murasoli thalayangam
“120 கோடி மக்களின் உயிரில் மோடி அரசு காட்டும் அலட்சியம் வைரஸை விடக்கொடூரமானது”: முரசொலி தலையங்கம் சாடல்!
மத்திய பா.ஜ.க அரசுக்கு திடீரென ஞானோதயம் பிறந்துள்ளது. தடுப்பூசித் திருவிழாவை நடத்தப் போகிறது. ஏப்ரல் 11 முதல் 14 வரையிலான நான்கு நாட்களும் தகுதிவாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார் பிரதமர். இதை சில மாதங்களுக்கு முன்பே செய்திருந்தால் இரண்டாவது அலை வந்திருக்குமா? வந்திருக்காது!
கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்தை இதுவரை ஏற்றுமதி செய்து வந்தது மோடி அரசு, இப்போது அதற்குத் தடை விதித்துள்ளது. கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி முடித்துக்காட்டிய பிறகு ஏற்றுமதி யோசனைக்கு வந்திருக்கவேண்டும். தயாரித்ததும் உடனே ஏற்றுமதி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சொந்த நாட்டை விட, வெளிநாடுகள் மீதுதான் அதிகப்படியான கவலை என்பதை நிரூபித்துக் கொண்டு இருந்தார்கள்.
மத்திய அரசின் அலட்சியமே இரண்டாவது அலை பரவக் காரணம்! அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் வலியுறுத்தி இருந்தன. வாஷிங்டனில் சர்வதேசநிதியம் (ஐ.எம்.எப்) மற்றும் உலக வங்கியின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில் வளர்ச்சிக் குழு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
''கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதில் அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவது முக்கியமானது. புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி முகாம்களை நடத்துவதற்கான தயார் நிலையை வலுப்படுத்த வேண்டும். பாதிக்கப்படக்கூடிய மக்களை சென்றடைவதற்கு ஒருங்கிணைந்த உத்திகளை உருவாக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இதுவரை இல்லாத வகையில் பொதுசுகாதாரம், பொருளாதாரம், சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகோடிக்கணக்கான மக்களின் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் வறுமை அதிகரிக்கிறது.
ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகிறது. வளர்ச்சி ஆதாயங்களை மாற்றி அமைக்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் உலக வங்கி குழுவும், சர்வதேச நிதியமும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படவேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் தடுப்பூசி உற்பத்தித்திறன், மருந்துகளை விநியோகம் செய்வதை ஆதரிப்பதற்கான முயற்சிகளை இரு மடங்காக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் கொரோனா தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் உள்ளன. ஆனால் இதில் எதையாவது மத்திய பா.ஜ.க. அரசு முழுக்கவனத்தில் கொண்டதா என்றால் இல்லை!
''கோவிட் 19 வைரஸ் அடுத்தடுத்து பரவும்போது புதிய புதிய பரிணாமங்களை எட்டுகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்போது, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது அதிலும் மரபணுப் பிறழ்வுகள் ஏற்பட்டு புதிய புதிய வகைகளாக மாற்றம் பெறுகிறது. எனவே தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, மற்ற நோய்களுக்கான ஒரே முறை தடுப்பூசி என்பதாக இல்லாமல், குறிப்பிட்ட சில மாதங்களுக்கு முதல்முறை தடுப்பூசி, அதைத் தொடர்ந்து இரண்டாம் முறை தடுப்பூசி என வழங்குவது படிப்படியாக கோவிட் 19 வைரஸ் பரவலையும், அது உருமாறும் வேகத்தையும், அதன் வீரியத்தையும் கட்டுப்படுத்து வதற்கு உதவும்” என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளலாம் என்பதில் தொடங்கி பல்வேறு குழப்பமான அறிவிப்புகளை மத்திய அரசு செய்தது. தடுப்பூசி முழுமையாக இல்லையா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியபோது, “இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் இல்லை'' என்றும், “எதிர்க்கட்சிகள் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்கின்றன” என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
இதற்கான சரியான பதிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி போட்டு உடைத்தார். “ஏப்ரல் தொடக்கத்தில் உள்ள விபரங்களின்படி தங்களது மக்கள்தொகையில் அமெரிக்கா 32 சதவிகிதம் பேருக்கும் இங்கிலாந்து 47சதவிகிதம் பேருக்கும் தடுப்பூசியின் முதல் சுற்றை போட்டுவிட்டனர்; ஆனால், இந்தியா இப்போது வரை வெறும் 5.2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி மிகவும் பின்தங்கி உள்ளது” என்று சொன்னார். அதற்கு மத்திய அமைச்சர் பதில் தரவில்லை! மீண்டும் கொரோனா அலை பரவியதற்குக் காரணமே மத்திய அரசின் இந்த தடுப்பூசி பொய்கள் தான்!
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா எதற்காக ஏற்றுமதி செய்ய வேண்டும்? இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பாரத் பயோடெக் இன்டர்நேசனல் லிமிடெட் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் - மற்றொன்று ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஜென்கா தயாரிப்பில் சீரம் இன்ஸ்டி டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற கோவிஷீல்டு! இந்த இரண்டு தடுப்பூசிகளின் உற்பத்தியுமே இந்திய உள்நாட்டு மற்றும் உலகநாடுகளின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இல்லை என்பதுதான் இதுபற்றி தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருபவர்களின் குற்றச்சாட்டு.
இவை இரண்டின் உற்பத்தியை அதிகரிக்க வழிகாணப்பட்டதா என்றால் இல்லை. வேறு சில தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட தாகவும் அதற்கு மத்திய அரசு அனுமதி தரமறுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் முதல் சுற்று தடுப்பூசி செலுத்தி விட்டார்கள். இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இப்போதுதான் தடுப்பூசி திருவிழாவுக்கு பா.ஜ.க. அரசு தேதி குறித்துள்ளது.
ஊரடங்கு போடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. மக்களுக்கு அறிவுரை சொல்வதில் மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பதில் இஸ்ரேல், சிலி, பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால் இந்தியா மிக பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. வழக்கம் போல! கொரோனா பரவாமல் தடுக்கவும் இவர்களால் முடியவில்லை. பரவிய பிறகு தடுப்பூசியையும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியவில்லை. 120 கோடி மக்களின் உயிரில் இவர்கள் காட்டும் அலட்சியம் வைரஸை விடக்கொடூரமானது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!