murasoli thalayangam
“ஜெயலலிதா என்ற பொய்க் கட்டமைப்பை வீழ்த்திய நீதி அரசன் மைக்கேல் டி.குன்ஹா” : முரசொலி தலையங்கம் புகழாரம் !
ஜான் மைக்கேல் டி.குன்ஹா! - இந்தப் பெயர் தமிழக அரசியல் வரலாற்றில் இந்திய நீதித்துறை வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் நின்று நிலைக்கும் பெயர். ஒரு தீர்ப்பின் மூலமாக எழுந்து நின்றவர் மட்டுமல்ல; காலங்கள் கடந்தும் நின்று நிலைப்பவராக குன்ஹா உயர்ந்து நிற்கிறார்! ஜெயலலிதாவைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் அளவுகோல் அவரது ஆணவம். அந்த ஆணவத்தின் அளவுகோல் பணம். இந்த இரண்டில் மட்டும்தான் அவரது அரசியல் வாழ்க்கையே அமைந்திருந்தது. அந்த ஆணவத்தையும் அதன் அளவுகோலான பணத்தையும் தனது பேனா முனையால் கீழே தள்ளி குப்பைத் தொட்டியில் போட்டவர்தான் ஜான் மைக்கேல் டி.குன்ஹா!
அத்தகைய மாண்புமிகு நீதிபதி குன்ஹா அவர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளார். “எனது பதவிக்காலத்தில் விருப்பு - வெறுப்பு இல்லாமல் சாட்சி ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்கினேன். நான் யாரையும் குற்றவாளியாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை” என்று சொல்லி இருக்கிறார். அதனினும் முக்கியமாக, “நான் நீதிபதியாக பதவியேற்ற நாளை விட பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளை சிறப்பாகக் கருதுகிறேன்” என்றும் சொல்லி இருக்கிறார்.
இப்படி ஒருவர் சொல்கிறார் என்றால், அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் எத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்திருப்பார் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கினை விசாரிக்கும் நீதிபதியாக 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 27ம் நாள் தீர்ப்பை வழங்கினார். இது 2021ம் ஆண்டு. இந்த ஆறாண்டு காலத்தில் அவர் எதிரும் புதிருமாக எதிர்கொண்ட நிகழ்வுகள் அனைத்தும் அவரது மனம் மட்டுமே அறியும். அதை அறியாமலேயே நாம் ஒன்றைச் சொல்லலாம்; நீதியின் அடையாளமாக குன்ஹா இருந்திருக்கிறார் என்பது தான் அது!
நீதி என்பது தேவதையாக உருவகம் செய்யப்படுகிறது. குன்ஹா ஆகவும் அது காட்சியளிக்கிறது! சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்லும் வரை - குன்ஹா தனது தீர்ப்பை வாசிக்கும் வரை - தான் நிரபராதி என்று விடுவிக்கப்படுவோம் என்று தான் ஜெயலலிதா நினைத்திருந்தார். “உங்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனையை சிறிது நேரத்தில் வாசிக்கிறேன். நீங்கள் அனைவரும் அந்த பெஞ்சில் உட்காரவும்” என்று நீதிபதி சொன்ன போதுதான் ஜெயலலிதா இத்தனை ஆண்டுகள் கட்டி வைத்திருந்த ஆணவம் - பணம் ஆகிய இரண்டும் இடிந்து நொறுங்கியது. சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ஜெயலலிதா. உள்ளே என்ன தீர்ப்பு அளிக்கப்பட்டது என்பது வெளியே யாருக்கும் தெரியாது. சில நிமிடங்களில் அவரே நீதிமன்ற வாசலை விட்டுவெளியே வந்தார். தேசியக் கொடியை தனது வாகனத்தில் இருந்து கழற்றச் சொன்னார். உள்ளே போனார் ஜெயலலிதா. தீர்ப்பு அதன் பிறகு முழுமையாக வாசிக்கப்பட்டது.
“ஊழலுக்கு எதிராக நீதிமன்றங்கள் மென்மையான போக்கை ஒரு போதும் கடைப்பிடிக்காது. ஊழல் வழக்கில் கருணை காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. முதலமைச்சரே தவறு செய்தால் அவருக்கு கீழ் பணி புரிகின்றவர்களிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்? நீங்கள் செய்திருப்பது கருணை காட்டக்கூடிய குற்றமல்ல. இது மக்களுக்கு எதிரான குற்றம். அதிகபட்சமாக 7 ஆண்டு கால சிறை வாசம் தரவேண்டும். எனினும் உங்களுடைய வயதையும், 18 ஆண்டு வழக்கின் தாமதத்தையும் கருத்தில் கொண்டு 50 சதவிகித தண்டனை வழங்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்திய தண்டனைச் சட்டம் 109 இன் படி குற்றத்துக்கு உடந்தை என்பதும் குற்றமாகிறது. எனவே நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் அளிக்கிறேன்” - இதுதான் நீதிபதி குன்ஹாவின் இறுதி வரிகள்! இந்திய நீதித்துறையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கவரிகள்!
குன்ஹாவின் பெருமை என்பது அவரது தீர்ப்பில் மட்டுமே அடங்கி இருக்கவில்லை. இதன் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அடங்கி இருக்கிறது. குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே வழிமொழிந்தார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். “எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லாமல் மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துக்களை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் அடுத்தடுத்து நடந்த விசாரணையில் மறைக்க முயற்சித்துள்ளார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்காக இப்படிச் செயல்பட்டுள்ளார்கள்.
எவ்வளவு பெரிய ராஜதந்திரத்துடன் இவற்றையெல்லாம் மூடி மறைத்துள்ளார்கள் என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு மேல் எங்களால் எந்த வார்த்தையையும் பயன்படுத்தத் தெரியவில்லை. பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன், அச்சம் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்துள்ளார்கள். பேராசை மட்டுமே இவர்களிடம் இருந்துள்ளது. ஆக்டோபஸ் மாதிரி அனைத்து மட்டங்களிலும் இவர்களது ஊழல் கரம் பரவியிருக்கிறது” - என்பதுதான் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வரிகள். இப்படி உச்சநீதிமன்றம் எழுதுவதற்கான அனைத்து ஆதாரங்களையும் தனது தீர்ப்பில் எழுதியவர் குன்ஹா!
ஜெயலலிதா இறந்து போனதால் இந்தத் தீர்ப்பு காலாவதியானதாகச் சொல்ல முடியாது. இந்தியாவின் மனித சமூகம் வாழும் வரை இந்த தீர்ப்புக்கு உயிர் இருக்கிறது. இவற்றை மறைத்து ஜெயலலிதாவை புனிதவதியாக கட்டமைக்க ஒரு கும்பல் முயற்சித்து வருகிறது.
அது எக்காலத்திலும் நடக்காது என்பதற்கு ஒரே ஆதாரம் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு! அந்த வகையில் அரசியல் ரீதியாக ஜெயலலிதா என்ற பெயரால் உருவாக்கி வைக்கப்பட்ட பொய்க் கட்டமைப்பை வீழ்த்திய மனிதராக - நீதியின் அரசராக ஜான் மைக்கேல் டி.குன்ஹா இருக்கிறார். அவருக்கு வணக்கமும், நன்றியும் தெரிவிப்பது நீதியின்பால் அக்கறை கொண்டவர்களின் கடமையாகிறது. மிக மிக அமைதியான, மனநிறைவான வாழ்க்கை அவருக்கு அமையட்டும் என வாழ்த்துவோம்!
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!