஒன்றியம் என்ற சொல்தான் இருக்கிறது.
மத்திய அரசு என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கும் முயற்சி நடந்தது. அதற்கு centralisation policy என்று பெயர். இதனை வைத்துத்தான் அனைத்து அதிகாரங்களும் கவர்னர் ஜெனரலிடம் 1773 முதல் குவிக்கப்பட்டது. இந்த அதிகாரம் 1935க்குப் பிறகு மாநிலங்களுக்கு அதிகளவில் தரப்பட்டது. அன்று மாநில ஆட்சிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, இந்த அதிகாரங்களை அதிகமாக வாதாடிப்பெற்றது.
ஆனால், 1947 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் சூழல் நெருங்கியதும் அவர்களும் centralisation policy - யை நோக்கிப் போனார்கள். இதுதான் ‘மத்தியப்படுத்தப்பட்ட அரசின்' வரலாறு. “டொமினியன் தகுதியோடு கூடியதும், பிரிட்டன் அரசுக்குக் கீழ்ப்படியாததுமான சமநிலைத் தகுதி பெற்ற இந்திய ஒன்றியத்துக்கு (indian union) அடிப்படை அரசமைப்பு உருவாக்குவதுதான் எமது ஆட்சியின் நோக்கமாகும்” என்றார் 1942 இல் கிரிப்ஸ். அதுதான் 1950 இல் அரசமைப்புச் சட்ட வடிவம் ஆனது. இதனைத் தான் ஒன்றியம் என்ற மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்தி வருகிறோம்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், “இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு” என்ற சொல்லை மிகச் சரியாகவே பயன்படுத்தினார். “இந்திய யூனியன் டெரிடரி ஆப் புதுச்சேரி என்பதன் மொழி பெயர்ப்பு சரியாக இருந்ததால் அதைச் சொன்னேன். இதில் குறை காண்பவர்களுக்கு அரசியல் சட்டம் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது போதுமான அளவுக்கு தமிழ் மொழியில் அறிவு இல்லாமல் இருக்க வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார் மேதகு தமிழிசை அவர்கள். இதைவிட சரியான விளக்கம் சொல்லத் தேவையில்லை!
உள்ளுக்குள் ஒன்றி இருப்பவர்கள்தான் ஒன்றியம் என்ற சொல்லைப்பயன்படுத்த முடியும். தனியாகப் பிரிபவர்கள் ஒன்றியம் என்ற சொல்லைப்பயன்படுத்த மாட்டார்கள்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!