murasoli thalayangam

“நம் வலிமையை கூடுதலாக்கி, வெற்றிகளை குவித்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம்” - முரசொலி தலையங்கம் சூளுரை!

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி நாளேடு புகழ்பாடி தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், “இன்று தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் 68வது பிறந்த நாள்!

அவர்களின் பிறந்த நாள் விழாவினையொட்டி ‘முரசொலி’ நாளேட்டின் சார்பாக நமது வணக்கத்தினையும், வாழ்த்துக்களையும் மிகப் பெருமையுடனும், பெருமிதத்துடனும் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் தனிமனிதர் இல்லை. நூறாண்டைக் கடந்த திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகத் திகழுபவர். அவர் ஒரு நிறுவனமாகிவிட்ட திராவிடப் பேரியக்க அரசியலின் தொடர்ச்சி. அவர் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.

ஸ்டாலின் அவர்கள் தமது பொதுப்பணியை 13 வயதில் தொடங்கியவர். அறிஞர் அண்ணாவின் அன்பைப் பெற்றவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் பாராட்டை வரித்துக் கொண்டவர். நெருக்கடி காலத்தைச் சந்தித்து ஓராண்டு ‘மிசா’ கைதியாகச் சிறையில் வதிந்தவர். அதனால், சிட்டிபாபுவின் சிறை நாட்குறிப்பில் இடம் பெற்றவர். இளைஞர் தி.மு.கவைத் தொடங்கியவர். அதனை இளைஞரணி ஆக்கக் காரணமானவர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிள்ளை என்பதால் கழகத்தில் அவர் ஒரே இரவில் உச்சத்திற்குச் சென்றுவிடவில்லை. கழக உறுப்பினர், பகுதிப் பிரதிநிதி, செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணிச் செயலாளர் வரை ஒரு கட்டமும், அதற்கு பிறகு துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் செயல் தலைவர் என்று ஒரு கட்டமும், கழகத்தில் அவர்க்குரிய இடங்களை அவர் செயலாற்றியதன் மூலம் பெறலானார்.

இதுமட்டுமா? பொதுப் பொறுப்புகளில் மக்களின் மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல்வராக அவர் உயர்ந்தார். இக்கால கட்டங்களில் அவர் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். அச்சாதனைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்து இருக்கின்றன. கலைஞரது அமைச்சரவையில் ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டபோது ஒரு சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதைப்பற்றி தனது ஏட்டில், `துக்ளக்’ சோ கேள்வி - பதில் பகுதியில், ‘30 ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பிறகே ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டு இருக்கிறார்’ என்று எழுதினார். திராவிடப் பேரியக்கத்தின் ‘அக்மார்க்’ எதிரியாகத் திகழ்ந்த ‘சோ’வாலேயே இப்படிப் பாராட்டப் பெற்றவர் ஸ்டாலின். இதைவிட நற்சான்று வேறு ஒன்று தேவையில்லை என்றே நாம் கருதுகின்றோம்.

அறிஞர் அண்ணாவின் காலத்திலிருந்து முத்தமிழ் அறிஞர், கலைஞர் மரிப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு வரையும் அவர் கழகத்திற்கு உழைத்துக் கொண்டே இருந்தார். அதன் பலன் அரசியலில் நன்கு தெரிந்தது. அதனால் நம் இயக்கத்திற்கு ஒரு பாதுகாப்பும், அரசியல் சாதனைஅளும் நிகழ்ந்து கொண்டே இருந்தன. அதைப்போல கலைஞர் காலத்திலேயே ஸ்டாலின் அவர்களின் உழைப்பு தொடங்கிவிட்டது. அதனால்தான் அவர் ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று பாராட்டினார். கலைஞர் பெற்ற பேற்றினை, பெயரினை ஸ்டாலின் அவர்கள் என்றோ பெற்றுவிட்டார். அவருடைய மகன் என்பதை உழைப்பின் மூலம் அவர் வெளிப்படுத்திவிட்டார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் மற்றும் அதன் அணியினர் பெற்ற மகத்தான வெற்றியின் மூலம் கழகத் தலைவர் ஸ்டாலின் உழைப்புக்கு மக்களின் ஏற்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது. இப்போது இந்தியத் தேர்தல் ஆணையம் பிப்.26 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டுத் தேர்தல் நாளை ஏப்ரல் 6ஆம் தேதி என்று அறிவித்து இருக்கிறது. முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகும் என்றும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், கழகத்தின் தேர்தல் பணியைக் கழகத் தலைவர் எப்போதோ தொடங்கிவிட்டார்.

