murasoli thalayangam

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்ட வெற்றி முரசம் - முரசொலி தலையங்கம்!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜன.2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆளும் அ.தி.மு.கவை தோற்கடித்து பெரும்பாலான இடங்களில் வென்றிருக்கிறது தி.மு.க. அ.தி.மு.க-வின் அதிகார பலத்தை நேருக்கு நேர் சந்தித்து எதிர்த்து வெற்றியை ஈட்டிருக்கிறது தி.மு.க.

பாதாளம் வரை பாய்ந்த அதன் பணபலத்தை முறியடித்து முன்னேறி இருக்கிறது தி.மு.க. அ.தி.முக எந்தக் கோலம் தாங்கினாலும் அதற்கேற்ற எதிர்க்கோலம் தாங்கி தி.மு.க அவர்களை களத்தில் சந்தித்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகராட்சி தேர்தல், மாநகராட்சி தேர்தல்களில் எல்லாம் வாக்காளர்களின் வாக்களிக்கும் போக்குகளும், தன்மைகளும் வேறுபாடுடையவை என்பது உண்மையே.

அடுத்தகட்டமாக நகர்ப்புறங்களுக்கும், தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்ட வேண்டும். உடனடியாகத் தேர்தல் நடக்குமா? ஆணையர் தேதி அறிவிக்கப்படும் என்கிறார். ஆனால், அதே நேரத்தில் நீதிமன்றம் சென்று கால அவகாசம் கேட்கக் கூடும் என்றும் செய்திகள் வெளி வருகின்றன. அதையும் நாம் கண்காணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாம் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் பெற்ற முதற்கட்ட வெற்றி என்பது மிக எளிதாகப் பெறவில்லை. ஆனால், மிக எளிதாக அதிக எண்ணிக்கையில் பெற்றிருக்க வேண்டிய வெற்றியை அரசு நிர்வாகத்தைக் கையகப்படுத்தி அ.தி.மு.க தனதாக்கிக் கொண்டுவிட்டது. எப்படி இருப்பினும் தடைக்கற்களைத் தூளாக்கி 2021-ம் ஆண்டு தேர்தலில் நாம் பெற இருக்கிற வெற்றிக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முரசைக் கொட்டிவிட்டது.