murasoli thalayangam
“பெரியார், அண்ணா, கலைஞரின் குரலாக எதிரொலித்த ராகுல் காந்தி” - முரசொலி தலையங்கம் புகழாரம்!
பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் இன்று இருந்திருந்தால் அவர்கள் பெருமைப்பட்டு இருப்பார்கள் - ராகுல் காந்தியின் பேச்சைக்கேட்டு! எத்தகைய மன மாறுதல் அகில இந்தியக் கட்சிகளுக்கு ஏற்பட வேண்டும் என்று அண்ணாவும், கலைஞரும் முழங்கினார்களோ, எதிர்பார்த்தார்களோ அத்தகைய குரலைத் தான் ராகுல் காந்தி எதிரொலித்திருக்கிறார்.
"எத்தனையோ ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நீ இருக்கிறாய். உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டார் தந்தை பெரியார். "கங்கைக்கரைக்காரர்களுக்கு காவிரியின் வரலாறு தெரியாது" என்று வருந்தினார் பேரறிஞர் அண்ணா. ‘வரலாற்றை இமயத்தில் இருந்தல்ல, குமரியில் இருந்து எழுதுங்கள்" என்றார் கலைஞர். அன்று அகில இந்தியக் கட்சிகளுக்கு அது புரியாமல் இருந்தது. இன்று புரிந்துவிட்டது என்பதன் அடையாளம்தான் ராகுல் காந்தியின் பேச்சு!
"தமிழ்நாட்டுக்குள் இந்தியாவும், இந்தியாவுக்குள் தமிழ்நாடும் இருப்பதாகவே நான் கருதுகிறேன். எந்த மொழியும், உணர்வும் சமநிலையில் இருக்க வேண்டும். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட மொழி, மதம், இனம், பண்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்து உருவாவது ஆகும். எந்த ஒரு மொழியோ, பண்பாடோ, சிந்தனையோ மற்றதைவிட உயர்ந்தது அல்ல. தமிழ்மொழி மீது தொடுக்கப்படும் தாக்குதலை, இந்தியாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன் காரணம், தமிழ்நாட்டையோ, மேற்கு வங்கத்தையோ மதிக்காத இந்தியா இருக்க முடியாது.
தமிழ்ச் சிந்தனையை மதிப்பதைப் போல மற்ற சிந்தனைகளையும் மதிக்கிறேன். எந்த உறவும் சமநிலையில் இருக்க வேண்டும். அன்பும், மரியாதையும் ஒருவருக்கொருவர் செலுத்த வேண்டும். ஒற்றைச் சிந்தனைக்கு இந்தியாவைத்தள்ள முடியாது. ஒற்றைச் சிந்தனையை ஒத்துக்கொள்ள முடியாது என்பதால்தான் இங்கு வந்துள்ளேன்" இதுதான் ராகுல் காந்தியின் சேலம் பேச்சின் உள்ளடக்கம். இதற்குள் ‘திராவிடம்' ஒளிர்கிறது.
“India is Union of States” என்றார் ராகுல்! இப்படி ஒரு குரலை ஒரு அகில இந்தியத் தலைமையிடம் இருந்து கேட்பதற்காகத்தானே இத்தனை நாளாக தவம் இருந்தது இந்த இயக்கம்! திராவிட இயக்கத்தின் அடையாளம் என்பது சமூகநீதி. அந்த சமூகநீதியின் குரலை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டவர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள். சமூகநீதி எனப்படும் வகுப்புவாரி உரிமையின் களம் என்பது தமிழகம் என இங்கு வந்து அதனை முழுமையாக உள்வாங்கி இந்தியாவுக்கே ‘சமூகநீதியின்' விளக்கை ஏற்றி வைத்தார்.
அதுதான் இன்று மாபெரும் தீபமாக ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் அடுத்த அடையாளம் இன உரிமை. ஈராயிரம் ஆண்டு கால பண்பாட்டுப் பாரம்பர்யம் கொண்டது தமிழினம். அந்த இனமும், அவர்களின் தமிழ்நாடும் அதே இனப்பெருமை கொண்டதாக வாழ வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். பாராண்ட இனம், நாகரீகத்தால் செழித்த இனம், மற்றவர்கள் அரை நிர்வாணமாக இருந்த காலத்தில் உடை உடுத்திய இனம், கல்வியில் சிறந்த இனம், உலகம் முழுவதும் சென்று தொழில் வளம் கொழிக்க வைத்த இனம் இடையில் ஏற்பட்ட ஆதிக்க சக்திகளால் அது தாழ்ச்சியுற்றது.