சூறாவளி சுற்றுப்பயணம் பிப்.28ஆம் தேதி முடிவடைகிறது. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று வலம் வந்து மக்கள் அனைவரையும் முதற்கட்டத்தில் சந்தித்து விட்டார். இதற்காக அவர் மிகக் கடுமையாக உழைத்து இருக்கிறார். இறுதி பரப்புரைச் சுற்று எஞ்சியிருக்கிறது. நாம் வெற்றியைப் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தாலும் மக்கள் அதனை எப்போதோ முடிவு செய்து விட்டார்கள் என்றாலும் எதிரிகளின் பலம் எத்தகையது என்பதை மதிப்பிட்டு, கழகத் தோழர்களுக்குத் தலைவர் மு.க.ஸ்டாலின் பின்வருமாறு எச்சரிக்கை செய்து இருக்கிறார்.

“இன்றைக்குத் தி.மு.கவை எதிர்க்கக் கூடியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வெறும் அ.தி.மு.கவாக மட்டும் இருந்தால் அதைத் தூக்கிப் போட்டு விட்டுச் சென்றுவிடலாம். ஆனால், அதிமுகவுடன் சேர்ந்து மத்தியில் இருக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் துணை புரியும் குறிப்பிட்ட சில அதிகாரிகள், குறிப்பிட்ட சில காவல்துறையைச் சார்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் பக்க பலமாக இருந்து வருகிறார்கள்.

நாம் மிக சுலபமாக வெற்றி பெற்றிட முடியாது. நான் ஏதோ சந்தேகத்தில் சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது. நம் வெற்றியைத் தடுப்பதற்கு பல முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதாவது யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று இன்றைக்கு மக்கள் முடிவெடுத்து விட்டனர் ஆனால், எவ்வளவுதான் ஊழல் செய்து கொண்டிருந்தாலும் அதிமுக ஆட்சியே நீடிக்க வேண்டும் திமுக வந்தால் அடுத்து தோற்கடிக்கவே முடியாது என்கிற பயம் குறிப்பிட்டவர்களுக்கு வந்துள்ளது. அதனால்தான் திமுகவினர் அனைவரும் தேர்தல் பணியில் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும்.

கழகத் தலைவர் ஸ்டாலின் 56 ஆண்டுகள் கடினமாக உழைத்த பின்னும் எதிரிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட பேச்சின் மூலம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். அவரது பெரு முயற்சி எத்தகையது என்பதால் நம்மால் அலகிட்டு உரைக்க முடியவில்லை என்றே சொல்வோம்.

அவர் நமக்கு வழங்கும் எச்சரிக்கையை நாம் மனத்தில் நிறுத்த வேண்டும். அதனை அவரின் பிறந்த நாளின் போது ஓர் ஆணையாக கட்டளையாக ஏற்று கழகத் தோழர்களான நாம் நமது வலிமையைக் கூடுதலாக்கிக் கொள்வோம். அதன் மூலம் வெற்றிகளைக் குவித்து அவரை முதல்வராக்கி மழிழுவோம், இந்தச் சூளுரையை நாம் அவர் பிறந்த நாளின் போது ஏற்போம். அவர் வாழ்க; வெல்கவெனக் குரல் எழுப்புவோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “எடப்பாடி பழனிசாமி தனது பெயரைக் கடன்கார பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்” : முரசொலி தலையங்கம் சாடல்!