murasoli thalayangam
"திரும்பத் திரும்ப ஒரே பொய்யைச் சொல்லும் பழனிசாமி... தி.மு.க-வின் நிலைப்பாடு இதுதான்” - முரசொலி தலையங்கம்
திரும்பத் திரும்ப ஒரே பொய்யைச் சொல்லி வருகிறார் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி. அவர் முதலமைச்சராக இருந்தபோதும் அதே பொய்யைத்தான் சொன்னார். எதிர்க்கட்சித் தலைவர் ஆனதும் அதே பொய்யைச் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரையில் அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது இல்லை!
நீட் தேர்வை தி.மு.க ஆட்சிதான் கொண்டு வந்தது என்பதுதான் பழனிசாமியின் பழைய பொய். அவருக்கு நீட் தேர்வைப் பற்றி தலையும் தெரியவில்லை, வாலும் தெரியவில்லை. நீட் தேர்வு என்பதே 2016 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. முதல் தேர்வு நடந்ததே 2016இல்தான். பல்வேறு மாநிலங்கள் எதிர்த்த காரணத்தால் விதிவிலக்கு தரப்பட்டது. 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதனால் 2016 - 17 ஆம் ஆண்டுக்கான தேர்வில் விலக்கு கிடைத்தது. ஆனால் அடுத்து வந்த பழனிசாமி அரசாங்கம் ‘நீட்’ தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டுவிட்டது. தானும் எதிர்ப்பது போல காட்டுவதற்காக இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒப்புக்கு அனுப்பினார்கள். அதனை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக்கூட வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்ததுதான் பழனிசாமியின் நாடகங்களில் மகத்தானது.
2011 முதல் தி.மு.க அதிகாரத்தில் இல்லை. நீட் தேர்வை எதிர்த்து 2013 ஆம்ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியே தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். நீட் தேர்வு மசோதாவுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி உயிர் கொடுத்தது. அப்போதும் தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். பா.ஜ.க அரசுதான் இப்படி ஒரு தேர்வை மீண்டும் கொண்டு வந்தது. அ.தி.மு.க அதற்கு தலையை ஆட்டியது. அதனால்தான் 2017 ல் அனிதா முதல் இன்று வரை 13 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்று ஏழு மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்கள். அப்போது பழனிசாமி, சேர்ந்து கொள்ளவில்லை. சேர்ந்தால் மோடி கோபித்துக் கொள்வார் என்று பயந்து பதுங்கினார்கள். பம்மினார்கள். அதுதான் உண்மை.
2011 முதல் தி.மு.க அதிகாரத்தில் இல்லை.
2014 முதல் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆட்சியில் இல்லை.
2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒரு தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் அது உச்சநீதிமன்றத்தால் தடைபோடப்பட்டு அரசாணையே செல்லாது என்று ஆக்கப்பட்டுவிட்டது. இப்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று. அத்தோடு விவகாரம் முடிந்துவிட்டது. இப்படி முடிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும், பா.ஜ.க ஆட்சிதான் கையில் எடுக்கிறது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தேர்வுக்கு அனுமதியே தருகிறது. அப்போது காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இல்லை. மாநிலத்திலும் தி.மு.க ஆட்சியில் இல்லை. நுழைவுத் தேர்வு என்பதை மிகமிகக் கொடூரமான தேர்வு முறையாக வடிவமைத்தார்கள். சாமானியர்கள் யாரும் நுழைய முடியாத தேர்வாக பா.ஜ.க அரசு மாற்றியது.
நீட் தேர்வை நாம் எதிர்க்க மிக முக்கியமான காரணம், அது சி.பி.எஸ்.இ முறையில் படித்த மாணவர்களுக்கு மட்டும் வசதியானதாக இருக்கிறது. இதனால் மற்ற கல்வி முறையில் படித்தவர்கள் பின்னடைவைச் சந்திக்கிறார்கள்.
பல லட்சம் பணம் கொடுத்து தனியார் பயிற்சி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு தருகிறது. இதனால் ஏழை எளிய பிள்ளைகள் அந்த வாய்ப்பைப் பெற முடியவில்லை. இதனால்தான் சமத்துவம் அற்றதாக இந்தத் தேர்வு முறை இருக்கிறது என்று சொல்லி எதிர்க்கிறோம். இந்த உண்மைத்தன்மையை அனைவரும் முதலில் உணர வேண்டும்.
நீட் தேர்வு எதிர்ப்பை பா.ஜ.க.வுக்கு எதிரானது, மோடிக்கு எதிரானதாக சுருக்கிப் பார்க்கக்கூடாது. இன்றைக்கு பா.ஜ.க கொண்டு வந்ததற்காக மட்டுமல்ல, நாளைக்கு காங்கிரஸ் அரசு கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டிய தேர்வுதான் நீட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இப்படி ஒரு தேர்வு வரலாமா என்று யோசிக்கப்பட்ட போதே 2010 ஆம்ஆண்டு எதிர்த்தவர்தான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அன்றைய காங்கிரஸ் அரசுக்கு இந்தத் தேர்வைக் கண்டித்து கடிதம் எழுதினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம் ‘நீட்’டுக்குத் தடையும் விதித்தது என்பது வரலாறு.
இதுபோல் பலரும் வழக்கு தாக்கல் செய்தார்கள். அனைத்து வழக்களும் உச்சநீதிமன்றம் போனது. இதுபோன்ற தேர்வை நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று 2013ஆம் ஆண்டு தீர்ப்பு தரப்பட்டது. இதுவும் வரலாறு.
இப்படி முடக்கப்பட்ட தேர்வுக்கு மறுசீராய்வு மனுவைப் போட்டு உயிரூட்டியது பா.ஜ.க.அரசு. ( 16.3.2016) இதுவும் வரலாறு.
நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் போட்டு அனுப்பினோம். அதுவும் வரலாறு. அதனை பா.ஜ.க அரசு திருப்பி அனுப்பியது.
இன்றைய தினம் நீட் தேர்வு கூடாது என்பதில் தி.மு.க அரசு அழுத்தமாக இருக்கிறது. அதனைச் சட்டபூர்வமாகச் செய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பதாக அ.தி.மு.க.வும் சொல்கிறது. சட்டமன்றத்தில் பா.ஜ.க குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனும், சட்டபூர்வமானதாக இருந்தால் ஆதரவு என்பது போல் சொல்லி இருக்கிறார்.
நீட் தேர்வை ஆதரிக்கும் அரசியல் கட்சி பெரும்பாலும் தமிழ்நாட்டில் இல்லை என்பதே இன்றைய நிலை. இத்தகைய சூழலில் நீட் தேர்வுக்கு அனைவரும் இணைந்து முற்றுப்புள்ளி வைக்க அழைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிச்சயம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்