murasoli thalayangam
“தமிழ்நாடே பார்! உன் மொழிக்குத் தொண்டாற்றியவர்கள் யாரென்று தெரிந்து கொள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
ராயங்கால் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜநாராயணன் என்ற கி.ரா. மறைந்துவிட்டார். 99 வயது. செப்டம்பரைத் தொட்டிருந்தால் நூறு ஆண்டுகள். தமிழ் இலக்கியத்தில் நூறு ஆண்டுகளைத் தொட்ட படைப்பாளியாக கி.ரா. பெயரெடுத்து இருப்பார். அதைவிட அதிமாக பல்வேறு நூற்றாண்டுகளைக் கடந்தும் நிற்கும் படைப்புகளை அவர் படைத்தளித்துவிட்டுப் போயிருக்கிறார். சும்மா போகவில்லை கி.ரா. நிறையப் படைப்புகளைக் கொடுத்துவிட்டே போயிருக்கிறார்.
படைப்பாளிகள் மரணம், சிலர் கூடி நிற்க விடைபெறுதலாகவே இதுவரை இருந்தது. ஆனால் கி.ரா.வின் மரணத்தை தமிழ்ச் சமூகத்தின் துன்பியல் நிகழ்வுகளுள் ஒன்றாக அடையாளம் காட்டி - அவருக்கான மாபெரும் மரியாதையைச் செய்துவிட்டார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! “வானம் பார்த்த கரிசல் பூமியில், வறண்ட பூமியில் மக்கள் மனதில் ஈரமிருக்கிறது. அன்பு, பிரியம் அவர்களிடத்தில் இருக்கிறது. அத்தகைய மனிதர்களையே கதைக்குள் தேடி கண்டடைந்தேன். அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் குறுகிய மனம் படைத்தவர்களை வெறுப்பதைத் தவிர நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது. பருவமே பொய்த்து அவர்களைப் பழிவாங்கும் போது, பசியால், பட்டினியால் வர்ண அடுக்கால் அவர்கள் அல்லல்படும் போது நாமும் கலங்கத் தான் முடிகிறது.”- என்று கலங்கிக் கலங்கி எழுதியவர் கி.ரா. அவரது எழுத்துக்கள் சாமானியர்களின் அனைத்து வகையான அல்லல்களையும் சொல்பவை!
“இந்த நாட்டின் ஒரு தெற்கு கடைசி மூலையில் இருக்கிறது எனது கிராமமான இடைசெவல் 250 வீடுகளைக் கொண்ட சிறிய கிராமம்தான் நாட்டின் மிக உயர்ந்த அளவு மழை கொட்டும் இடம் சிரபுஞ்சி என்று சொன்னால் நாட்டின் மிக குறைந்த அளவு மழை பெய்யக் கூடிய இடம் எனது வட்டாரமான கரிசல் பிரதேசம். இந்த மண்ணைக் “கரும் பாலைவனம் ” என்று ஒரு விதத்தில் குறிப்பிட்டுச்சொல்லலாம். ஒரு காலத்தில் வெறும் கள்ளிச் செடிகளும் முழு காடுகளும் நிறைந்த வனாந்திரப் பிரதேசமாகவே இருந்தது இந்த இடம். இவர்களுக்கு பிரத்யேகமான மொழி உண்டு. சாதாரண மேம்போக்கான பொது மொழி நடையை விட வட்டார வழக்கு நடைமுறை ஆழமானது.
அது மக்களின் ஆன்மாவிலிருந்து உதிப்பது, அதற்கு என்று ஒரு மொழி சிறப்பு உண்டு” என்று சொல்லி அந்த மொழியை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த பல படைப்புகளின் மொழிநடையாக மடைமாற்றியவர் கி.ரா. இன்று இடைசெவல் இலக்கியம் செழிக்க வைத்த பூமி! அந்த இடைசெவலில் கி.ரா.வின் இறுதி நிகழ்ச்சிகள் அரசு மரியாதையுடன் நடந்துள்ளன. தமிழக வரலாற்றில் ஒரு எழுத்தாளனுக்கு அரசு மரியாதை என்பது முதன்முதலாக நடந்திருக்கிறது. வாழும் காலத்தில் தனது படைப்புக்குரிய அனைத்து பேரையும் புகழையும் பெற்ற கி.ரா. மரணத்திலும் அதேமரியாதையை அடைந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், மரியாதைக்குரிய அமைச்சர் பெருமக்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கி.ரா.வின் இடைசெவல் கிராமத்துக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத காரணத்தால், ஒரு ஏழை விவசாயி வீட்டின் கதவை கழற்றிக் கொண்டு போவதை ‘கதவு’ என்ற கண்ணீர் கதையாக எழுதி இருப்பார் கி.ரா. கிராமத்தை, கிராமத்து மனிதர்களை, மண்ணை, அந்த மண்ணில் தனது ரத்தத்தால் வியர்வையால் விளைவிக்கப் போராடி வரும் விவசாயிகளை, அதிகாரவர்க்கத்தை, அரசியல்வாதிகளை தனது எழுத்தால், படைப்பால் கொண்டுவந்து நிறுத்தியவர் கி.ரா. அவருக்கு ஒரு அரசாங்கம் மரியாதை செலுத்துகிறது. இதன் மூலம் எழுத்தை மதிக்கும் ஒரு அரசாங்கம் தமிழகத்தில் மலர்ந்துள்ளது.
இன்னும் சில அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்கள். கி.ராவுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என்பது ஒன்று. கி.ரா. அவர்கள் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அவரது புகைப்படங்கள் - படைப்புகள் அடங்கிய அரங்கம் அமைக்கப்படும் என்பது இரண்டாவது. இவை ஏதோ கி.ரா.வை பெருமைப்படுத்தும் செயல்கள் மட்டுமல்ல.
தமிழ்நாடே! பார்! உன் மொழிக்குத் தொண்டாற்றியவர்கள் யாரென்று தெரிந்து கொள்! - என்பதை இந்த நாட்டுக்குச் சொல்வது ஆகும். அதை விட முக்கியமாக அவர்களது ஊருக்குச் சொல்வதாகும்! மாபெரும் படைப்பாளிகள் சிலர் அந்த மாநிலம் முழுவதும் தெரிந்திருப்பார்கள். ஆனால் அவர்களது சொந்த ஊரில் அவர்களைத் தெரியாது. ‘நம்முடைய ஊர்க்காரர்தான் இவ்வளவு பெரிய எழுத்தாளராக இருக்கிறார்’ என்பது அந்த ஊர்க்காரர்களுக்குத் தெரியாது. இதைவிட அந்தப் படைப்பாளிக்கு அவமானம் இருக்க முடியாது.
மேற்கத்திய நாடுகளில் மாபெரும் படைப்பாளி கள் பிறந்த பகுதியில் குறிப்பிட்ட படைப்பாளிக்கு ஒரு கல்வெட்டு வைத்திருப்பார்கள். இந்தப் படைப்பாளி, எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்று இருக்கும். அத்தகைய ஒருமுறை தமிழ்நாட்டிலும் உருவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடித்தளம் அமைத்துள்ளார்கள். அதற்கு தனது படைப்புகள் மூலமாக கி.ரா, காரணம் ஆகிவிட்டார்கள். கி.ரா.வின் புதல்வர்கள் திவாகரன், பிரபாகரன், மற்றும் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், கரிசல் எழுத்தாளர்கள், முற்போக்குப் படைப்பாளிகள், தமிழ் ஆளுமைகள் அனைவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.
அதில் மிக முக்கியமானது எழுத்தாளர் வண்ணதாசனின் பதிவு ஆகும். “தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் கி.ரா உடலுக்கு இறுதிச் சடங்குசெய்யப்படும். - கோவில்பட்டியில் கி.ராஜநாராயணனுக்கு அரசு சார்பில் சிலை அமைக்கப்படும்.- இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும் - கி.ராவின் படைப்புகளைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கம் நிறுவப்படும். - என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. புதுவை அரசு பிரபஞ்சனுக்குச் செய்ததை - கேரள அரசு ஆ. மாதவனுக்குச் செய்ததை - முந்திய தமிழக அரசு ஜெயகாந்தனுக்கும் அசோகமித்திரனுக்கும் செய்யாததை - கி. ராஜநாராயணனுக்குச் செய்திருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசு போற்றுதலுக்குரியது” என்று எழுதி இருக்கிறார் வண்ணதாசன்.
“தமிழாய்ந்த ஒருவன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்” என்றார் புரட்சிக்கவிஞர். அப்படி வந்ததால் கி.ரா.போன்ற படைப்பாளிகள் மதிக்கப்படுகிறார்கள். இது எழுத்தைப் பெருமைப்படுத்தும் காலமாக மாறி இருக்கிறது. எழுத்தை மதிக்கும் மனிதர் முதலமைச்சராக ஆனதால் இது நடந்துள்ளது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!