murasoli thalayangam
மொழிபெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கம்: தமிழ் புறக்கணிப்புதான் மோடி அரசின் கொள்கை -முரசொலி தலையங்கம்
புதிய கல்விக் கொள்கையை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்ட பா.ஜ.க. அரசு, தமிழில் வெளியிடவில்லை என்ற தகவல் எட்டியதும் முகநூலில் ஒருவர் எழுதிய பதில்: ‘தமிழில் வெளியிட்டால் தமிழர்கள்தான் முதலில் படித்துவிட்டு விமர்சிப்பார்கள். மற்ற மொழிக்காரர்கள் அப்படி இருக்கமாட்டார்கள்! அதனால்தான் தமிழில் வெளியிட பயந்திருப்பார்கள்!" - என்பது அவரது கருத்தாக இருந்தது.
உண்மைதான். தமிழர்கள்தான் மொழியை விழியாக நினைப்பவர்கள். இனத்தை இதயமாக மதிப்பவர்கள். தமிழ் - தமிழரசு - தமிழ்ச்செல்வன் -தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்துக் கொள்ளக் கூடிய இனம் தமிழினம். அதனால்தான் நமக்கு புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயர்ப்பு வராதது கூட சுருக்கென்கிறது! "இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் பன்முகத்தன்மைக்கு எதிராகவும் உள்ள புதிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, அக்கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும், பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. உருது உள்ளிட்ட அட்டவணையில் உள்ள மேலும் சில மொழிகளும் இடம்பெறவில்லை. புதிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பிலேயே தமிழைப் புறக்கணித்து மாற்றாந் தாய் மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு" என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கையே பழுதுபட்டது.
அந்த அறிக்கையை தமிழில் வெளியிடாமல் போனது ஆணவமானது - அநியாயமானது ஆகும் என்பதுதான் தலைவர் வெளியிட்ட அறிக்கையின் உட்கருத்து. இந்தக் கல்விக் கொள்கை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து இக்கொள்கையை கழகம் எதிர்த்து வருகிறது. இன்றைக்கு நடைமுறைப்படுத்த பா.ஜ.க. அரசு நினைப்பது கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை. அதற்கு முன்னால் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் என்ற கேபினெட் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்கள்.
அந்தக் குழு ஒரு அறிக்கையை தந்தது. அப்போது 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாளன்று தலைவர் கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். பல்வேறு கோணங்களில் அதனை அலசி ஆராய்ந்து அறிக்கை கொடுத்தார் தலைவர் கலைஞர். "புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, "கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை" நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை!" என்றும் சொன்னார்.
இந்த வழித்தடத்தில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கல்வியாளர் குழுவை தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்கள். இக்கல்விக் கொள்கை காவி மயமாக்கலாக உள்ளது. வேதக் கலாச்சாரத்தை திணிப்பதாக உள்ளது. சமூகநீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி குறித்து கவலைப்படவில்லை. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது.
மூன்று வயதுக் குழந்தையை முறை சார்ந்த பள்ளியில் சேர்ப்பது குழந்தைகளின் உரிமைக்கு எதிரானது. மதிய உணவுத் திட்டத்தை கைவிடுகிறார்கள். தொழில் கல்வி என்ற பெயரால் குலக்கல்வி முறையை அமல்படுத்த நினைக்கிறார்கள். மாநில அளவில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஏற்றுக்கொள்ள முடியாது. கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத்தேர்வு ஏற்க முடியாது என்று அக்குழு அறிக்கை கொடுத்தது. 28.7.2019 அன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நேரில் கொண்டு சென்று தரப்பட்டது.
Also Read: தமிழ் மொழி புறக்கணிப்புக்கு ‘நீஷப் பாஷை’ என்னும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைதான் காரணமா? - கி.வீரமணி கேள்வி!
ஆனாலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பா.ஜ.க. அரசு துடிக்கிறது. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சொன்னது. இப்படி சொன்னதை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் எதிர்த்தன. ஏனென்றால் அவை முழுக்க முழுக்க இந்தியில் செயல்படுபவை. உடனே மத்திய அமைச்சர் ஒருவர் தாய்மொழிக் கல்வியை காவு கொடுத்தார். *ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி என்பது கட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம் - என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார். மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை என்பது இந்தி - சமஸ்கிருததிணிப்புக் கொள்கை.
அதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்வார்கள். மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் - தாய்மொழிக் கல்வி என்று சொல்லிக் கொண்டே இதனைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். தாய்மொழிக்கல்வி என்ற வார்த்தையில் அனைவரும் மயங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்பது மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. தாய்மொழியான தமிழும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை கொண்டது தமிழகம். இதில் இந்தியையும் திணிப்பதுதான் புதிய கல்விக்கொள்கை. காலப்போக்கில் தாய்மொழியையும், அதன் பிறகு ஆங்கிலத்தையும் நீக்குவதுதான் அவர்களது மறைமுகத் திட்டம்.
இந்தியே முழுமையாக ஆன பிறகு சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து உட்கார வைப்பது அவர்களது எதிர்கால இலக்கு. இதற்கு தமிழ்நாடு தலையாட்டாது. தமிழினம் ஏற்காது. தமிழராகப் பிறந்தவர்கள் ஏற்கமாட்டார்கள். இது ஏதோ பள்ளிக்கூட பாடத்திட்டம் தொடர்புடையது மட்டுமல்ல; பண்பாடு தொடர்புடையது. பண்பாட்டு படையெடுப்பு இது. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்! தமிழில் மொழிபெயர்ப்பு வராமல் போனதால் தமிழர்களிடம் இருந்து மறைக்க முயற்சித்து விட்டோம் என்ற மமதை வேண்டாம். உலகில் எந்த மொழியில் வெளியிட்டாலும் அதனை படித்து கருத்துச் சொல்லும் வல்லமை தமிழர்களுக்கு உண்டு! இதுபோன்ற குறுகிய எண்ணத்தை விட்டுவிட்டு நேரிய பாதைக்கு திரும்பவும்!
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!