murasoli thalayangam
வார்ரூம் முதல் நிதியுதவி வரை.. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த கழக அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம் !
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது கழக அரசு! இன்னும் சில வாரங்களில் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். இலக்கைக் குறி வைத்தல் - அந்த இலக்கை அடையத் திட்டமிடுதல் - அந்த ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்டிருத்தல் - அதை அடையத் தடையாக இருக்கும் வழிகளை அடைத்தல் - அதற்காக தன்னையே ஒப்படைத்துக் கொள்ளுதல் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். அந்த இலக்கின் வெற்றிப் பாதை தீர்மானிக்கப்பட்டது. வெற்றியின் இறுதி இலக்கை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார்.
முதலாவதாக, இந்த நோய்த் தொற்றுப் பரவலை முதல்வர் மறைக்கவில்லை. மறைக்காமல் உண்மை நிலைமையை தன்னிடம் சொல்லச் சொன்னார். தன்னிடம் சொல்லப்பட்ட உண்மைகளை அவரும் நாட்டு மக்களுக்குச் சொன்னார். நோயின் தன்மையை உணராமல் நோயைத் தீர்க்க முடியாது என்பதே அனைத்துக்கும் அடிப்படை. அந்த வகையில் உண்மை - முழு உண்மை ஆகிய இரண்டையும் நாட்டு மக்கள் மத்தியில் மறைக்காமல் உணர்த்தியதன் மூலமாக, நோயை வெல்லும் முதலடியை எடுத்து வைத்தார் முதலமைச்சர்.
கொரோனா என்பது பரவும் நோய். அப்படியானால் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். பரவலைக் கட்டுப்படுத்த அது பரவும் சங்கிலியை உடைத்தாக வேண்டும். அதற்கு ஒரே வழி முழு ஊரடங்கு. அதனைப் பிறப்பித்தார் முதல்வர். இந்த முழு ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மைதான். அதற்காக நான்காயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.
* செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை.
* ஊடகவியலாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு.
* மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாகப் பெற்றது.
* நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட வாரியாக அமைச்சர்கள்.
* வார் ரூம்.
* பொது நிவாரண நிதிக்கு நிதி திரட்டல்.
* அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு.
* கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு.
* மருத்துவப் பணியாளர்களுக்கு 3 மாதம் ஊக்கத் தொகை.
* பிற மாநிலத் தொழிற்சாலைகளிலிருந்து ரயில் மூலம் ஆக்ஸிஜன்.
* ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகைப் பொருட்கள் தொகுப்பு.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகச் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழு.
* உலக அளவில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய டெண்டர்.
* ரெம்டெசிவர் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கினால் குண்டர் சட்டம்.
* தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை.
* சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் எனப் பல மாவட்டங்களில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கொரானா சிறப்புச் சிகிச்சை மையங்கள்.
* செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை அரசே ஏற்று நடத்த முயற்சி.
* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி.
- இப்படி, ஒவ்வொரு நிமிடமும் திட்டமிட்டுக் கொண்டே இருந்தார் முதலமைச்சர். கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இதில் மிகமிக முக்கியமானது ‘கட்டளை மையம்’ எனப்படும் ‘வார் ரூம்’.
கழகம் ஆட்சிக்கு வரும்போது; தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினமும் கிட்டத்தட்ட 36 ஆயிரம் நோயாளிகள் புதிதாகத் தொற்றுடன் கண்டறியப்பட்டனர். இந்த எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மருத்துவமனைகளில் சாதாரணப் படுக்கைகள் நிரம்பின. ஆக்சிஜன் வசதியுள்ள அனைத்துப் படுக்கைகளுமே நிரம்பிவிட்டன. நோயாளிகள் குணமடைந்து, சாதாரண வார்டிற்கு மாற்றப்பட, சாதாரணப் படுக்கைகளிலும் இடமில்லை என்ற சூழல் நிலவியது.
இந்த நிலையைப் போக்குவதற்காகத்தான் கட்டளை மையத்தை உருவாக்கினார் முதலமைச்சர். மருத்துவமனைகளின் எண்ணிக்கை - அங்குள்ள சாதாரணப் படுக்கைகள் - ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் - தீவிர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகள் அனைத்துத் தகவல்களும் ஒரே இடத்துக்கு வந்தன. எந்த மருத்துவமனையில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பது பட்டவர்த்தனமாக வெளிச்சத்துக்கு வந்தது. காலியான இடங்களுக்கு நோயாளிகள் அழைத்து வரப்பட்டார்கள். ‘எங்கே போவது?’ என்று அலையும் சூழலுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தக் கட்டளை மையத்துக்குத் தகவல் கொடுத்தால், அவசர ஆம்புலன்ஸ் வரும். அந்த வாகனமே, படுக்கை காலியாக உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்லும். எங்கே போவது, எப்படிப் போவது என்ற குழப்பத்துக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒரே ஒருமுறை தொலைபேசியில் அழைத்து சொன்னால் போதும். அவர்களே ஆக்சிஜனுடன் கூடிய படுக்கையைத் தேர்வு செய்வது, வென்டிலேட்டர் வேண்டுமானால் அதற்கான ஏற்பாடுகள் செய்வது, ஆம்புலன்ஸ் அனுப்புவது, முன்னுரிமை அடிப்படையில் நோயாளிகளைச் சேர்ப்பது என அனைத்தையும் செய்து விடுவார்கள். தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை என்பதே இல்லை. முதலில் போன் செய்தவர்களுக்கே முன்னுரிமை என்பதாக ஆனது.
நோயின் தன்மை தீவிரமாக ஆனவர்களுக்கு முன்னுரிமை என்றும் ஆனது. ஒருநாள் நள்ளிரவில் முதல்வரே இந்தக் கட்டளை மையத்துக்கு வந்து, அங்கு வரும் அழைப்பை எடுத்துப் பேசினார். ‘தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு தமிழ்நாடே துணையாக இருக்கிறது’ என்பதை அது காட்டியது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகள், கோவிட் சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள், ஆக்சிஜன் வழங்குபவர்கள், அரசு மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் ஆகியவை ஒரே நேர்கோட்டில் இணைக்கப்பட்டன. மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் 104 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது டிவிட்டரில் தொடர்பு கொள்ளலாம். ட்விட்டர் பக்கத்துக்கு செய்தியாகவும் அனுப்பலாம்.
எத்தனை பேர் அழைத்தார்கள், அதில் எத்தனை பேர் ஆபத்தான நிலையில் இருந்தார்கள், எத்தனை பேருக்குப் படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன, எத்தனை கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன போன்ற அனைத்துத் தகவல்களும் கட்டளை மையத்தின் திரையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் 108 ஆம்புலன்சுகள் ஒவ்வொன்றும் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கின்றன என்ற தகவல் நேரலையாக ஒருதிரையில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு நோயாளியும் தமிழ்நாடு அரசால் கண்டுபிடிக்கப்பட்டார், கண்காணிக்கப்பட்டார், குணப்படுத்தப்பட்டார்.
சரியான நேரத்தில் அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால் கடந்த 20 நாட்களில் கொரோனா பாதிப்பு பெருமளவு சரிந்துள்ளது. மே 8 முதல் 25 வரையிலான காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு 7500 அழைப்புகள் வந்துள்ளது. இப்போது அது 500 அழைப்புகளாகக் குறைந்துவிட்டது. சென்னையில் கடந்த மே மாதம் 12ஆம் தேதி ஒரேநாளில் 7,564 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் அது 1200 ஆகிவிட்டது. நாளுக்கு நாள் குறையும்.
“எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். ஓட்டுப்போடாதவர்கள் எங்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைத்து நிச்சயம் வருத்தப்படும் அளவுக்கு எங்களது பணி இருக்கும்” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதைத்தான் நிரூபித்துக் காட்டி வருகிறார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!