murasoli thalayangam
“இந்திய மீனவர்களின் உரிமையை பறிக்கும் இலங்கை.. தட்டிக்கேட்க துப்பில்லாத பா.ஜ.க அரசு” - முரசொலி தலையங்கம்!
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்துவிட்டதாகச் சொல்லிச் சென்றுள்ளார். இதைத்தான் பிரதமர் ஆவதற்கு முன்பும் சொன்னார். இப்போதும் சொல்கிறார்!
"நமது மீனவர்கள் நீண்ட காலப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களது உரிமைகளை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இலங்கையில் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் போது எல்லாம் அவர்களை விரைவாக விடுதலை செய்வதை நாங்கள் உறுதிப்படுத்தி உள்ளோம். 1600க்கும் மேற்பட்ட மீனவர்கள் எனது ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இலங்கையின் பிடியில் எந்த மீனவரும் இல்லை. 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்" என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். "இந்தியாவில் ஆண்மையுள்ள பிரதமர் இல்லை, அதனால்தான் அண்டை நாடுகள் நம்மை சீண்டிப் பார்க்கின்றன" என்று அன்று மன்மோகன் சிங்கை குறை சொன்னவர்தான் மோடி. இன்று அவரது ஆட்சியிலேயே அண்டை நாடு சீண்டிப் பார்க்கிறது. இராணுவத்தின் மூலமாகவும் ஊடுருவல் மூலமாகவும். இதுபோன்று மீனவர்கள் மீதான தாக்குதல் மூலமாகவும்!
இலங்கைக் கடற்படையினரால், இந்திய மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றால் இதுவும் ஒரு விதத்தில் ராணுவ முற்றுகை போன்றதுதான். அப்படி ஏன் இதனை அரசுகள் பார்ப்பது இல்லை? இன்னும் சொன்னால் அவர்களை இந்திய மீனவர்களாக இல்லாமல் ‘தமிழக மீனவர்களாக' மட்டும் பார்ப்பதுதான் இங்கு ஒருமைப்பாடாக இருக்கிறது! 1600 மீனவர்கள் எனது ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்று மோடி சொல்கிறார் என்றால், அவரது ஆட்சிக் காலத்தில் 1600 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொருள். 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார் என்றால், அவரது ஆட்சிக் காலத்தில் 313 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது என்று பொருள். ‘இலங்கை ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் அனைவரையும் விரைவாக விடுதலை செய்துவிட்டேன்' என்பது பெருமை ஆகாது!
இனி இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள், சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள், படகுகள் பறிக்கப்படாது என்று எதனால் பிரதமரால் உத்தரவாதம் தர முடியவில்லை? இந்தியக் கடற்படை, இலங்கை அரசை எதற்காகக் காப்பாற்றுகிறது? இந்திய மீனவர்களை காப்பதை விட இலங்கை அரசாங்கத்தை காப்பதுதான் முக்கியமானதாக ஆகிவிட்டதா? 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் நாள் இந்திய - இலங்கை அமைச்சர்களுக்கு இடையே மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததே! அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? முறையான, அக்கறையான முடிவை எடுத்திருந்தால் இந்த ஏழு ஆண்டு காலத்தில் மீனவர்கள் மீது இத்தனை தாக்குதல் நடந்திருக்காதே!
2014 தேர்தலுக்கு முன்னதாக வாக்குக்கேட்டு தமிழகம் வந்த மோடி, இராமநாதபுரத்தில் பேசும் போது மீனவர் பிரச்சினையை தீர்ப்பேன் என்று சொன்னார். 2021ம் ஆண்டும் இதையே சொல்கிறார். 2015 - தாக்குதல் 2016 - தாக்குதல் 2017 - தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். 2018 டிசம்பர் - மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் - படகுகள் சேதம், 2020 அக்டோபர் - இலங்கைக் கடற்படை, மீனவர்களை தாக்கியது. 28 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோ வெளியானது. 2021 ஜனவரி - மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இப்படி தொடர்ச்சியாக தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. "மீனவர்கள் எல்லை மீறி வருகிறார்கள். இந்திய மீனவர்கள் எல்லை மீறி வந்து வடக்கு மாகாண தமிழ் மீனவர்களின் சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள்" என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துணிச்சலாக பேட்டி தருகிறார். ஆனால் நமது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "கட்டுப்பாடுகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டுத்தான் நாம் செயல்பட முடியும்" என்கிறார். இதுதான் மீனவர்களைக் காப்பாற்றுவதா? மீனவர்களை விரட்டுதல், வலைகளை அறுத்தல், படகுகளை தாக்குவது, துப்பாக்கியால் சுடுவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, படகுகளை பறிப்பது என்று அராஜகங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதை தட்டிக்கேட்கும் அரசாக பா.ஜ.க. அரசு இல்லை என்பதுதான் உண்மை. இலங்கை அரசாங்கம் என்பது இந்தியாவை விட சீனாவுக்கு நெருக்கமான அரசாங்கம். இந்தியா ஏதாவது சொன்னால், இலங்கை நாடு சீனாவின் பக்கம் அதிகமாக சாய்ந்து விடும் என்று இந்தியா நினைக்கிறது.
அதனால்தான் பா.ஜ.க.அரசு, இலங்கையை கேள்வி கேட்கத் தயங்குகிறது. சீனாவைக் காட்டி இந்தியாவிடமும், இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் சலுகைகள் பெற்று வாழும் நாடாக இலங்கை மாறிவிட்டது. இலங்கையை தங்களது சுயநலத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் அரசுகளால் ஈழத்தமிழர்க்கோ, இந்திய மீனவர்க்கோ நன்மை செய்ய முடியாது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி இந்திய மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை அங்கு உலர்த்திக் கொள்ளலாம் என்ற உரிமை இருக்கிறது. புனித அந்தோணியார் கோவில் விழாவில் கலந்து கொள்ளலாம் என்ற உரிமை இருக்கிறது.
ஆனால் இலங்கை அரசு, அத்தகைய உரிமையை மறுக்கும் அரசாக இருக்கிறது. பா.ஜ.க. அரசு அத்தகைய உரிமையை நிலைநாட்டும் அரசாக இல்லை. எல்லையைத் தாண்டி வருகிறார்கள், இயந்திரப் படகுகளை பயன்படுத்துகிறார்கள், இந்திய மீனவர்களால் ஈழ மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், இலங்கை மீன்வளத்தை இந்திய மீனவர்கள் எடுத்துச் சென்று விடுகிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலமாக இந்திய மீனவர்களின் கடல் உரிமை பறிக்கப்படுகிறது. ஈழத்தமிழர் நலனை பறித்த இலங்கை அரசு, இந்திய மீனவர் உரிமையைச் சிதைத்து வருகிறது. அதனை மத்திய பா.ஜ.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறதே தவிர, தட்டிக் கேட்கவில்லை. கேட்கவும் முடியாது. கேட்கவும் மாட்டார்கள். இவர்களுக்கு மக்களைவிட எல்லைகள்தான் முக்கியம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!