murasoli thalayangam
“பா.ஜ.க. எதிரி.. ஆனால், அ.தி.மு.க. துரோகி : துரோகிகள் மன்னிக்கக் கூடாதவர்கள்” - முரசொலி தலையங்கம்!
தி.மு.க.வைப் பொது எதிரி என்றும் தீயசக்தி என்றும் துரோகிகள் சிலர் பரப்புரைச் செய்து வருகிறார்கள். தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கக் கூடாது என்று அந்த ஞானசூன்யங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு யார் பொது எதிரி, எது தீய சக்தி என்று தெரியாமல் இல்லை. அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தே வைத்து இருக்கிறார்கள். பழைய கட்டுக் கதைகளின் மேல் நம்பிக்கை வைத்து, அதன் அடிப்படையில் வேதகால கட்டுமானத்தைப் படைக்க விரும்புகிறவர்கள்தான் எல்லா மக்களுக்கான பொது எதிரிகள்.
மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பவர்கள்தான் தீயசக்திகள். இவர்களுக்குத் துணை போகிறவர்கள் துரோகிகள். அந்தத் துரோகிகளின் பரப்புரை எடுபடாது. எதிர்வரும் தேர்தலில் தி.மு.கழகத்தைத் தோற்கடிப்பதற்காக எத்தனையோ வியூகங்களை வகுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். பா.ஜ.க. அ.தி.மு.க.வை அணைத்துக் கொண்டும், அவர்கள் நம்மை எதிர்க்கவும் காரணங்கள் இல்லாமல் இல்லை. அ.தி.மு.க. பெயரளவுக்குத் திராவிடக் கட்சியே தவிர, அதன் கொள்கைகள் பற்றி அவர்களின் நிறுவனரிலிருந்து கவலைப்பட்டதில்லை.
ஆகவே, மத்திய பா.ஜ.க.அரசு, இவர்களை மிக எளிதாக வளைத்துப் போட்டு தி.மு.க.வை அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. நமக்குத் தெரிந்த கொள்கை எதிரி. அனால், அ.இ.அ.தி.மு.கவோ துரோகிகளின் கட்சி. ஏனெனில், திராவிடக் கட்சிகளைப் போல தமிழ்நாட்டு மக்களிடையே ‘ஜாலம்’ காட்டி ஏமாற்றுகிற கட்சி அது. இவர்கள் தான் நம்மை - தி.மு.க.வை பொது எதிரி என்றும் தீய சக்தி என்றும் சொல்லிவருகிறார்கள். திராவிட இயக்கக் கொள்கைகளை வகுத்த தலைவர்களின் இலட்சியங்களை நிறைவேற்றுபவர்கள், செயல்படுத்துபவர்கள், வாழ்ந்து காட்டுபவர்கள் எல்லாம் அ.இ.அ.தி.மு.க.வினருக்கு பொதுஎதிரிகள், தீயசக்திகள்.
பா.ஜ.க. திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிரான கட்சி. அதோடு, கூட்டணி அமைத்துக் கொண்டு தொடர்ந்து மூன்றாம் முறையாக அதிகாரத்தைக் கைப்பற்ற பார்க்கிறது அ.இ.அ.தி.மு.க. இது இந்த முறை நடப்பதற்கு வாய்ப்பில்லை. பா.ஜ.க. வடமாநிலங்களில் -அண்மையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளை வளைத்துப் போட்டு அவர்களின் பலவீனங்களைக் கொண்டு மிரட்டி ஒன்று ஆட்சியை அமைக்கிறது அல்லது ஆட்சியைக் கலைக்கிறது. பா.ஜ.க.வின் நடைமுறை என்பது பெரும்பாலும் ஜனநாயக விரோத செயல்பாடுகளாகவே இருந்து வருகின்றன.
நயமாகப் பேசி இரண்டகம் செய்வதுதான் பா.ஜ.க. அரசியலாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் ஆட்சி இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க.வின் அடிமைகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் அ.இ.தி.மு.க.வை எப்படியெல்லாம் பா.ஜ.க. ‘கவாத்து’ செய்ய வைக்கிறது என்பதை நாடே பார்த்து வருகிறது.
தி.மு.க.காரர்களான நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். எதிரி நமக்கு யார் என்று மிகத் தெளிவாகத் தெரிகிறது. துரோகிகள் யார் என்றும் அதைவிடத் துல்லியமாக அறியப்படுகிறார்கள். எதிரி ஏதோ ஒரு கொள்கைக்காரனாக இருக்கிறான். அவனைச் சந்திக்கலாம்; வெல்லலாம். துரோகிகள் மன்னிக்கக் கூடாதவர்கள். கொள்கையைக் காட்டிக் கொடுக்கிறவர்கள். அதன் மூலம் பதவிபவிசை இன்னமும் பெற நினைக்கிறவர்கள். இவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தி அவர்களிடையே அடையாளப்படுத்த வேண்டிய நாளே - தேர்தல் நாள்; அதற்கான சந்தர்ப்பம் ஏப்ரல் 6ம் தேதி நமக்கு வாய்த்திருக்கிறது.
அந்த ஜனநாயகத் திருநாளில் இந்தத் துரோகிகளை நாம் நிச்சயமாக வெற்றிக் கொள்வோம். தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பை மதிப்பீடு செய்கிறார்கள். தி.மு.க வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு அந்த மதிப்பீட்டின் மூலம் தெரிய வந்தாலும் அவ்வெற்றியை இரண்டாம் பட்சமாகத்தான் சொல்கிறார்கள். அதாவது,‘அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கூடுகிறது. தேர்தல் களத்தில் தொடர்ந்து தி.மு.க. முன்னணி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்’ என்று செய்தி வெளியிடுகிறார்கள். தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எனச் சரியான மதிப்பீட்டை கறாராகச் சொல்லக்கூட நாளேடுகளுக்கு நல்ல எண்ணம் இல்லை; மனம் இல்லை.
தி.மு.க.வின் வெற்றி நிச்சயம் என்கிற செய்தியைச் சொல்கிற விதம் ஒரு போக்கில் இருந்தாலும், மக்களிடையே இப்போது இன்னொரு செய்தியையும் கசியவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை அமைத்தாலும் அந்த ஆட்சியை நிலைக்கவொட்டாமல் என்னென்ன ‘சித்துகளை’ விளையாட முடியுமோ, அவற்றையெல்லாம் செய்து தி.மு.க. ஆட்சிக்குத் தொல்லையைக் கொடுப்பது ஆட்சியை நடத்தவொட்டாமல் செய்வது ஆபரேஷன் தாமரை திட்டத்தைச் செயல்படுத்துவது என்ற எல்லைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு செல்லும். அப்போது தி.மு.க. எவ்வாறு எதிர்கொள்ளும்? என்கிற பரப்புரையை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.
தி.மு.க. இதுவரை சந்திக்காத, எதிர் பார்க்காத முறைகளில் நமது பொது எதிரிகளின் திட்டங்கள் நடைமுறைகள் இருக்குமானால் நாம் அவற்றை இப்போது முதலே எதிர்கொள்ளத் தொடங்கி விட்டோம். பணியை ஆற்றியே வருகின்றோம். ஆட்சியைப் பிடித்த பிறகு காட்சிப்படுத்திப் பார்ப்பதை விட இப்போதே நமது தலைவர் கடும் உழைப்புகளினூடே அதற்கான திட்டத்தைக் கெட்டிப்படுத்த தொடங்கிவிட்டார். சுயமரியாதை இயக்கக் காலத்தில் பிரிட்டிஷாரிடமிருந்து பெரியார் இயக்கத்தைக் காப்பாற்றினார்.
திராவிடர் கழகத்தின் தொடக்கக்கால கூட்டத்தில் பல புரட்சிகர போராட்டங்களை நிகழ்த்திக் காட்டி வெற்றி பெற்று இருக்கின்றோம். தி.மு.க.வைத் தடை செய்யப்பட வேண்டும் என்ற நிலை மேற்கொண்ட போது அறிஞர் அண்ணா பெரியதொரு மாற்றத்தை கழகச் சட்டத்திட்ட விதிகளில் செய்து இயக்கத்தை தி.மு.கழகத்தை அண்ணா காப்பாற்றிக் கொடுத்தார். நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபோது, தி.மு.கழகத்தின் பெயரையே முத்தமிழ் அறிஞர் காப்பாற்றிக் கொடுத்தார்.
இந்த நெருக்கடிகள் எல்லாம் ஒரு ஜனநாயக இயக்கமான திராவிட இயக்கத்திற்கு ஏற்பட்டவை ஆகும். இப்போது தேர்தலுக்குப் பிறகு தி.மு.கழகத்திற்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்படுமானால் அதற்கு என்ன செய்வது? வேட்பாளர் தேர்தலின் போதே அதற்கான பணியினைத் தொடங்கி கால்கோளை உறுதிப்படுத்திக் கொள்வோம். கழகத் தோழர்கள் சுமார் 8000 பேர் விருப்ப மனு செய்து இருக்கிறார்கள்.
கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு போக மீதமுள்ள இடங்களில் தி.மு.க. போட்டியிட இருக்கின்றது. அந்த இடங்களில் போட்டியிடப் போகும் நமது வெற்றி வேட்பாளர்களின் தேர்வு எல்லா வகையிலும் திண்மை உடையதாய் இருக்கப்போகிறது. அந்தத் திண்மை ஆட்சி அமைத்து நிர்வாகம் நடைபெறும் காலத்தில் பெருந்துணையாய் இருக்கும்.
அதற்குரிய வகையில் கழகத் தலைவரின் கரத்தை, நாம் மேலும் வலுப்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த நேரத்தில் அவர் எந்தக் கட்டளையிட்டாலும் அதனை ஏற்றுச் செயல்படுத்த வேண்டியது நம் கடமை. அப்போதுதான் நமது பொது எதிரியை நாம் வென்றெடுக்க முடியும். துரோகிகள் மன்னிக்கக் கூடாதவர்கள் என்பதை நாட்டுக்குப் புலப்படுத்திக் காட்டமுடியும். நம் இயக்கத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!