murasoli thalayangam
“தந்தை பெரியாரின் தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர் கலைஞர்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பதே மனிதர்களுக்குள் ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான்! மூலக் கொள்கையாக இதனைத்தான் தந்தை பெரியார் வடிவமைத்தார். மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்பதுதான் ரத்தபேதம் இல்லை என்பதன் பொருள். ஆணும் பெண்ணும் சமம் என்பதன் சாராம்சம்தான் பால்பேதம் இல்லை என்பதன் பொருள்!
ரத்த பேதம், பால் பேதம் ஆகிய இரண்டுக்கும் எவை எல்லாம் தடையாக இருக்கிறதோ அவை அனைத்தையும் பெரியார் எதிர்த்தார். திராவிட இயக்கம் எதிர்த்தது! ரத்தபேதம் நீக்கவே சமூகநீதி எனப்படும் வகுப்புவாரி உரிமை தரப்பட்டது. பால்பேதம் நீக்க எத்தனையோ திட்டங்களை முன்னெடுத்ததுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.
‘என்னவெல்லாம் செய்தார் கலைஞர்?' என்ற தலைப்பில் ‘நன்செய்' பதிப்புக் குழு ஒரு சிறு நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமையை நிலைநாட்டுவதற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் சுருக்கமாக அதில் பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியாவிலேயே முதல் முதலாக பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை உண்டு என்ற சட்டத்தை 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றியவர் முதல்வர் கலைஞர் அவர்கள். 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியாரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் இது. 1929 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு 1989 ஆம் ஆண்டு செயல் வடிவம் கொடுத்தவர் கலைஞர் அவர்கள்.
இன்னும் சொன்னால், இத்தகைய சொத்துரிமை சட்டத்தை மத்திய அளவில் கொண்டுவர அண்ணல் அம்பேத்கர் அவர்கள் திட்டமிட்டார்கள். 1956 ஆம் ஆண்டு அவர்களால் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்டது. அப்போது அம்பேத்கர் அவர்கள், “இன்றைய தினம் இந்த சட்டம் தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் எங்கோ ஒரு தலைவன் பிறப்பான். அவன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவான்” என்று சொன்னார்கள். அப்படிப் பிறந்த தலைவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அந்த தலைவரின் வழியில் வந்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இப்போது அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை என்ற அறிவிப்பு இந்த நூற்றாண்டின் மாபெரும் கொடையான அறிவிப்பு ஆகும். “தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப் பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும்” என்பதுதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த அறிவிப்பு!
மகளிர் வாழ்வில் மகத்தான மாற்றத்தை இது ஏற்படுத்த இருக்கிறது. கழக வரலாற்றில் மகளிர் திட்டங்கள் என்று கணக்கிட்டால் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். இந்தியாவிலேயே முதன்முதலாக காவல்துறையில் பெண்களைச் சேர்த்து அதிகாரம் கொடுத்த அரசு தி.மு.க. அரசு. இது நடந்தது 1974 ஆம் ஆண்டு!
ஏழை விதவைப் பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தை 1975 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்திய அரசு தி.மு.க. அரசு!
வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீட்டை 1990 ஆம் ஆண்டு வழங்கிய அரசு கலைஞரின் அரசு!
திருக்கோவில் அறங்காவலர் குழுவில் பெண் ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி!
பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் 8 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 5 ஆயிரமும், அதனை 10 ஆம் வகுப்பு என உயர்த்தி 10 ஆயிரம் ரூபாயும் வழங்கிய ஆட்சி தி.மு.க. ஆட்சி.
இந்தத் தொகை இன்று 25 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் தருமாம்பாள் பெயரில் மகளிர் மறுமண நிதி உதவித் திட்டத்தை 1975 ஆம் ஆண்டே தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர்!
அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்,- அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான நிதி உதவித்திட்டம் - நாகம்மையார் நினைவு இலவச பட்டப்படிப்பு திட்டம் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் - கொண்டு வந்ததும் கழக ஆட்சியே!
1998 ஆம் ஆண்டு மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை முதல்வர் கலைஞர் அறிவித்தார்கள். இதன் மூலம் பூ, காய்கறி விற்கும் மகளிர் சிறு வணிகத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடிந்தது.
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை வழங்க 1998 ஆம் ஆண்டு ஆணையிட்டவரும் முதல்வர் கலைஞரே!
இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவிலேயே முதன் முதலாக உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதும் கழக ஆட்சியே! இது 1996 ஆம் ஆண்டே வழங்கப்பட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் அனைத்து மகளிருக்குமான உரிமைத் தொகையை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் மகளிர் மேம்பாட்டு சிந்தனையின் தொடர்ச்சியான திட்டம்தான் இந்த திட்டம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக பல்லாயிரக்கணக்கான பெண்களை சொந்தக் காலில் நிற்க வைத்தவர்தான் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர், இன்றைய தி.மு.க. தலைவர். அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 என்ற அறிவிப்பு மகளிர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவும் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான சமூக உரிமைப் பிரகடனமாக அமைந்துவிட்டது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!