murasoli thalayangam
“தடுப்பூசி விவரங்கள் என்ன ராணுவ ரகசியமா? - பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதன் பின்னணி என்ன?” : முரசொலி!
தடுப்பூசி விவரங்களை வெளியிட வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பேரிடர் காலத்தில் முதலில் இருக்கவேண்டியது வெளிப்படைத்தன்மை தான். அதையே ஒன்றிய அரசு கடைப்பிடிக்க மறுப்பது மர்மமாக இருக்கிறது!
ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகர் பிரதீப் ஹல்தார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை இ-வின் என்ற மின்னணு அமைப்பில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது.
ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் ஆதரவுடன் சர்வதேச தடுப்பூசித் திட்டத்தின் கீழ் அந்த மின்னணு அமைப்பை ஒன்றிய அரசு பராமரித்து வருகிறது. மாவட்ட அளவில் இருந்து தேசிய அளவு வரையிலான தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களைக் கண்டறிய அந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசுக்குச் சொந்தமான அந்த மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் தினசரி அடிப்படையில் பதிவேற்றம் செய்து வருகின்றன.
அதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. தடுப்பூசித் திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, அந்த மின்னணு அமைப்பில் உள்ள தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த நிறுவனத்துடனும் ஊடகங்களுடனும் மாநில அரசுகள் ஒருபோதும் பகிரக்கூடாது. மேலும் வலைத்தளத்திலும் வெளியிடக்கூடாது” - என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் இல்லை என்பதை பல்வேறு மாநிலங்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி உள்ளன. இதனால் ஒன்றிய அரசின் சாயம் வெளுத்துக் கொண்டு இருப்பதால் இத்தகைய உத்தரவைப் போட்டுள்ளார்கள்.
தமிழகத்தை மட்டுமே நாம் எடுத்துக் கொள்வோம். தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை என்பதுதான் உண்மையான செய்தி. தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை அனுப்புமாறு ஒன்றிய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவசரச் செய்தி அனுப்பி உள்ளார்.
தடுப்பூசி போடுவதை மாபெரும் இயக்கமாவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றிவிட்டார். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு என்பதும் தமிழகத்தில் அதிகம். சாரை, சாரையாக தடுப்பூசி போட மக்கள் முன்வரத் தொடங்கி விட்டார்கள். கையிருப்பில் இருந்த அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுவிட்டன. கூடுதல் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டிய ஒன்றிய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது.
தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தமிழக அரசால் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்வரும் சூழலில் தடுப்பூசி இல்லை. எனவே தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன், ஒன்றிய அரசுக்கு அவசரச் செய்தியை அனுப்பி உள்ளார். தேவையான தடுப்பூசியை தமிழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதே அந்த அவசரச் செய்தி.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரம், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மத்திய அரசிடம், 1.01 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெறப்பட்டு, 98 லட்சம் பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கையிருப்பில் இருந்த 12,000 தடுப்பூசிகள் புதன்கிழமை மாலைக்குள் செலுத்தப்பட்டன. இந்த மாதத்துக்குள் 42 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இவை போதுமானதா என்றால் போதாது. இந்த உண்மைகளை பொதுவெளியில் பேசாமல் எப்படி இருக்க முடியும்? இதுவரை ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பாருங்கள் :-
1. மகாராஷ்டிரா - 2,50,28,590
2. உத்தரப்பிரதேசம் - 2,15,57,435
3. குஜராத் - 1,19,95,263
4. ராஜஸ்தான் - 1,84,42,891
5. மேற்கு வங்கம் - 1,69,21,916
6. கர்நாடகா - 1,59,82,042
7. மத்தியப்பிரதேசம் - 1,35,64,305
8. பீகார் - 1,13,95,688
9. ஆந்திரா - 1,12,14,944
10. கேரளா - 1,08,25,077
11. தமிழ்நாடு - 1,02,23,676
- இதுதான் ஜூன் 9 ஆம் நாள் வரையிலான நிலவரம். தடுப்பூசி தருவது எந்த அடிப்படையில் தரப்படுகிறது? கொரோனா பாதிப்பின் அடிப்படையிலா? மக்கள் தொகை அடிப்படையிலா? பா.ஜ.க.வுக்கு அந்தந்த மாநிலத்தில் இருக்கும் செல்வாக்கின் அடிப்படையிலா?
உயிர்காக்கும் அக்கறையில் வெளிப்படைத்தன்மை வேண்டாமா? அனைவருக்கும் பொதுவானது என்ற சிந்தனை ஒன்றிய அரசுக்கு வேண்டாமா? யாராலும் விரல் நீட்டிக் குறைசொல்ல முடியாத தன்மை ஒன்றிய அரசுக்கு வேண்டாமா?
எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதன் பின்னணி என்ன? இது என்ன ராணுவ ரகசியமா? அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் அள்ளிக் கொடுக்கும் தன்மை இருக்குமானால், இதுபோன்ற சுற்றறிக்கைகளுக்கு அவசியமே இல்லையே?
ஒன்றிய அரசு ஒளிவுமறைவு இல்லாமல் நடந்து கொள்வதே ஆட்சியின் முதல் இலக்கணமாக அமையவேண்டும். அப்படி அமையாதது வரை அதன் அனைத்து நடவடிக்கைகளும் சந்தேகத்துக்கு உரியதாகவே பார்க்கப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!