murasoli thalayangam
“தடுப்பூசி போடுவதை இயக்கம் ஆக்கி தமிழக அரசு.. நம்பிக்கை அளிக்கும் முதல்வரின் செயல்பாடு” : முரசொலி !
தடுப்பூசியை இயக்கம் ஆக்கி வருகிறது தமிழக அரசு! நேற்றைய தினம் திருப்பூரில் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தடுப்பூசியே மிக மிக முக்கியமானது என்பதைத் தொடர்ந்து முதல்வர் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முழு ஊரடங்கு என்பது எவ்வளவு அவசியமோ, அதைப்போல தடுப்பூசியும் மிக அவசியமானது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை கொரோனா தாக்கினாலும் அதில் இருந்து விரைந்து குணமடையலாம் என்பதை மருத்துவர்கள் சொல்லி வருகிறார்கள். இதனை தமிழகத்தில் உள்ள அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற சூழ்நிலையை உருவாக்கவே முதல்வர் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்கள்.
கோவிட் தடுப்பூசித் திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ஆம் நாள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு அன்றைய தினம் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த மார்ச் முதல் நாள் முதல் 45 - 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அனுமதியும் அன்றைய தினம் தரப்பட்டது. ஏப்ரல் முதல் நாள் முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. மே 1 முதல் 18 - 44 வயதுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.
இப்படி ஒன்றிய அரசு அறிவித்ததே தவிர, அதற்குத் தேவையான அளவு தடுப்பூசியை மாநிலங்களுக்கு வழங்கவில்லை என்பதே உண்மை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 20ம் தேதி வரை ஒன்றிய அரசின் மூலமாக 78,49,780 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதில் கோவிஷீல்டு 66,42,650 ஆகும். கோவேக்சின் 12,07,130 ஆகும். தமிழக அரசின் மூலமாகப் பெறப்பட்டவை 10,62,000 ஆகும். இவை அனைத்தும் சேர்த்தால் 89,11,780 ஆகும்.
இதுவரை 71,05,791 பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12,35,847 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இதனை செலுத்தும் பணி நடந்து வருகிறது. ஒன்றிய அரசு தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்பி இருந்தால் இன்னும் கூடுதலான மக்களுக்கு நாம் செலுத்தி இருக்க முடியும். மே 7 நிலவரப்படி குஜராத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள் 1,39,71,790. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72,03,950. தமிழ்நாட்டை விட குஜராத்திற்கு அதிக தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாகுபாட்டுக்கு எதிராக தமிழக அரசு ஒருபக்கம் போராடி வந்தாலும் இன்னொரு பக்கத்தில் தடுப்பூசியை உலகளாவிய ஒப்பந்தங்கள் மூலமாக இறக்குமதி செய்யவும் எடுத்த முடிவானது மகத்தானது. அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு உள்ளது. மூன்று மாதத்துக்குள் தடுப்பூசிகளை முழுமையாக வழங்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 3.5 கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யவுள்ளதாக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு முயற்சியையும் தமிழக முதல்வர் எடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு உடனடியாக குறைந்த பட்சம் ஒருகோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனிடம் தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு மூலமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு உடனடியாக குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதத்தை வழங்கினார். அந்தக் கடிதத்தில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி இருப்பதாகவும், ஆனால் இதற்காக மத்திய அரசு 13 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தடுப்பூசிகளை கொடுத்தால் மக்களுக்கு முழுமையாகச் செலுத்த வாய்ப்புக் கிடைக்கும் என்றும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய கூடுதலாக 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்றும், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக எச்.எல்.எல் ஆலையில் கூடுதல் முதலீடு செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்.எல்.எல் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை புனரமைக்கும் பணியை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவினை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்குமாறு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.
தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை தமிழகத்தில் உற்பத்தி செய்ய 50 கோடி ரூபாய் முதலீட்டுடன் தனியார் நிறுவனங்கள் முன்வந்தால், அவை டிட்கோவுடன் கைகோர்க்கலாம் என்றும் தமிழக முதல்வர் கடந்த வாரத்தில் ஒரு அறிவிப்பைச் செய்துள்ளார். இவை அனைத்தையும் ஒன்று சேரப் பார்க்கும்போது தடுப்பூசி போடும் மாபெரும் இயக்கத்தை நோக்கி தமிழக முதல்வர் முன்னேறிச் செல்கிறார் என்பது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்