murasoli thalayangam

அன்பில் எழுப்பிய ஆவேசக் குரல்.. கொள்கை ரீதியாக நிர்வாக திருத்தம் செய்யும் தி.மு.க அரசு” : முரசொலி !

புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இதற்கான காரணத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு இருக்கிறார். புதிய கல்விக் கொள்கை என்பது மிகமிக சர்ச்சைக்குரிய கொள்கை ஆகும். இக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில் ஒன்றிய அரசு மாநில கல்விச் செயலாளர்களோடு இது குறித்து ஆலோசனை நடத்தப்போவதாக அறிவித்தது. ஒரு சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் இல்லாமல், அதிகாரிகளின் மட்டத்தில் ஆலோசனை நடத்துவது தவறு என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். யாருக்கும் சரியான பதில் அளித்துப் பழக்கம் இல்லாத ஒன்றிய அரசு, இதற்கும் பதில் தரவில்லை. கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தினார்கள். அதில் தமிழக அரசு கலந்து கொள்ளவில்லை.

“மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மீண்டும் குலக்கல்வி முறையை புதுப்பிப்பதாக உள்ளது. இருமொழித் திட்டத்துக்கு வேட்டுவைப்பதாக இருக்கிறது. இத்திட்டத்தில் இடஒதுக்கீடு பற்றியும் இல்லை. மாநிலத்தின் கல்விக் கொள்கையை மாநிலங்களே தீர்மானிக்க வேண்டும்”என்று அமைச்சர் அன்பில் ஆவேசக் குரல் எழுப்பி இருக்கிறார். இது ஏதோ அரசியல் காரணங்களுக்கான எதிர்ப்பு அல்ல. இப்படி ஒரு கல்விக் கொள்கையை தொடக்க நிலையிலேயே தி.மு.க. எதிர்த்துள்ளது. 23 ஜூலை 2016 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இதனைத் தெளிவாக உணர்த்துகிறது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் அளிக்க முன்னாள் கேபினட் செயலாளர், டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஐ.ஏ.எஸ்., தலைமையிலான குழுவை ஒன்றிய அரசு நியமித்தது. இந்தக் குழு தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு பரிந்துரைகள் கொண்ட 200 பக்க அறிக்கையை அளித்தது. அதையே கண்டித்தார் தலைவர் கலைஞர்.

“இந்திய நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படும் வரை “கல்வி” மாநிலப் பட்டியலில்தான் இருந்து வந்தது. நெருக்கடி காலத்தில்தான், மாநில உரிமைகளில் ஆக்கிரமிப்பு செலுத்திடும் விதமாக, கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே கல்வியில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. பாடத் திட்டம் வகுப்பதிலும், கற்கவேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும், மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது” என்பதையும் கண்டித்து இருந்தார்.

சுப்பிரமணியன் அறிக்கையைத் தொடர்ந்து, கஸ்தூரி ரங்கன் தலைமையில் இன்னொரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. கஸ்தூரி ரங்கன் குழு, அதனினும் மோசமான அறிக்கையை வெளியிட்டது. அதுதான் இன்றைய புதிய கல்விக் கொள்கை. இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்ந்து வந்தார். 2019ம் ஆண்டு இன்றைய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தலைமையில் இந்தக் கல்வி அறிக்கை குறித்து ஆராய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு குழுவை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்தார்கள். அக்குழுவில் பத்து கல்வியாளர்கள் இடம் பெற்று இருந்தார்கள். புதிய கல்விக் கொள்கையில் 400க்கும் மேற்பட்ட பக்கங்களை இவர்கள் அலசி ஆராய்ந்தார்கள். ஒரு அறிக்கையைக் கொடுத்தார்கள்.

1. இக்கல்விக் கொள்கை காவிமயமாக்கலாக உள்ளது.

2. வேதக் கலாச்சாரத்தை திணிப்பதாக உள்ளது.

3. சமூகநீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

4. பெண் கல்வி குறித்து கவலைப்படவில்லை.

5. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

6. தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது.

7. மூன்று வயதுக் குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்ப்பது குழந்தைகளின் உரிமைக்கு எதிரானது.

8. மதிய உணவுத்திட்டத்தைக் கைவிடுகிறார்கள்.

9. தொழில் கல்வி என்ற பெயரால் குலக்கல்வி முறையை அமல்படுத்த நினைக்கிறார்கள்.

10. மாநில அளவில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ஏற்றுக் கொள்ள முடியாது.

11. கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது. - இப்படி பல்வேறு பரிந்துரைகளைச் சொல்லி அறிக்கை தயாரிக்கப்பட்டது. 28.7. 2019 அன்று மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நேரில் கொண்டு சென்று தரப்பட்டது.

இந்த புதியக் கல்விக் கொள்கையை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாம் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். ஆனால் அது எதையும் ஏற்காமல் ஒன்றிய அரசு அந்தக் கொள்கையை அமல்படுத்தத் துடிக்கிறது.

இதைக் கண்டித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்வியாளர்கள் கொண்ட கருத்தரங்கை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தினார்கள். இதோ இப்போது, தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., அந்தக் கொள்கையை நிர்வாக ரீதியாக திருத்தம் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. அதன் வெளிப்பாடுதான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆவேசக் குரல்!

Also Read: 45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி !