murasoli thalayangam
“ஒளிரும், தூய்மை, சுயசார்பு இந்தியா எனக் கூறிவிட்டு அல்லாடும் இந்தியாவை உருவாக்கும் மோடி அரசு” - முரசொலி
கடந்த இரண்டு மாதங்களில் சிலிண்டர் எரிவாயுவின் விலை ரூ.125 கூடுதலாகிவிட்டது. எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையை மத்திய அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது. ஆகவே, அவர்கள் விலையை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.835. சிலிண்டர் கொண்டு வந்து தரும் நபருக்கு ரூ.30 அல்லது ரூ.40 வேறு தர வேண்டும். இப்படியே நிலைமை போனால் சிலிண்டர் எரிவாயுவின் விலை ரூ.1000-க்கு எட்டிவிடும் அபாயம் இருக்கிறது.
சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சிலிண்டர் எரிவாயுவின் விலை பெரிய அளவில் எதுவும் ஏற்றம் பெறாமல் இருந்து வந்தது. இப்போதோ ஜனவரி மாதம் இந்த சிலிண்டர் எரிவாயுவின் விலை ரூ.125-க்கு மேல் அதிகரித்துவிட்டது. சிலிண்டர் எரிவாயுவுக்கு மத்திய அரசு வழங்கி வரும் மான்யத் தொகையைக் கூட ரூ.30 அளவுக்கு குறைத்து விட்டார்கள். வங்கிக் கணக்குகளில் மான்யத் தொகை நவம்பர் 2020-க்குப் பிறகு வரவு வைக்கப்படவில்லை. அதாவது, மத்திய அரசு வழங்குவதாகச் சொன்ன மான்யத் தொகையும் நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும், சிலிண்டர் எரிவாயுவின் விலையும் மாதந்தோறும் ஏற்றப்படுகிறது.
ஆக, மக்கள் இரண்டு வகையிலும் ஏமாற்றம் அடைகிறார்கள்; ஏமாற்றவும் படுகிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையவில்லை. இதற்குக் காரணம் விலை ஏற்ற, இறக்க அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களிடம் மத்திய அரசு வழங்கியதுதான். அன்றாடம் 3 வேளை சமையல் செய்தாக வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உள்ளது. வருகிற வருவாயில் சிலிண்டர் எரிவாயுவுக்கு மட்டும் மாதத்திற்கு இரண்டு உருளைகள் செலவானால் ரூ.1600-க்கு மேல் சிலிண்டர் எரிவாயுவுக்கு தர வேண்டி இருக்கும். வருகிற, குறைந்த வருவாயில் கூடுதல் செலவுகளைச் சரிகட்ட முடியாத சூழ்நிலை ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்டுவிடும்.
கட்டை அடுப்பு, கரி அடுப்புகள், மண்ணெண்ணெய் ஸ்டவ்கள் இப்போது பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. ஆனால், சிலிண்டர் எரிவாயு இல்லாத போது இவற்றின் பயன்பாடுகளும் அவசியமாகின்றன. மேலும், இப்போது எல்லாம் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தர மறுக்கின்றனர். அவசரக் கால பயன்பாட்டிற்கு முன்பு ரேஷன் கடைகளில் வழங்கியதைப் போல மாதம் 20 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கலாம். இவை எரிவாயு உச்சநிலை விலையேற்றத்தின் போது மக்களுக்கு உதவியாய் இருக்கும். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். சிலிண்டர் எரிவாயு உருளையைப் பெறுவதற்காகப் பதிவு முறைகள் எல்லாம் நவீனப் படுத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் அனைவருமே சமச்சீரான வசதிமிக்கவர்கள் போல் அரசோ அல்லது எண்ணெய் நிறுவனங்களோ இந்த மாறுதல்களைச் செய்துள்ளன. இது ஒருவகையில் வரவேற்கக் கூடியதே ஆனாலும், மிகச் சாதாரண மக்கள் உருளைகளைப் பெற எத்தகைய முறைகளை கையாளுகிறார்கள் என்று முற்றிலும் அறிந்து கொள்ள முடியவில்லை. அனைத்து வசதிகள் இருப்பவர்களைப் பற்றி நாம் எதுவும் சொல்லவில்லை. நமது கவலையெல்லாம் வசதிக் குறைவானவர்களைப் பற்றியே ஆகும். அவர்களை நிறைவடைய செய்வதுதான் அரசுகளின் மகத்தான பணியாக இருக்க முடியும். அடுத்து, வாகனங்களுக்கு எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ள இந்நாள்களில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் எரிவாயு எப்படி மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறதோ, அதைப்போலவே பெட்ரோல், டீசல் விலையேற்றமும் மற்ற பொருள்களின் விலையேற்றத்திற்குக் காரணமாக இருக்கிறது.
