murasoli thalayangam
கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சிக் குழு அமைத்த முதல்வர்; மாற்று அரசுக்கான சூத்திரம் என முரசொலி புகழாரம்!
கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுவதற்காகவும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கவும் எல்லாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமது தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருக்கிறார்கள். முதலாம் அலை வீசிய காலத்தில் தேர்தலுக்கு முன்பு கொரோனா குறித்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுமாறு பலமுறை கோரிக்கை வைத்தும், அந்தக் கோரிக்கைகள் விமர்சனம் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டன.
கட்சிகளில் உள்ளவர்கள் எல்லாம் டாக்டர்களா? என்றும் கேட்கப்பட்டன. ஆனால், இன்று 13 பேர் கொண்ட குழுவில் 3 பேர் டாக்டர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். தி.மு.க. சார்பில் டாக்டர் எழிலன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பாக ஏ.எம். முனிரத்தினம், பா.ம.க. சார்பில் ஜி.கே. மணி, பா.ஜ.க.வின் சார்பில் நயினார் நாகேந்திரன், ம.தி.மு.க. சார்பில் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.பி.நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தி.இராமச்சந்திரன், மனிதநேயக் கட்சி சார்பில் முனைவர் ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க. சார்பில் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி ஆகிய 13 பேர் அக்குழுவில் இடம் பெற்று இருக்கின்றனர்.
இந்தக் குழுவுக்குப் பொதுத்துறைச் செயலாளர் டி.ஜகந்நாதன் உறுப்பினர் செயலாளர். இக்குழுவின் நோக்கம் என்ன? அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை அரசு பெற இக்குழுக் கூடி விவாதிக்கும். அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும். தி.மு.கழகத்தின் ஆட்சியின் போது இத்தகைய குழு அமைக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்தும் செயலாகவே நாம் கருதுகின்றோம்; பார்க்கின்றோம். பொதுவாக இத்தகைய குழுக்களில் ஆளுங்கட்சியைத்தான் முன்னிலைப்படுத்துவர். அப்படி இல்லாமல் மிக முக்கியமான பேரிடர் கட்டத்தில் எல்லாக் கட்சியினரின் கருத்துக்களையும் கேட்பதற்கும் அவர்கள் ஆய்வதற்கும் ஒரு வழியை இந்த ஆலோசனைக் குழு ஏற்படுத்தித் தரும்.
ஆளுங்கட்சி மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளும் ஆள்வதில் பங்கேற்கும் ஒரு சூழ்நிலையை இத்தகைய ஆலோசனைக் குழுக்கள் ஏற்படுத்தும். இக்குழுவில் மூன்று டாக்டர்கள் இருக்கிறார்கள். டாக்டர் எழிலன் இளைஞர்; அனுபவம் மிக்கவர். டாக்டர் சி.விஜயபாஸ்கர் கடந்த முறை ஆட்சியில் இருந்த அமைச்சர். கடந்த கால அனுபவம் நிரம்ப உள்ளவர். திருமலைக்குமாரும் அனுபவம் வாய்ந்த டாக்டர். இவர்களன்றி மீதமுள்ள 10 உறுப்பினர்கள் மக்களின்பால் மிக நெருக்கமுள்ளவர்கள். எதையும் ஆய்ந்தறிந்து சொல்லக் கூடியவர்கள். இப்படிப்பட்ட அனுபவம் உள்ள ஒரு குழு கொரோனா ஒழிப்பிற்கு துணை நின்று பணியாற்றும் என்பதில் நமக்குத் துளியும் அய்யமில்லை. புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து எல்லாத் தரப்பு மக்களையும் அரவணைத்து செல்வதில் மிக கவனமாகச் செயல்பட்டு வருகிறது.
அடியை அளந்து எடுத்து வைக்கிறது. மக்களின் துன்பங்களைக் களைவது ஒன்றையே நித்திய பணியாகக் கருதி இயங்கிக் கொண்டு இருக்கிறது. பொதுவாகவே உலகப்போர் காலங்களிலும் முக்கியப் போர் இரு நாட்டிற்கிடையே நடக்கும்போதும் ‘யுத்த கமிட்டிகள்’ இயங்கும் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இயற்கைப் பேரிடர் காலங்களிலும் சில நாடுகளில் ‘கமிட்டிகள்’ இயங்கியது உண்டு. ஆனால், நோய்த் தொற்றின் போது அரசுக்கு ஆலோசனை வழங்க அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படுவதை நம்மைப் பொருத்தவரை இப்போதுதான் கேள்விப்படுகின்றோம். இது ஒரு நல்ல முன்மாதிரி என்று பெருமைப்படுகின்றோம்.
அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார். ஜனநாயகம் என்பது ஓர் ஆட்சி முறை மட்டும் அன்று. அது ஒரு வாழ்க்கை நெறி என்று! அரசு ஒரு குழு அமைத்ததன் மூலம் ஆட்சி முறையாக நெறியாக ஜனநாயகம் இருப்பதை நாம் நன்றாக உணர முடிகிறது. முதல்வர் ஸ்டாலின் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒருவித சூத்திரமாகி விடுகிறது. தேர்தல் நேரத்தில் அவர் அமைத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டணி - மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக்கூட்டணி வருங்காலத்தில் இந்தியாவில் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் இப்போது முதலே தோன்றத் தொடங்கி விட்டன. எனவே அது ஒரு சூத்திரமாகி விட்டது. ஆட்சி அமைக்கப்பட்டு விட்ட பிறகு கொரோனா காலத்தில் ஆளுங்கட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக இப்போது தமிழ்நாட்டில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையான சூத்திரமாகும்.
இதைப் போன்ற குழுக்கள் கொரோனா பேரிடரைக் களைய ஆலோசனை குழுக்களை அந்தந்த மாநிலங்களிலும் அமைக்க முன்வரலாம். அதுதான் ஸ்டாலின் சூத்திர மாகும். அதன் மூலம் கொரோனாவின் உச்சம் தவிர்க்கப்படுவதில் பொது வாழ்வில் ஈடுபடுவோர் அனைவரின் கவனமும் இருக்கும். ஆக, ஸ்டாலினால் ஒருமாற்று அரசை உருவாக்கக் கூடிய சூத்திரமும் அரசு உருவான பிறகு மக்கள் குறைகளை களையவும் அவர்களுக்குத் தெம்பும், தைரியமும் ஊட்டக்கூடிய ஆலோசனைக் குழுவை அமைக்கக் கூடிய சூத்திரமும் ஸ்டாலின் பெற்றிருப்பதால் அவர் பெருந்தலைவராகி நம் முன் உயர்ந்து நிற்கிறார். மே 16 முதல் தமிழகம் முழுவதும் அரிசி கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000/- வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள் மகிழ்ச்சியோடு அந்தத் திட்டத்தை வரவேற்கிறார்கள்.
எல்லார்க்கும் பணம் கிடைக்கும். யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றுஅமைச்சர் உத்தரவாதம் வழங்கி இருக்கிறார். நிவாரண நிதி பெற்றுக்கொண்ட மக்கள் தத்தமது கருத்தை ஏடுகளில் பதிவு செய்து இருக்கின்றனர். பெரும்பாலும் வரவேற்றே கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். நிவாரண நிதியை எதிர்த்து ஒரு கருத்து கூட நம்மால் பதிவில் காண முடியவில்லை என்பது நமக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி ஆகும்.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!