murasoli thalayangam
“இனி ‘சென்சஸ்’ கிடையாது - பிற்படுத்தப்பட்டோருக்கு மோடி அரசு செய்த பச்சை துரோகம்” : முரசொலி தலையங்கம் !
பிற்படுத்தப்பட்டோருக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கிடையாது என்ற மத்திய பா.ஜ.க முடிவு கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகம்! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள உன்னதமான கொள்கைகளில் ஒன்று சமூகநீதி. அதனைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களது தலைமையிலான பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) அரசு, சமூகநீதியை ஒழித்துக்கட்ட, வரிந்துகட்டி நிற்கிறது கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்து, உயிர் பறிக்கும் கொடுமைபோல, இடஒதுக்கீடு உரிமையை - காலங்காலமாய்ப் போராடி பெற்ற சட்ட உரிமையை, மிகலாவகமாய் பறிக்க பல மறைமுக ஏற்பாட்டினை திட்டமிட்டே செய்கிறது.
அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அஜெண்டாவான இடஒதுக்கீட்டினை ஒழித்து, மீண்டும் மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டி, ‘கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்ட’ துரோணாச் சாரிகளின் காலத்தைப் புதுப்பிக்க முயலுகிறது!” என்று இதன் பின்னால் உள்ள சூழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டமானது “நீதி - சமூகப் பொருளாதார மற்றும் அரசியல்” என்றே அறிவிக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் முதலாவது நீதியே சமூகநீதிதான். அந்த சமூக நீதிக்குத்தான் பா.ஜ.க. அரசு குழி தோண்டிக் கொண்டு இருக்கிறது. மக்கள் தொகைக் (census) கணக்கெடுப்பில் - ஜாதி வாரி கணக்கெடுப்பு - பிற்படுத்தப்பட்டோர் - ஓ.பி.சி. என்று தனியே பிரித்து எடுப்பதைச் செய்யாமல், விட்டுவிட மோடி அமைச்சரவை முடிவு செய்துவிட்டது என்று தகவல்கள் வருகின்றன. இதனை பிற்படுத்தப்பட்டவருக்கான சதியாக மட்டும் பார்க்க முடியாது. பின்னர் இதுதான் பட்டியலினத் தவர்க்கும், பழங்குடியினருக்கும் வரப்போகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலன் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இருக்கிறது. மத்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையம் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் குறித்த மண்டல் ஆணையத்தின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மண்டல் ஆணையத்தின் சலுகைப்படி 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் போது பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு கிடையாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
மோடி அரசிடம் நியாய அநியாயங்கள் பேச முடியாது. முழுக்க முழுக்க அநியாயங்களின் ஆட்சி இது! மண்டல் ஆணையத்தின் படி இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் 52 விழுக்காடு ஆகும். இன்றைய கணக்கின்படி 65 விழுக்காடு ஆகும். 65 விழுக்காடு மக்களை ஒரே நேரத்தில் வஞ்சகம் செய்துள்ளது மோடி அரசு. மத்தியில் மோடி அரசாங்கம் அமைந்தது முதல் எடுத்துக் கொண்டால் அனைத்துமே மக்கள் விரோத - சமூக நீதி விரோதச் செயல்பாடுகளாகத்தான் இருக்கும்!
*மருத்துவக்கல்வி பட்ட மேற்படிப்பில்தான் முதன்முதலாக நீட் தேர்வு வந்தது. அதன் மூலமாக மாநில அரசின் வசம் இருந்த இடங்கள் மத்திய அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. இதன் மூலமாக சமூகநீதி சிதைந்தது.
* மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று தீர்ப்பு அளித்தது. அதனை நிறைவேற்றாமல் இருப்பதற்காக மத்திய அரசும் - தமிழக பழனிசாமி அரசும் சேர்ந்து ஒரு நாடகம் ஆடியது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு ஏற்காமல் இருப்பதற்கான காரணமாக பழனிசாமி அரசைக் காட்டி தப்பித்தார்கள். 27 சதவிகிதமோ, 50 சதவிகிதமோ எந்த அடிப்படையிலும் இடஒதுக்கீடு கிடையாது என்று மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னது. இதில் மத்திய அரசின் இரட்டை வேடத்தை தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் 21.10.2020 அன்று எழுத்துப்பூர்வமான மனுவில் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
தி.மு.க தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் இது குறித்து விரிவான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. (31.5.2020) மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீட்டின் அளவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடாக இருந்தாலும், பட்டியலின இடஒதுக்கீடாக இருந்தாலும் அமைய வேண்டும் என்பதே அக்கூட்டத் தீர்மானத்தின் இறுதி முடிவு ஆகும். இதனை இன்றுவரை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்கவில்லை. - இவர்கள் இன்றல்ல அன்று முதல் இதைத் தான் செய்கிறார்கள்.
மண்டல் ஆணையத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதியை பிரதமர் வி.பி,சிங் அவர்கள் நிறைவேற்ற முயற்சித்தபோது ரத யாத்திரையை ஓட விட்டு ஆட்சியைக் கவிழ்த்தது தான் அன்றைய அத்வானி பா.ஜ.க. அன்று நேரடியாக சமூகநீதிக்கு எதிரானவர்களாக காட்டப்பயந்தார்கள். ஆனால் இன்று மோடி தைரியமாகவே சமூகநீதிக்கு எதிரான வராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார்.
முதலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நிராகரிப்பது. அதன் பிறகு பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை நிராகரிப்பது. இப்போது இருக்கும் 10 சதவிகித பொருளாதார இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது. இதுதான் அவர்களது நோக்கம். இதைத் தடுத்தாக வேண்டும். இந்த சமூகநீதி அரசியலுக்குள்தான் அனைவர் வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!