murasoli thalayangam
“ஜனவரியில் மட்டும் ரூ.4 அதிகரிப்பு” : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு!
பெட்ரோல் விலையைக் கேட்டாலே வயிறு எரிகிறது. 90 ரூபாயாக ஆகிவிட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், விரைவில் ரூ.100 ஆகப் போகிறது. டீசல் விலை 84 ரூபாயை நெருங்குகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தனிப்பட்ட அந்தப் பொருள்களோடு நிற்பது இல்லை.
அத்தோடுசேர்ந்து அனைத்தும் விலை கூடுவதற்கு இவை அடிப்படையாக அமையும். “கொரோனா நெருப்பே அணையாத நிலையில் மேலும் மேலும் விலையேற்றி மக்களை வதைப்பதா?” என்று தி.மு.க. தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுவே மக்கள் கேட்கும் கேள்வி!
கச்சா எண்ணெய் விலை உயரும் போது, பெட்ரோல், டீசல் விலை உயரும். விலை உயரும் போதெல்லாம் இதைத்தான் காரணமாகச் சொல்வார்கள். ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும்போதும் பெட்ரோல், டீசல் விலையை இப்போது குறைப்பது இல்லை. பெட்ரோல், டீசல் விலை கூடியது, கூடியதுதான். இறங்குமுகமே இல்லை!
இதற்கு என்ன காரணம்?
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மையை உடைத்துச் சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால், அரசுக்குப் பணமில்லை என்பதைத்தான் சுற்றி வளைத்துச் சொல்கிறார். “மத்திய அரசு தனது வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்தத் தொகை தேவைப்படுகிறது” என்கிறார் தர்மேந்திர பிரதான்.
அப்படியானால் அரசாங்கத்தை நடத்துவதற்கு பணமில்லை. அதற்காக மக்களிடம் இருந்து இப்படி வசூலிக்கிறார்கள். அப்படி என்ன வளர்ச்சித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்போகிறது என்றும் தெரியவில்லை. அப்படி எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை!
பொதுவாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் என்பது மத்திய - மாநில அரசுகளின் நிதி திரட்டும் குறுக்கு வழியாக மட்டுமே மாறிக் கொண்டு இருப்பதையே பார்க்க முடிகிறது. பெட்ரோலுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசின் வரி என்பது ரூபாய் 10.39 ஆக இருந்தது. இப்போது ரூபாய் 32.98 ஆக உள்ளது. அதாவது 217 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மாநில அரசு போட்ட வரி என்பது 2014 ஆம் ஆண்டு ரூபாய் 11.90 ஆக இருந்தது. இப்போது ரூபாய் 19.90 ஆகிவிட்டது. இது 67 சதவிகித உயர்வு ஆகும். டீசலைப் பொறுத்தவரை, மத்திய அரசு போட்ட வரி 2014 ஆம் ஆண்டு ரூபாய் 4.50 ஆக இருந்தது. இன்று 31.83 ஆகிவிட்டது. அதாவது 607 சதவிகிதம் உயர்ந்துவிட்டது.
மாநில அரசின் வரி 2014 ஆம் ஆண்டு 6.61 ஆக இருந்தது. இப்போது ரூபாய் 11.22 ஆக இருக்கிறது. அதாவது 69.74 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. இதை வைத்துப் பார்க்கும் போது, பெட்ரோல், டீசல் விலை என்பது கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்தது அல்ல. அது மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் குணாம் சத்தைப் பொறுத்ததாக உள்ளதை உணர முடிகிறது. அதனால்தான், “வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுத்திடுக” என்று தி.மு.க. தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
90 ரூபாயில் 53 ரூபாய் மத்திய - மாநில அரசுகளின் வரி என்றால் உண்மையான விலை ஒரு லிட்டர் பெட்ரோல் 37 ரூபாய் தான். இதைவிடக் கொடுமை என்ன இருக்க முடியும்? சுப்பிரமணியசுவாமி தொடர்ந்து சொல்லி வருவது, 40 ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது என்று சொல்லி வருகிறார். “90 ரூபாய் என்பது மிகப்பெரிய சுரண்டல்” என்று அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதாவது பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் சுவாமியே இப்படிச் சொல்கிறார். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு விலையை உயர்த்தியே வருகிறது. அதனால்தான், “மத்திய, மாநில அரசுகளின் வருமானமே இதில்தான் அடங்கி இருக்கிறது” என்று பொருளாதாரம் குறித்து எழுதுபவர்கள் வலியுறுத்திச் சொல்கிறார்கள். எரிபொருள் வரியே அரசின் வருவாய் என்கிறார்கள் அவர்கள். அதாவது மக்களுக்கு அரசு தருவதற்குப் பதிலாக மக்களிடம் இருந்து பறிக்கிறது அரசு.
கொரோனா காலத்தில் வாகனங்கள் ஓடவில்லை. அதனால் அரசுக்கும் வருமானம் இல்லை. இப்போது வண்டிகள் ஓடத் தொடங்கிவிட்டது. அதனால் வரியைக் கூட்டிவிட்டார்கள் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. பெரும்பாலும் இவை இறக்குமதி பொருள்கள் என்பதால் கொரோனா காலத்தில் வரத்தும் குறைந்துவிட்டது என்கிறார்கள்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானும், “கொரோனாவால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பே விலை உயர்வுக்குக் காரணம்” என்று சொல்லி இருக்கிறார். இதே கொரோனா கால பாதிப்பு என்பது மக்களுக்கு இல்லையா? அதை இந்த மத்திய அரசு உணர்ந்ததா? கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் பெட்ரோல் விலை, டீசல் விலையை குறைக்காமல் இருப்பது நியாயமும் இல்லை, தர்மமும் இல்லை.
இந்த ஜனவரியில் மட்டும் 4 ரூபாய் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் கூடும், கூடிக் கொண்டே போகும் என்கிறார்கள். இது மக்கள் மீது மத்திய, மாநில அரசு நடத்தும் தாக்குதல். பொருளாதாரத் தாக்குதல். பெட்ரோல் ஊற்றாமல் வயிறு எரிகிறது. ஆனால் மத்திய அரசு ஏதேதோ காரணம் சொல்கிறது. நீலிக்கண்ணீர் வடிக்கிறது. பெட்ரோலுக்கு கண்ணீர் தீர்வாகாது!
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!