murasoli thalayangam
“தமிழகத்தைச் சூழ்ந்த அ.தி.மு.க என்னும் இருளுக்கு இதுவே கடைசியாக இருளாக இருக்கட்டும்”: முரசொலி தலையங்கம்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையை திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்திருக்கிறது. அதுமட்டுமல்ல; இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரையும் புறக்கணித்திருக்கிறது. சட்டமன்றத்தில் இனி பேசுவதற்கு எதுவுமில்லை, மக்கள் மன்றத்தில் பேசிக் கொள்கிறோம் என்று தி.மு.க தலைவர் அறிவித்துள்ளார்.
இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கிறது. இந்த ஆட்சியின் காலம் முடியப்போகிறது. அ.தி.மு.க.வின் காலம் முடியப் போகிறது. இந்த நிலையில், இந்த அரசை ஆளாத ஆளுநர், இவர்கள் எழுதிக் கொடுத்ததைப் படிக்கப்போகிறார். என்ன சொல்லிவிடப் போகிறார்? அதற்குப் பதில் அளித்தாலும் அவராலும் எதுவும் செய்ய முடியாது. இவர்களாலும் எதுவும் செய்ய முடியாது!
இதுவரை திருந்தாதவர்கள் - இனியும் திருந்தவா போகிறார்கள்? அதனால் சட்டமன்றத்தில் இனி பேசுவது கால விரையம்! டைம் வேஸ்ட்! கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அன்று அ.தி.மு.க அரசின் மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மேதகு ஆளுநர் அவர்களிடம் தி.மு.க. தலைவர் அளித்தார். அவர் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோரைக் காப்பாற்றும் வகையில் ஆளுநரின் நடவடிக்கை உள்ளது. எனவேதான் ஆளுநர் உரையைப் புறக்கணித்தோம் என்று தி.மு.க. தலைவர் சொல்லி இருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் போட்டு அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அது குறித்து இதுவரை முடிவெடுக்காமல் ஆளுநர் மெத்தனமாக இருக்கிறார். அதைக் கண்டித்தும் அவர் உரையைப் புறக்கணித்தோம் என்றும் சொல்லி இருக்கிறார்.
அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் ஆளுநருக்கு முழு திருப்தி இல்லை என்றால், அவர்கள் மீதான ஊழல் புகார்களை ஆளுநர் விசாரித்திருக்க வேண்டும்; அதனை அவர் செய்யவில்லை. தி.மு.க. கொடுத்த மனுக்கள் மீது அவர் முடிவெடுக்காமல் இருப்பதே, அந்த ஊழலுக்கு அவரும் உடந்தையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அ.தி.மு.க. அரசைக் கட்டுப்படுத்த, கேள்வி கேட்க அவர் தயங்குவது ஏன்? அல்லது, அவர் கேள்வி கேட்க நினைக்கிறார், ஆனால் மத்திய பா.ஜ.க மேலிடம் அவரைக் செயல்பட விடாமல் தடுக்கிறதா என்பதும் தெரியவில்லை.
பா.ஜ.க.வினரில் ஒன்றிரண்டு பேராவது சட்டசபைக்குள் செல்ல அ.தி.மு.க.வின் தயவு தேவை என்பதற்காக பா.ஜ.க. தலைமை இப்படி மவுனம் காக்கச் சொல்கிறதா? தங்களது அரசியல் சுயநலத்துக்காக தமிழகம் எத்தகைய ஊழல் வேட்டைக்காடாக மாறினாலும் பரவாயில்லை என்று பா.ஜ.க நினைக்கிறதா? ஆளுநரின் மவுனம் இத்தகைய கேள்வியைத்தான் எழுப்புகிறது.
ஏழுபேர் விடுதலை என்பது அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அல்லது, அதில் கேள்விகள் இருக்குமானால் அந்தக் கேள்விகளை தமிழக அரசை நோக்கி எழுப்பி இருக்க வேண்டும். இவை இரண்டையும் செய்யாமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார் ஆளுநர்.
ஏழுபேர் விடுதலையில் ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் சொல்லிவிட்டது. மாநில அரசும் சொல்லி விட்டது. உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்திவிட்டது. இதற்குப் பிறகும் ஆளுநர் கையை கட்டி வைத்திருப்பது யார்? இதனை ஆளுநர் சொல்வாரா? இத்தகைய ஆளுமைத் திறனற்ற ஆளுநர் உரை வாசித்து என்ன செய்யப் போகிறார்?
கேடு கெட்ட இந்த ஊழல் அரசுக்கு முக மூடியாக இருந்ததைத் தவிர, ஆளுநரின் சாதனை என்று எதுவும் இல்லை! இந்த அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மக்கள் விரோத அரசு. முழுக்க முழுக்க ஊழல் அரசு. ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு இது. அ.தி.மு.க.வைப் படுதோல்வி அடையச் செய்ய தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை அடைந்தது. அ.தி.மு.க. கூட்டணி வாங்கிய வாக்குகளைவிட தி.மு.க. கூட்டணி ஒரு கோடி வாக்குகளை கூடுதலாகப் பெற்றது.
அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றிய அரசு இது.அனைத்துத் துறையையும் சீரழித்த அரசு இது. நிர்வாகம் நிர்மூலம் ஆகிவிட்டது. நிதி நிர்வாகம் சீரழிந்துவிட்டது. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கொள்ளையடித்துள்ள பணத்தை வைத்து அரசாங்கம் ஒரு பட்ஜெட் போடலாம். அந்தளவுக்கு இந்தியாவில் ஊழல் மலிந்த மாநிலமாக தமிழகத்தைச் சீரழித்துவிட்டார்கள்.
இந்தச் சீரழிவை மறைக்க அரசாங்கப் பணத்தை எடுத்து தனது சுயநல விளம்பரங்களைச் செய்து கொள்கிறார் முதலமைச்சர். போலி விளம்பர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இதனை தமிழக ஆளுநர் முதலில் உணர வேண்டும். உரைமீது கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, ‘வெளிநடப்பு செய்ய வேண்டுமனால் செய்து கொள்ளுங்கள்’ என்று ஆளுநர் சொன்னது ஜனநாயக மரபு ஆகாது. அப்படியானால் எதிர்க்கட்சிகளே தேவையில்லை என்று அவர் நினைக்கிறாரா? “இது கடைசி பட்ஜெட்” என்று ஆளுநர் சொன்னதை மட்டும் வரவேற்பதாக தி.மு.க. தலைவர் அளித்த கிண்டலான விமர்சனம் அர்த்தம் உள்ளது. தமிழகத்தைச் சூழ்ந்த இருளுக்கு இதுவே கடைசியாக இருக்கட்டும். விரைவில் ஒளி சூழட்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!