கொரோனாவினால் கடந்த ஆண்டு பாதித்தவர்கள் இன்னும் முற்றிலுமாக எழுந்து நிற்க முடியாத நிலையிலேயே இன்னும் இருந்து வருகின்றனர். மக்கள் வாங்கும் சக்தியை இழந்து இருக்கிறார்கள். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. மத்திய அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் வேலையில்லாதவர்களுக்கு வேலையை உருவாக்கித் தரவில்லை. ஆனால், அமித்ஷா புதுவையிலே பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் வேலை தருவதாகச் சொல்கிறார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகச் சொன்னவர்கள் ஒரு இலட்சம் பேருக்குக்கூட வேலை தரவில்லை. புதுவையில் மட்டும் அதுவும் யூனியன் பிரதேசத்தில் எவ்வளவு பேருக்கு வேலையை உருவாக்கித்தர முடியும்? அவ்வளவும் தேர்தல் ஏமாற்றுகள் அன்றி வேறில்லை. ஆகவே, மத்திய அரசு மக்களின் அரசாக இல்லை. அறிவிப்புகள் ஒன்றாகவும், செயல்கள் ஒன்றாகவும் இருக்கின்றன.
‘ஒளிரும் இந்தியா’ என்றார்கள். ‘தூய்மைஇந்தியா’ என்றார்கள். இப்போது சுயசார்பு இந்தியா என்கிறார்கள். கடைசியில் இவர்கள் மக்கள் அல்லாடும் இந்தியாவைத்தான் உருவாக்கி வருகிறார்கள். இந்தியாவில் பா.ஜ.க.வின் பரப்புரை பலமாக இருக்கும் அளவுக்கு அவர்களின் சாதனைகள் பலமாக இல்லை. அதற்குப் பதிலாக காவி கலாச்சாரம் வேகமாகப் பரப்பப்படுகிறது. பழைய வேதகால தருமங்களை வேத கால இந்தியாவை அகண்ட பாரதத்தைப் பரப்பும் பணியில் பா.ஜ.க.வினர் ஈடுபடுகிறார்கள். அதனால் எல்லாம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியாது. அரசியல் சட்டத்தில் சோசலிசம், மதச்சார்பின்மை எனும் சொற்களை வைத்துக்கொண்டு, அவற்றை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் தனிப்பட்ட கொள்கையை அனைத்து இந்திய மக்களுக்கும் ஒவ்வாத ஒன்றை ஏற்குமாறு செய்வதில்தான் ஓர் அரசே அக்கறை காட்டும் விதமாக பா.ஜ.க.வினர் நடந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு மக்களின் பிரச்சினைகள் மீது அக்கறை இல்லை. ஆகவேதான் சிலிண்டர் எரிவாயு விலைகளைப் பற்றியோ, எரிபொருள்களைப் பற்றியோ அவர்கள் கவலைப்படவில்லை. அதற்குப் பதிலாக, இப்போதைய விலை உயர்வுக்கு ஏழாண்டுகளுக்கு முன்பு இருந்த அரசின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ‘எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து இறக்குமதியின் அளவை முன்பே குறைத்திருந்தால் நமது மக்களுக்கு இவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டு இருக்காது’ என்கிறார் மோடி! ‘ஏழாண்டுகளாக இவர்கள் உள்நாட்டு உற்பத்திக்கு செய்தது என்ன?’ என்று விவரம் தெரிந்தவர்கள் கேட்கத்தானே செய்வார்கள்?
இப்போதுகூட 85 சதவிகித எரி பொருளையும், 53 சதவிகித எரிவாயுவையும் நம் நாடு இறக்குமதிதான் செய்து கொண்டு இருக்கிறது. பா.ஜ.க.வினர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எரிபொருள் விலைகள் கூடிக் கொண்டேதான் போகின்றன. இவையெல்லாம் யாருடைய நிர்வாகத்தினால் ஏற்பட்டு இருக்கிறது. எரிபொருள் விலை கூடினால் எல்லாப் பொருள்களின் விலைகளும் கூடுமல்லவா? எரிபொருள் விலையைக் குறைப்பதில் எதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் யோசித்து செயல்பட வேண்டும். கடந்த கால அரசுகளின் மீது குறைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!