அத்தகைய ஆதிக்க சக்திகளிடம் இருந்து மீள்வதற்காகவே சுயாட்சி முழக்கத்தை திராவிட இயக்கம் எடுத்தது. இன உரிமைக்காக, மொழி உரிமைக்காக, தமிழகத்தின் உரிமைக்காக போராடியது. அந்தப் போராட்டத்தின் உள்ளார்ந்த குரலை டெல்லியில் இருப்பவர்கள் ஏற்கமாட்டார்களா என்ற ஏக்கம் நமது தலைவர்களுக்கு இருந்தது. பேரறிஞர் அண்ணாவின் மாநிலங்களவை உரைகளாக இருந்தாலும், மாநில சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் பேசிய உரையாக இருந்தாலும் இனத்தின் குரலாய் இருந்தது.
அப்போது தமிழின் குரல், தமிழனின் குரல் எல்லாம் குறுகிய சிந்தனையாகப் பார்க்கப்பட்டது. ‘பிராந்திய வாதம்’ என்று உதாசீனம் செய்யப்பட்டது. இல்லை, இந்தக் கோரிக்கை என்பது பிராந்தியவாதம் அல்ல, குறுகியவாதம் அல்ல என்பதை உணர்த்திவிட்டார் ராகுல் காந்தி. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக தேனி வந்த போதும் இதனை வெளிப்படுத்தினார். பெரியாரை, அண்ணாவை, கலைஞரை, தமிழைப் பற்றி நான் படித்து வருகிறேன் என்று சொன்னார் ராகுல். அவர் முழுமையாக உள்வாங்கி விட்டார் என்பதை சேலம் கூட்டம் வெளிக்காட்டிவிட்டது.
Also Read: “அமித்ஷா காலில் விழவேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை” - சென்னையில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு!
பா.ஜ.க. கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பால பாடம் இதுதான்! பாரதிய ஜனதா ஒற்றைச் சிந்தனை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு என்று ஒரே மாதிரியாக ஆக்கிக் கொண்டு வருகிறது. இந்த ஒற்றைத் தன்மையை எந்த நாட்டிலும் ஏற்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. மனித இனமே ஆண், பெண் என்ற இரண்டாகத்தான் இருக்கிறது.
இதில் எங்கே வந்தது ஒன்று? தங்கள் கட்சி மட்டுமே ஆள வேண்டும், தங்களது கட்சிக்கு கஜானாவாகச் செயல்படும் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கொள்கையாக இருக்கிறது. அதனை உருவாக்க, மற்றவை அனைத்தையும் ஒழித்தாக வேண்டும். அதுதான் அவர்களது திட்டம். ஒற்றையாட்சியை உருவாக்க, அனைத்தையும் ஒன்று என ஆக்க முடிவெடுக்கிறார்கள். அதாவது தங்களது சுயநலத்தை பொதுநலமாகக் காட்ட நினைக்கிறார்கள். இந்த மோசடிக்கு பின்னால் ஒற்றை தனிமனிதரின் தவறான சிந்தனை மட்டும்தான் இருக்கிறது.
இது பா.ஜ.க.வின் சித்தாந்த குருமார்களான கோல்வார்க்கர் போன்றவர்களின் சிந்தனை. இந்த கோல்வார்க்கரின் சிந்தனையை வீழ்த்துவதற்கான மாற்று மருந்து பெரியார், அண்ணா, கலைஞர் என்பதை ராகுல் காந்தி அறிந்து கொண்டதன் அடையாளம்தான் சேலம் பேச்சு! பா.ஜ.க. சிந்தனைக்கு மாற்றுச் சிந்தனை என்பது திராவிடமே என்பதை டெல்லி வரைக்கும் புரியத் தொடங்கிவிட்டது!
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!